

ரிசர்வ் வங்கி வெளியிடவுள்ள நிதி கொள்கை குறித்த எதிர்பார்ப்பால் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் தொடர்ந்து செவ்வாய்க்கிழமையன்றும் சரிவைக் கண்டது.
கடந்த மூன்று மாதங்களில் முதல் முறையாக மே மாதத்தில் இந்திய சேவை துறை நடவடிக்கைகள் பின்னடைவைச் சந்தித்ததாக வெளியான புள்ளிவிவரங்கள், ரிசர்வ் வங்கி புதன்கிழமை (ஜூன் 6) வெளியிடவுள்ள நிதி கொள்கையில் வட்டி விகிதம் குறித்த எதிர்பார்ப்பு ஆகியவை பங்குச் சந்தைகளில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தின. இவற்றைக் கருத்தில் கொண்டு முதலீட்டாளர்கள் மிகுந்த முன்னெச்சரிக்கை உணர்வுடன் பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டனர்.
குறிப்பாக, ரியல் எஸ்டேட், வங்கி உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளை லாப நோக்கம் கருதி முதலீட்டாளர்கள் விற்பனை செய்தனர்.
மும்பை பங்குச் சந்தையில், தொலைத் தொடர்புத் துறை குறியீட்டெண் 3.08 சதவீதம் வீழ்ச்சி கண்டது. பொறியியல் சாதனங்கள் 1.96 சதவீதமும், உள்கட்டமைப்பு 1.72 சதவீதமும், தொழில்நுட்பம் 1.58 சதவீதமும், தகவல் தொழில்நுட்பம் 1.52 சதவீதமும், மருந்து 1.40 சதவீதமும், நுகர்வோர் சாதனங்கள் துறை குறியீட்டெண் 1.38 சதவீதமும் சரிந்தன. அதேசமயம், எண்ணெய்-எரிவாயு துறை குறியீட்டெண் 0.10 சதவீதம் உயர்வைக் கண்டது.
அதிகபட்சமாக எல் & டி துறை பங்குகளின் விலை 1.93 சதவீதமும், டாக்டர் ரெட்டீஸ் 1.87 சதவீதமும், யெஸ் வங்கி 1.84 சதவீதமும், பவர் கிரிட் பங்கின் விலை 1.69 சதவீதமும் குறைந்தன.
அதேநேரம், அதிக தேவை காணப்பட்டதையடுத்து ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கின் விலை 0.90 சதவீதமும், டாடா ஸ்டீல் 0.88 சதவீதமும், ஹெச்டிஎஃப்சி 0.78 சதவீதமும் உயர்ந்தன.
மும்பை பங்குச் சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 108 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 34,903 புள்ளிகளில் நிலைத்தது.
தேசிய பங்குச் சந்தையில் நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 35 புள்ளிகள் சரிந்து 10,593 புள்ளிகளில் நிலைத்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.