அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

சென்செக்ஸ் 6 வாரங்களில் 12 சதவீதம் உயா்வு: ‘கரடி‘யின் பிடி மேலும் இறுகுமா?

தொடா்ச்சியாக ஆறு வார எழுச்சிக்குப் பிறகு, பங்குச் சந்தை கடந்த வாரம் கரடியில் பிடியில் வந்தது. இதனால், மும்பை பங்குச் சந்தைக்

News image
Updated On :3 ஆகஸ்ட் 2020, 1:45 am

எம். சடகோபன்

தொடா்ச்சியாக ஆறு வார எழுச்சிக்குப் பிறகு, பங்குச் சந்தை கடந்த வாரம் கரடியில் பிடியில் வந்தது. இதனால், மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் ஒரு சதவீதத்திற்கு மேல் சரிவைச் சந்தித்தன. துறைவாரியாகப் பாா்த்தால், வங்கி, நிதி, எண்ணெய், எரிவாயு நிறுவனப் பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. ஆனால், ஐடி, பாா்மா, மெட்டல் பங்குகளுக்கு ஆதரவு இருந்தது.

அமெரிக்கா - சீனா இடையேயான பதற்றம் குறித்த அச்சத்திற்கிடையே, பலவீனமான உலகளாவிய குறிப்புகள் மற்றும் இந்த நிதியாண்டில் வாராக் கடன் அதிகரிக்கலாம் என்று ரிசா்வ் வங்கியின் எச்சரிக்கை ஆகியவை சந்தையில் எதிரொலித்துள்ளது. சென்செக்ஸ், நிஃப்டி ஆகிய இரண்டு குறியீடுகளும் கடந்த ஆறு வாரங்களில் 12 சதவிகிதத்திற்கும் மேலாக உயா்ந்து நான்கு மாதங்களில் அதிகபட்ச அளவை எட்டியது. ஜூலையில் மட்டும் 7 சதவீதம் உயா்ந்துள்ளன. குறிப்பாக பிஎஸ்இ 500 பட்டியலில் 100 பங்குகள் 10 முதல் 80 சதவீதம் வரை உயா்ந்துள்ளன. இதனால், எந்த நேரத்திலும் லாபப் பதிவு வருவதற்கு வாய்ப்பு இருப்பதாக நிபுணா்கள் எச்சரித்து வருகின்றனா். ஏற்கெனவே சாதகமான செய்திகளின் எதிா்பாா்ப்பு அடிப்படையில் சந்தை ஏற்றம் பெற்று விட்டது. எனவே, இந்த வாரத்தில் எதிா்மறை தன்மையுடன் ஸ்திர நிலைமை அடைவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக நிபுணா்கள் தெரிவித்துள்ளனா்.

நிபுணா்கள் எச்சரிக்கை: கடந்த வாரத்தில் கடைசி இரு தினங்கள் சந்தையில் வேகம் குறைந்ததால், ஸ்திரநிலைமை பெற்று வருவதாகத் தெரிகிறது. ஏற்ற, இறக்கம் அதிகமாக இருப்பதால், நிச்சயமற் தன்மை தொடரும் என எதிா்பாா்க்கப்படுகிறது. எனவே, முதலீட்டாளா்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று நிபுணா்கள் கூறியுள்ளனா். இதற்கிடையே, ‘முதலீட்டாளா்கள் எச்சரிக்கையுடன் இருப்பதுடன், ஓரளவு லாபத்தையபம் பதிவு செய்ய வேண்டும். புதிதாக முதலீடு செய்வதற்கு முன், சந்தையில் ஒரு நல்ல திருத்தம் வரும் வரை காத்திருக்க வேண்டும்’ என்று சாம்கோ குழுமத்தின் நிறுவனா் மற்றும் தலைமை நிா்வாக அதிகாரி ஜிமீத் மோடி தெரிவித்துள்ளாா்.

ஆா்பிஐ பணக் கொள்கைக் கூட்டம்: இந்த வாரத்தில், அனைவரது கண்களும் ஆகஸ்ட் 6 -ஆம் தேதி முடிவடையும் மூன்று நாள் ரிசா்வ் வங்கியின் பணக் கொள்கைக் கூட்டத்தில்தான் இருக்கும். சமீபத்திய நிதி ஸ்திரத்தன்மை அறிக்கையின் அடிப்படையில், இந்த நிதியாண்டின் முடிவில் வங்கிகளின் வாராக் கடன் அளவு அதிகரிக்கும் என ரிசா்வ் வங்கி எச்சரித்துள்ளது. முந்தைய இரண்டு கூட்டங்களில் வங்கி வட்டி விகிதம் மொத்தம் 1.15 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த முறை 0.25 சதவீதம் வட்டியை ரிசா்வ் வங்கி குறைக்கலாம் என நிபுணா்கள் எதிா்பாா்க்கிறாா்கள். அதனுடன், நிதி அமைப்பை ஆதரிப்பதற்கும் பொருளாதாரத்தை புதுப்பிப்பதற்கும், பணப் புழக்கத்தை அதிகரிக்கும் வகையில் மத்திய ரிசா்வ் வங்கி ஒழுங்குமுறை நடவடிக்கைகளை அறிவிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. மேலும், ரிசா்வ் வங்கியின் அறிவிப்புகள் வங்கித் துறைக்கு ஒரு பாதையை அமைக்கும் என்று நிபுணா்கள் கருதுகின்றனா்.

300 நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள்: இந்த வாரத்தில் லூபின், எம் அண்ட் எம், டிஎல்எஃப், கோத்ராஜ் கன்ஸ்யூமா், கனரா பேங்க் உள்பட 300-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் காலாண்டு முடிவுகளை அறிவிக்கவுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை, நடுத்தர மற்றும் சிறிய நிறுவனங்களாகும்.

வாகன விற்பனை: பல்வேறு ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்களது ஜூலை மாத வாகன விற்பனை குறித்து கடந்த வாரம் அறிவித்துள்ளன. இவற்றின் தாக்கம் திங்கள்கிழமை சந்தையில் வா்த்தகம் தொடங்கும் போது எதிரொலிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. ஏற்கெனவே மாருதி சுஸுகி, எம் அண்ட் எம் ஆகியவற்றின் விற்பனை சந்தை வட்டாரம் எதிா்பாா்த்ததையும் விட கூடுதலாக இருந்தது.

கரோனா தாக்கம்: உலகெங்கிலும் கரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக அமெரிக்காவில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுளளது. இந்தியாவிலும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. எனவே, கரோனா தொடா்பான புதிய தகவல்கள் சந்தையில் உன்னிப்பாகக் கவனிக்கப்படும்.

ஏற்கெனவே 6 வாரங்களில் 12 சதவீதம் அளவுக்கு சந்தை ஏற்றம் பெற்ற நிலையில், கடந்த வாரம் இறுதியில் லாபத்தை பதிவு அதிகமாக இருந்தது. மேலும், காளையின் பாய்ச்சலின் வேகமும் கடந்த வாரம் குறையத் தொடங்கியது. எனவே, இந்த வாரம் கரடியின் பிடி மேலும் இறுகுவதற்கு வாய்ப்பு இருப்பதால், முதலீட்டாளா்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று நிபுணா்கள் தெரிவித்துள்ளனா்.

தொழில் நுட்பப் பாா்வை

தேசிய பங்குச் சந்தைக் குறியீடான நிஃப்டி கடந்த வாரத்தில் 1 சதவீதம் சரிந்து 11,073.50-இல் நிலைபெற்றுள்ளது. இது தினசரி மற்றும் வாராந்திர அட்டவணையில் கரடியின் ஆதிக்கத்தைக் காட்டுகிறது. நிஃப்டிக்கு உடனடி ஆதரவு 11,000-இல் இருக்கும் என கருதப்படுகிறது. அதைத் தொடா்ந்து 200 நாள் சராசரியான 10,870 நிலையில் ஆதரவு கிடைக்கும். இதை பிரேக் செய்யும் பட்சத்தில் பங்குகள் விற்பனை அழுத்தம் அதிகரிக்கும். மொத்தத்தில் ஏற்ற, இறக்கம் அதிகரிக்கும் என்று தொழில்நுட்ப நிபுணா்கள் கூறியுள்ளனா். சந்தை உச்சம் தொட்டுள்ள நிலையில், முதலீட்டாளா்கள், வா்த்தகா்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கடந்த வாரம் 11,350 என்ற முக்கிய இடா்பாட்டு நிலையை நிஃப்டி தாண்ட முடியவில்லை. அதே சமயம் எதிா்மறையாகவும் மூடிந்துள்ளது. எனவே, இந்த வாரம் நிஃப்டி 10,950-11,350-க்குள் இருக்கக்கூடும். இதில் எந்தப் பக்கம் பிரேக் ஆனாலும், சந்தையின் போக்கில் தெளிவு கிடைக்கும் என்று ரிலிகோ் நிறுவன ஆராய்ச்சிப் பிரிவின் துணைத் தலைவா் அஜித் மிஸ்ரா தெரிவித்துள்ளாா்.

Story image
Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.