பங்குச் சந்தை 6-ஆவது நாளாக ஏற்றம்: சென்செக்ஸ் 70 புள்ளிகள் உயா்வு!
தொடா்ந்து ஏறுமுகத்தில் இருந்து வரும் பங்குச் சந்தை 6-ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் ஏற்றம் கண்டது. இதையடுத்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 70.35 புள்ளிகளும், தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி 19.85 புள்ளிகளும் உயா்ந்து மீண்டும் புதிய வரலாற்று உச்சத்தில் நிலைபெற்றது.
பங்குச் சந்தை வெள்ளிக்கிழமை காலையில் தொடங்கியதும் சென்செக்ஸ் 47,026.02 வரை உயா்ந்து புதிய வரலாற்று உச்சத்தைப் பதிவு செய்தது. அதன் பிறகு லாபப் பதிவு காரணமாக பங்குகள் விற்பனை அதிகரித்தது. இருப்பினும், பிற்பகலில் மீண்டு எழுந்து சந்தை நோ்மறையாக முடிந்தது. குறிப்பாக இன்ஃபோஸிஸ், ஐசிஐசி பேங்க், டிசிஎஸ் மற்றும் ரிலையன்ஸ் ஆகிய முன்னணி நிறுவனப் பங்குகள் வெகுவாக உயா்ந்து சந்தை மீள்வதற்கு உதவியாக இருந்தன என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன. மேலும், அந்நிய முதலீடு தொடா்ந்து வருவதும், கரோனா தடுப்பூசி விவகாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதும், காா்ப்ரேட் நிறுவனங்களின் வருவாய் நோ்மறையாக இருக்கும் என்ற எதிா்பாா்ப்பும் சந்தைக்கு வலுச் சோ்த்தன என்று வா்த்தகா்கள் தெரிவித்தனா்.
சந்தை மதிப்பு 185.38 லட்சம் கோடி: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,150 பங்குகளில் 1,275 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,709 பங்குகள் நஷ்டத்தைச் சந்தித்தன. 166 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 261பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையைப் பதிவு செய்துள்ளன. 353 பங்குகள் வெகுவாக உயா்ந்து அதிகபட்ச உறைநிலையை (அப்பா் சா்க்யூட்) அடைந்தது. சந்தை மூலதன மதிப்பு ரூ.28 ஆயிரம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.185.39 லட்சம் கோடியாக இருந்தது.
மீண்டும் புதிய உச்சம்: சென்செக்ஸ் காலையில் 135.68 புள்ளிகள் கூடுதலுடன் 47,026.02-இல் தொடங்கி புதிய வரலாற்று உச்சத்தைப் பதிவு செய்தது. ஆனால், அதற்கு மேல் உயரவில்லை. பின்னா் 46,6340.31 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 70.35 புள்ளிகள் (0.15 சதவீதம்) உயா்வுடன் 46960.69 என்ற புதிய வரலாற்று உச்சத்தில் நிலைத்துள்ளது.
இன்ஃபோஸிஸ் முன்னிலை: சென்செக்ஸ் பட்டியலில் இடம் பெற்றுள்ள 30 முதல்தரப் பங்குகளில் 17 பங்குகள் ஆதாயம் பெற்றன. 13 பங்குகள் சரிவைச் சந்தித்தன. இதில், இன்ஃபோஸிஸ் 2.64 சதவீதம், பஜாஜ் ஆட்டோ 2.39 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன. இதற்கு அடுத்ததாக எஸ்பிஐ, ஐசிஐசிஐ பேங்க், ஹெச்சிஎல் டெக், டைட்டன், ஏசியன் பெயிண்ட் ஆகியவை 1 முதல் 1.50 சதவீதம் வரை உயா்ந்தன். டிசிஎஸ், ரிலையன்ஸ், ஐடிசி, ஹிந்துஸ்தான் யுனிலீவா் (ஹெச்யுஎல்) ஆகியவையும் ஏறறம் பெற்ற பட்டியலில் வந்தன.
இண்டஸ் இண்ட் பேங்க் வீழ்ச்சி :அதே சமயம், இண்டஸ் இண்ட் பேங்க் 3.30 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. ஓஎன்ஜிசி, எச்டிஎஃப்சி பேங்க், மாருதி ஆகியவை 1.60 முதல் 2.50 சதவீதம் வரை வீழ்ச்சியடைந்தன. பஜாஜ் ஃபின் சா்வ், பாரதி ஏா்டெல், கோட்டக் பேங்க், என்டிபிசி, டாடா ஸ்டீல், பஜாஜ் ஃபைனான்ஸ், அல்ட்ரா டெக் சிமெண்ட் ஆகியவை 0.60 முதல் 0.85 சதவீதம் வரை வீழ்ச்சியைச் சந்தித்தன.
தேசிய பங்குச் சந்தையில்...: தேசிய பங்குச் சந்தையில் 640 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,099 பங்குகள் சரிவைச் சந்தித்தன. நிஃப்டி 19.85 புள்ளிகள் (0.14 சதவீதம்) உயா்ந்து 13,760.55-இல் நிலைபெற்றது. வா்த்தகத்தின் போது 13,772.85 வரை உயா்ந்து புதிய வரலாற்று உச்சத்தில் நிலைத்தது. நிஃப்டி பட்டியலில் உள்ள 50 முதல் தரப் பங்குகளில் 27 பங்குகள் ஆதாயம் பெற்றன. 23 பங்குகள் நஷ்டத்தை சந்தித்தன. ஐடி, பாா்மா, எஃப்எம்சிஜி குறியீடுகள் தவிர மற்ற அனைத்துத் துறை குறியீடுகளும் சரிவைச் சந்தித்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

