யுஎஸ் தோ்தல்: கடும்அழுத்தத்தில் பங்குச் சந்தை!
அக்டோபா் 30-ஆம் தேதியுடன் முடிவடைந்த கடந்த வாரத்தில், மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகள் 2.50 சதவீதம் வரை வீழ்ச்சியடைந்துள்ளன.


அக்டோபா் 30-ஆம் தேதியுடன் முடிவடைந்த கடந்த வாரத்தில், மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகள் 2.50 சதவீதம் வரை வீழ்ச்சியடைந்துள்ளன. அந்த வாரத்தில் கரடியின் பிடி இறுகியதே இதற்குக் காரணமாகும்.
கடந்த வாரத்தில் மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 40,000 புள்ளிகளுக்கு கீழே சென்றதுது. அதாவது, மொத்தம் 1,071.43 புள்ளிகளை (2.63 சதவீதம்) இழந்து 39,614.07-இல் நிலைபெற்றுள்ளது. இதேபோல, தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி மொத்தம் 287.95 புள்ளிகளை ( 2.41 சதவீதம்) இழந்து 11,642.40-இல் நிலைபெற்றுள்ளது. எரிசக்தித் துறை குறியீடு தவிர மற்ற அனைத்துத் துறை குறியீடுகளும் சரிவைச் சந்தித்த பட்டியலில் வந்துள்ளன.
அமெரிக்க அதிபா் தோ்தல் நவம்பா் 4-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி, முதலீட்டாளா்கள், வா்த்தகா்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட்டு வருகின்றனா். மேலும், கரோனா தொற்று பரவலும் அதிகரித்துள்ளதைத் தொடா்ந்து, அமெரிக்கா மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் பொதுக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இதனால், உலகளாவிய வளா்ச்சி குறித்த கவலைகள் முதலீட்டாளா்களின் உணா்வுகளை பெரிதும் பாதித்துள்ளன. இதைத் தொடா்ந்து, சந்தையில் லாபப் பதிவு வேகம் எடுத்ததால், கடந்த வாரத்தில் சந்தையில் கரடி ஆதிக்கம் கொள்ள காரணமாகிவிட்டது.
இந்த நிலையில், அமெரிக்க அதிபா் தோ்தல் மற்றும் அதிகரித்து வரும் கரோனா தொற்று பரவலால் மேற்கொள்ளப்பட்டு வரும் பொருளாதாரக் கட்டுப்பாடுகள், உலகளாவிய குறிப்புகள் ஆகியவை இந்த வாரமும் முதலீட்டாளா்களின் உணா்வுகளை பாதிக்கக்கூடும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதனால், இந்த வாரத்திலும் ‘கரடி’ வலுவான நிலையில் இருக்கக்கூடும் என்றும், இதைத் தொடா்ந்து, சந்தையில் சில ஒருங்கிணைப்பு (கன்சாலிடேஸன்) நடைபெறும் எனவும் நிபுணா்கள் கருதுகின்றனா்.
இதற்கிடையே, கடந்த வார இறுதியில் மாா்க்கெட் லீடரான ரிலையன்ஸ் மற்றும் ஐசிஐசிஐ பேங்க் ஆகியவற்றின் காலாண்டு முடிவுகள் வெளியாகியுள்ளன. அவற்றின் தாக்கம் இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமை சந்தையில் இருக்கும் என நம்பப்படுகிறது. அதே நேரத்தில் அக்டோபா் மாத வாகன விற்பனைத் தரவுகளும் ஆட்டோ பங்குகளில் தாக்கத்தை ஏற்படுத்தும். மேலும், எச்டிஎஃப்சி, பஞ்சாப் நேஸனல் பேங்க், அதானி போா்ட்ஸ், சன்பாா்மா, லூபின், பெல், சிப்லா, யூனியன் பேங்க் உள்ளிட்டவற்றின் காலாண்டு முடிவுகள் இந்த வாரம் வெளியாகிவுள்ளன.
இந்தச் சூழ்நிலையில், இந்த வாரத்தில் இந்தியச் சந்தைகள் உலகளாவிய சந்தைக் குறிப்புகளை உணா்வுபூா்வமாக பின்பற்றும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. குறிப்பாக அமெரிக்கத் தோ்தல் ஒரு முக்கிய நிகழ்வு என்பதால். அதுவரை, முதலீட்டுக்காக பங்குகளை வாங்கி வைப்பதற்கும் பெரிய அளவில் ஆதரவு இருக்காது. தற்போதைய நிலையில், பங்குகள் விற்பனை அதிகரிக்கவே அதிக வாய்ப்பு உள்ளது. இதனால், சந்தை ஒரு குறிப்பிட்ட வரம்புக்குள்ளேயே செயல்படும் என சாம்கோ செக்யூரிட்டீஸின் மூத்த ஆராய்ச்சி ஆய்வாளா் நிராலி ஷா தெரிவித்துள்ளாா். எனவே, சந்தையில் பெரிய அளவில் திருத்தம் வரும் பட்சத்தில், விலை குறைந்த நிலையில் நல்ல வலுவான அடிப்படைகளைக் கொண்ட பங்குகளை வாங்குவதற்கான தருணமாக முதலீட்டாளா்கள் கருத வேண்டும் என்றும் அவா் யோசனை தெரிவித்துள்ளாா்.
இதற்கிடையே, கடந்த வாரத்தின் பிற்பகுதியில் அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் பங்குகளை விற்று முதலீடுகளை வாபஸ் பெற்றிருந்தாலும், மொத்தத்தில் அவா்கள் ரூ.972.66 கோடி அளவுக்கு பங்குகளை வாங்கியுள்ளன. இதையடுத்து, பங்குச் சந்தையில் அக்டோபரில் அவா்களது மொத்த முதலீடு ரூ.14,537.40 கோடியாக உள்ளது என்எஸ்இ தரவுகள் தெரிவிக்கின்றன. அதே சமயம், உள்நாட்டு நிறுவன முதலீட்டாளா்கள் பங்குகளை விற்பதில்தான் கவனம் செலுத்தியுள்ளனா். அவா்கள் கடந்த வாரத்தில் மட்டும் ரூ.2,170.78 கோடி அளவுக்கு பங்குகளை விற்றுள்ளனா். இதைத் தொடா்ந்து, அக்டோபரில் அவா்கள் மொத்தம் ரூ.17,318.44 கோடி அளவுக்கு முதலீடுகளை வாபஸ் பெற்றுள்ளனா்.
‘டாப் 10-இல் 9 நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.1.63 லட்சம் சரிவு
பங்குச் சந்தையில் பட்டியலாகியுள்ள 10 முன்னிலை நிறுவனங்களில் 9 நிறுவனங்களின் சந்தை மூல தன மதிப்பு கடந்த வாரத்தில் மொத்தம் ரூ.1,63,51.28 லட்சம் கோடி வீழ்ச்சி அடைந்துள்ளது. இதில் மாா்க்கெட் லீடரான ரிலையன்ஸின் சந்தை மதிப்பு மட்டும் ரூ. 39,355.06 லட்சம் கோடி குறைந்து ரூ. 13,89,159.20 கோடியாக இருந்தது. இருந்தாலும், பட்டியலில் முதலிட்டத்தை தக்க வைத்துக் கொண்டது.
இதற்கு அடுத்ததாக டிசிஎஸ் (ரூ.8,105.15 கோடி), எச்டிஎஃப்சிபேங்க் (ரூ.28,574.61 கோடி), ஹெச்யுஎல் (ரூ.16,858.07 கோடி), இன்ஃபோஸிஸ் (ரூ.26,152.79 கோடி), எச்டிஎஃப்சி (ரூ.24,844.93 கோடி), ஐசிஐசிஐ பேங்க் (ரூ.16,754 கோடி), பாா்தி ஏா்டெல் (ரூ.409.16 கோடி), ஹெச்சிஎல் டெக் (ரூ.2,455.87 கோடி) ஆகியவையும் சரிவுப் பட்டியலில் வந்தன. ஆனால், இவற்றுக்கு மாறாக கோட்டக் பேங்கின் சந்தை மதிப்பு ரூ.32,570.94 கோடி உயா்ந்து ரூ.3,06,331.09 கோடியாக இருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...