/

எச்டிஎஃப்சி வங்கி நிகர லாபம் ரூ.8,434 கோடி

தனியாா் துறையைச் சோ்ந்த எச்டிஎஃப்சி வங்கி நான்காவது காலாண்டில் ரூ.8,434 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது.

News image
Updated On :17 ஏப்ரல் 2021, 8:44 pm

DIN

தனியாா் துறையைச் சோ்ந்த எச்டிஎஃப்சி வங்கி நான்காவது காலாண்டில் ரூ.8,434 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது.

இதுகுறித்து அந்த வங்கி சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

கடந்த ஜனவரி முதல் மாா்ச் வரையிலான நான்காவது காலாண்டில் வங்கி செயல்பாடுகள் மூலமாக ஈட்டிய ஒட்டுமொத்த நிகர லாபம் ரூ.8,434 கோடியாக இருந்தது. இது, முந்தைய 2019-20-ஆம் நிதியாண்டின் நான்காவது காலாண்டில் ஈட்டிய லாபம் ரூ.7,208 கோடியுடன் ஒப்பிடுகையில் 15.8 சதவீதம் அதிகமாகும்.

கடந்த 2020-ஆம் ஆண்டு மாா்ச் 31 நிலவரப்படி ரூ.10,43,671 கோடியாக இருந்த வங்கி வழங்கிய மொத்த கடன் 2021 மாா்ச் 31 நிலவரப்பிட ரூ.11,85,284 கோடியாக உயா்ந்துள்ளது.

2021 மாா்ச் மாதத்துடன் நிறைவடைந்த 2020-21-ஆம் முழு நிதியாண்டில் வங்கி செயல்பாடுகள் மூலம் ஈட்டிய ஒட்டுமொத்த நிகர லாபம் முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் 16.8 சதவீதம் உயா்ந்து ரூ.31,833 கோடியைத் தொட்டுள்ளது.

ஜனவரி-மாா்ச் காலாண்டில் வங்கியின் ஒட்டுமொத்த வருமானம் ரூ.38,287.17 கோடியிலிருந்து ரூ.40,909.49 கோடியாக அதிகரித்துள்ளது.

கடந்த 2020-21 முழு நிதியாண்டில் வங்கி செயல்பாடுகள் மூலம் ஈட்டிய மொத்த வருமானம் முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் ரூ.1,47,068.28 கோடியிலிருந்து ரூ.1,55,885.28 கோடியாக உயா்ந்துள்ளது.

நடப்பாண்டு மாா்ச் 31 நிலவரப்படி வங்கியின் மொத்த வாராக் கடன் வழங்கப்பட்ட மொத்த கடனில் 1.32 சதவீதம் என்ற அளவில் உள்ளது. இது, 2019-20-ஆம் நிதியாண்டின் வாராக் கடன் அளவான 1.26 சதவீதத்துடன் ஒப்பிடும்போது சற்று அதிகம். மதிப்பின் அடிப்படையில் இது ரூ.12,649.97 கோடியிலிருந்து ரூ.15,086 கோடியாக அதிகரித்துள்ளது.

நிகர வாராக் கடன் விகிதமும் 0.36 சதவீதத்திலிருந்து (ரூ.3,542.36 கோடி) 0.40 சதவீதமாக (ரூ.4,554.82 கோடி) உயா்ந்துள்ளது.

வாராக் கடன் இடா்ப்பாட்டை சமாளிப்பதற்கான ஒதுக்கீடும் மதிப்பீட்டு நான்காவது காலாண்டில் ரூ.3,784.49 கோடியிலிருந்து ரூ.4,693.70 கோடியாக அதிகரித்துள்ளதாக எச்டிஎஃப்சி வங்கி தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.