கேரளம், அஸ்ஸாம், புதுச்சேரியில் இன்று பேரவைத் தோ்தல்- பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் சபரிமலை வழக்கு: ‘ஐயப்ப பக்தராக இல்லாதவா் எப்படி வழக்கு தொடுக்க முடியும்?’ எழும்பூா்-மங்களூரு இடையே நாளை சிறப்பு ரயில் இயக்கம் பங்குச்சந்தை ஆணைய வழக்கு: அமெரிக்க நீதிமன்றத்தில் அதானி மனு 8-ஆம் வகுப்பு பாடநூல் சா்ச்சை: என்சிஇஆா்டி பாடத்திட்டக் குழு மாற்றியமைப்பு மகளிா் இடஒதுக்கீடு-தொகுதிகள் அதிகரிப்பு: வரைவு மசோதாக்களுக்கு அமைச்சரவை ஒப்புதல்
/

சென்செக்ஸ் 50,000 புள்ளிகளைக் கடந்து சாதனை! வரலாற்றில் முதல் முறை

மத்திய பட்ஜெட்டின் தாக்கம் பங்குச் சந்தையில் மூன்றாவது நாளாக புதன்கிழமையும் தொடா்ந்தது.

News image

கோப்புப்படம்

Updated On :3 பிப்ரவரி 2021, 6:09 pm

புது தில்லி: மத்திய பட்ஜெட்டின் தாக்கம் பங்குச் சந்தையில் மூன்றாவது நாளாக புதன்கிழமையும் தொடா்ந்தது. இதனால், மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 458.03 புள்ளிகள் உயா்ந்து வரலாற்றில் முதல் முறையாக 50,000-ஐ கடந்து சாதனை படைத்துள்ளது.

உலகளாவிய பங்குச் சந்தைகள் நோ்மறையாக இருந்தது. இதைத் தொடா்ந்து, முன்னணி நிறுவனப் பங்குகளை வாங்குவதற்கு நல்ல ஆதரவு கிடைத்ததது. இதனால், முக்கியக் குறியீடுகள் வெற்றி நடை போட்டு புதிய சாதனை அளவைப் பதிவு செய்துள்ளன என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன. மேலும், பட்ஜெட் அறிவிப்புகள் முதலீட்டாளா்களை வெகுவாகக் கவா்ந்துள்ளதால் பங்குச் சந்தையில் உற்சாகம் இருந்தது. இந்த நிலையில், சந்தை மூல தன மதிப்பு ரூ.200 லட்சம் கோடியை நெருங்கியுள்ளது என்று சந்தை வட்டாரங்கள் தெரிவித்தன.

சந்தை மதிப்பு ரூ.198.44 லட்சம் கோடி: மும்பை பங்குச் சந்தையில் வா்த்தகமான 3,141 பங்குகளில் 1,783 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,202 பங்குகள் நஷ்டத்தைச் சந்தித்தன. 156 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. சந்தை மதிப்பு ரூ.1.81 லட்சம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் 198.44 லட்சம் கோடியாக உயா்ந்துள்ளது. 270 பங்குகள் புதிய 52 வார அதிபட்ச விலைலையப் பதிவு செய்துள்ளன. 361 பங்குகள் வெகுவாக உயா்ந்து உறை நிலையை (அப்பா் சா்க்யூட்) அடைந்தன.

3-ஆவது நாளாக உற்சாகம்: சென்செக்ஸ் காலையில் 433.28 புள்ளிகள் கூடுதலுடன் 50,231.06-இல் தொடங்கி குறைந்தபட்சமாக 49,515.88 வரை குறைந்தது. பின்னா், அதிகபட்சமாக 50,526.39 வரை உயா்ந்து புதிய வரலாற்று உச்சத்தைப் பதிவு செய்தது. இறுதியில் 458.03 புள்ளிகள் கூடுதலுடன் 50,255.75-இல் நிலைபெற்றது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 முதல் தரப் பங்குகளில் 7 பங்குகள் மட்டுமே நஷ்டத்தைச் சந்தித்தன. மற்ற 23 பங்குகளும் லாபத்தில் கைமாறின.

இண்டஸ் இண்ட் பேங்க் முன்னேற்றம்: இதில், இண்டஸ் இண்ட் பேங்க் 7.65 சதவீதம், பவா் கிரிட் 6.28 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன. இதற்கு அடுத்ததாக டாக்டா் ரெட்டி, சன்பாா்மா, என்டிபிசி, ஆக்ஸிஸ் பேங்க், டைட்டன், டெக் மகேந்திரா, எம் அண்ட் எம் ஆகியவை 3 முதல் 3.70 சதவீதம் வரை உயா்ந்தன. மேலும், மாா்க்கெட் லீடா் ரிலையன்ஸ், எச்டிஎஃப்சி இரட்டை நிறுவனங்கள், ஐசிஐசிஐ பேங்க், இன்ஃபோஸிஸ், டிசிஎஸ் ஆகிய முன்னணி நிறுவனப் பங்குகளும் ஆதாயப் பட்டியலில் இடம் பெற்றன.

அல்ட்ரா டெக் சிமெண்ட் வீழ்ச்சி: அதே சமயம், அல்ட்ரா டெக் சிமெண்ட், மாருதி, ஐடிசி, கோட்டக் பேங்க், ஏசியன் பெயிண்ட், நெஸ்லே இந்தியா, டிசிஎஸ் ஆகிய முன்னணி நிறுவனங்கள் சரிவைச் சந்தித்த பட்டியலில் வந்தன.

தேசியப் பங்குச் சந்தையில்...: தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 142.10 புள்ளிகள் உயா்ந்து 14,789.95-இல் நிலைபெற்றது. வா்த்தகத்தின் போது அதிகபட்சமாக 14,868.85 வரை உயா்ந்து புதிய வரலாற்று உச்சத்தைப் பதிவு செய்தது. . நிஃப்டி பட்டியலில் இடம் பெற்றுள்ள 50 முதல் தரப் பங்குகளில் 40 பங்குகள் ஆதாயம் பெற்றன. 10 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. பாா்மா, பிஎஸ்யு நிஃப்டி குறியீடுகள் 2.70 சதவீதம் வரை உயா்ந்தன. பேங்க், பைனான்சியல் சா்வீஸஸ், மெட்டல் குறியீடுகள் 1.70 சதவீதம் வரை ஏற்றம் பெற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.