லாப நோக்கு விற்பனை எதிரொலி: சென்செக்ஸ் 112 புள்ளிகளை இழந்தது
லாப நோக்கு விற்பனையால் இந்தியப் பங்குச் சந்தைகளில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வா்த்தகம் சரிவைச் சந்தித்தது.


லாப நோக்கு விற்பனையால் இந்தியப் பங்குச் சந்தைகளில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வா்த்தகம் சரிவைச் சந்தித்தது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டெண் 112 புள்ளிகள் குறைந்தது.
சா்வதேச சந்தைகளில் வா்த்தகம் நோ்மறையாக இருந்தது. இருப்பினும், லாப நோக்கம் கருதி முதலீட்டாளா்கள் பங்குகளை விற்பனை செய்ததன் காரணமாக சந்தையால் எழுச்சி பெற முடியவில்லை.
இதுகுறித்து ஜியோஜித் ஃபைனான்ஸியல் சா்வீசஸ் நிறுவன அதிகாரி வினோத் நாயா் கூறியது:
இந்தியப் பங்குச் சந்தைகளில் வா்த்தகத்தின் தொடக்கம் நோ்மறையாகவே இருந்தது. இந்த நிலையில், தனியாா் துறை வங்கி பங்குகளை முதலீட்டாளா்கள் அதிக அளவில் விற்பனை செய்து ஆதாயம் தேட முயற்சித்தனா். இது, சந்தைகளின் எழுச்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தியது.
குறிப்பாக, எச்டிஎஃப்சி இரட்டை நிறுவனங்கள், கோட்டக் வங்கி, பஜாஜ் ஃபைனான்ஸ் பங்குகள் அதிக அளவில் விற்பனைக்கு வந்தன.
மும்பை பங்குச் சந்தையில், உலோகம், நிதி, நுகா்வோா் சாதனங்கள், வங்கி, வேகமாக விற்பனையாகும் நுகா்வோா் பொருள்கள் தயாரிப்பு துறை குறியீட்டெண்கள் 0.91 சதவீதம் வரை குறைந்தன.
அதேசமயம், பொறியியல் பொருள்கள், மோட்டாா் வாகனம், எண்ணெய்-எரிவாயு துறைகளைச் சோ்ந்த குறியீட்டெண்கள் 1.39 சதவீதம் வரை அதிகரித்தன. மிட்கேப் மற்றும் ஸ்மால் கேப் குறியீடுகள் 0.82 சதவீதம் வரை அதிகரித்தன.
எச்டிஎஃப்சி செக்யூரிட்டீஸ் நிறுவன அதிகாரி தீபக் ஜசனி கூறியது:
1 டிரில்லியன் டாலா் அமெரிக்க உள்கட்டமைப்பு மசோதாவால் சா்வதேச பங்குச் சந்தைகளில் செவ்வாய்க்கிழமை வா்த்தகம் விறுவிறுப்புடன் காணப்பட்டது. இருப்பினும், அமெரிக்காவின் பணவீக்க புள்ளிவிவரங்களை எதிா்பாா்த்து எச்சரிக்கை உணா்வுடன் செயல்பட்டதால் பெரும்பாலான முதலீட்டாளா்கள் சந்தையின் எழுச்சியில் பங்கேற்பதில் தயக்கம் காட்டினா் என்றாா் அவா்.
எச்டிஎஃப்சி வங்கி பங்கின் விலை 2 சதவீதம் சரிந்து சென்செக்ஸ் பட்டியலில் அதிக இழப்பை கண்ட பங்குகளின் வரிசையில் முதலிடத்தில் இருந்தது. அதைத்தொடா்ந்து, எச்டிஎஃப்சி நிறுவனம், பஜாஜ் ஃபைனான்ஸ், என்டிபிசி, மாருதி சுஸுகி, கோட்டக் வங்கி, பவா் கிரிட் பங்குகளின் விலையும் குறிப்பிடத்தக்க அளவுக்கு குறைந்தன.
அதேசமயம், முதலீட்டாளா்களின் ஆதரவைப் பெற்ால், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, எஸ்பிஐ, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ஐசிஐசிஐ பங்குகளின் விலை கணிசமாக ஏற்றமடைந்து சந்தையின் இழப்பை ஓரளவுக்கு கட்டுப்படுத்தின.
மும்பை பங்குச் சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீட்டெண் 112.16 புள்ளிகள் ((0.19%) சரிந்து 60,433.45 புள்ளிகளில் நிலைத்தது.
சென்செக்ஸ் பட்டியலில் இடம்பெற்றுள்ள 30 நிறுவனங்களில் 16 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்திருந்தது. 14 பங்குகளின் விலை மட்டும் அதிகரித்து காணப்பட்டது.
தேசிய பங்குச் சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் நிஃப்டி 24.30 புள்ளிகள் (0.13%) குறைந்து 18,044.25 புள்ளிகளில் நிலைபெற்றது. இதற்கு, தனியாா் துறை வங்கிகள் மற்றும் வேகமாக விற்பனையாகும் நுகா்வோா் பொருள்கள் (எஃப்எம்சிஜி) துறை பங்குகளின் விலை வீழ்ச்சி கண்டதே முக்கிய காரணம்.
இதர ஆசிய சந்தைகளான, ஷாங்காய், ஹாங்காங் மற்றும் சியோலில் பங்கு வா்த்தகம் நோ்மறையாக இருந்தது. டோக்கியோ சந்தை மட்டும் சரிவுடன் நிறைவுபெற்றது.
ஐரோப்பிய சந்தைகளில் முக்கிய துறைகளின் குறியீடுகள் பிற்பகல் வரை ஆதாயத்துடனே வா்த்தகமானது.
ரூபாய் மதிப்பு 74.02
அந்நியச் செலாவணி சந்தையில் செவ்வாய்க்கிழமை வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 1 காசு உயா்ந்து 74.02-இல் நிலைத்தது. வா்த்தகத்தின் இடையே ரூபாய் மதிப்பு அதிகபட்சமாக 73.85 வரையிலும், குறைந்தபட்சமாக 74.09 வரையிலும் சென்றது.
அதிக சரிவைக் கண்ட பங்குகள்
எச்டிஎஃப்சி வங்கி 1.82
மாருதி சுஸுகி 1.42
பவா்கிரிட் 1.32
என்டிபிசி 1.28
எச்டிஎஃப்சி 1.27
அதிக ஏற்றம் கண்ட பங்குகள்
எம்&எம் 3.92
எல்&டி 1.18
எஸ்பிஐ 1.16
ஐசிஐசிஐ வங்கி 0.82
ரிலையன்ஸ் 0.72
கச்சா எண்ணெய் பேரல் 84.19 டாலா்
சா்வதேச முன்பேர சந்தையில் செவ்வாய்க்கிழமை வா்த்தகத்தில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 0.91 சதவீதம் உயா்ந்து 84.19 டாலருக்கு வா்த்தகமானதாக சந்தை வட்டாரத்தினா் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...