லாபப் பதிவால் தள்ளாட்டம்: சரிவுடன் முடிந்தது சென்செக்ஸ், நிஃப்டி

கடந்த இரண்டு நாள்களாக காளையின் ஆதிக்கத்தில் இருந்து வந்த பங்குச் சந்தை, புதன்கிழமை தள்ளாட்டம் கண்டது. இதையடுத்து, மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 17 புள்ளிகள் குறைந்து
லாபப் பதிவால் தள்ளாட்டம்: சரிவுடன் முடிந்தது சென்செக்ஸ், நிஃப்டி
Updated on
2 min read

கடந்த இரண்டு நாள்களாக காளையின் ஆதிக்கத்தில் இருந்து வந்த பங்குச் சந்தை, புதன்கிழமை தள்ளாட்டம் கண்டது. இதையடுத்து, மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 17 புள்ளிகள் குறைந்து நிலைபெற்றது. தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண் நிஃப்டி 9.80 புள்ளிகள் (0.05 சதவீதம்) குறைந்து 18,122.50-இல் நிலைபெற்றது.
 ஆசியாவில் சியோல், டோக்கியா மற்றும் ஷாங்காய் சந்தைகள் எதிர்மறையாக முடிந்தன. ஆனால், ஹாங்காங் சந்தை ஏற்றம் கண்டது. அதே சமயம், ஐரோப்பிய சந்தைக் குறிப்புகள் கலவையாக இருந்தன. இதைத் தொடர்ந்து, உள்நாட்டுச் சந்தையில் ஏற்ற, இறக்கம் அதிகரித்து காணப்பட்டது. மேலும், தொடர்ந்து 2 நாள்களாக சந்தை உயர்ந்திருந்த நிலையில், லாபப் பதிவு இருந்து வந்தது. இதனால், சந்தை சிறிதளவு சரிவுடன் நிறைவடைந்தது என்று பங்கு வர்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
 சந்தை மதிப்பு உயர்வு: இதற்கிடையே, சந்தை மூலதன மதிப்பு ரூ.70 ஆயிரம் கோடி உயர்ந்து வர்த்தக முடிவில் ரூ.281.13 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் (எப்ஐஐ) திங்கள்கிழமை ரூ. 867.65 கோடி அளவுக்கு பங்குகளை விற்று முதலீடுகளை வாபஸ் பெற்றுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
 சென்செக்ஸ் வீழ்ச்சி: காலையில் 115.91 புள்ளிகள் குறைந்து 60,811.52-இல் தொடங்கிய சென்செக்ஸ், லாபப் பதிவு காரணமாக 60,713.77 வரை கீழே சென்றது. பின்னர், அதிகபட்சமாக 61,075.33 வரை மேலே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 17.15 புள்ளிகள் (0.03 சதவீதம்) குறைந்து 60,910.28-இல் முடிவடைந்தது. சென்செக்ஸ் பட்டியலில் 18 பங்குகள் விலை வீழ்ச்சி அடைந்தன. 18 பங்குகள் விலையுயர்ந்த பட்டியலில் வந்தன.
 டைட்டன் அபாரம்: பிரபல தங்க நகை மற்றும் கடிகாரம் உற்பத்தி நிறுவனமான டைட்டன் 3.10 சதவீதம் உயர்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக, எம் அண்ட் எம், பவர் கிரிட், மாருதி சுஸýகி, இண்டஸ் இண்ட் பேங்க் உள்ளிட்டவை 1 முதல் 1.60 சதவீதம் வரை உயர்ந்தன. மேலும், டெக் மஹிந்திரா, ஐடிசி, ஹெச்டிஎஃப்சி, ஏசியன் பெயிண்ட், விப்ரோ உள்ளிட்டவையும் சிறிதளவு உயர்ந்து விலையுயர்ந்த பட்டியலில் வந்தன.
 பார்தி ஏர்டெல், டாடா ஸ்டீல் சரிவு: அதே சமயம், பிரபல தனியார் தொலைத் தொடர்பு நிறுவனமான பார்தி ஏர்டெல் 1.39 சதவீதம், ஸ்டீல் உற்பத்தி நிறுவனமான டாடா ஸ்டீல் 1.08 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தன. இவற்றுக்கு அடுத்ததாக, அல்ட்ரா டெக் சிமென்ட், பஜாஜ் ஃபின்சர்வ், ஆக்சிஸ் வங்கி, டாடா மோட்டார்ஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், சன்ஃபார்மா உள்ளிட்டவை 0.50 முதல் 1 சதவீதம் வரை வீழ்ச்சி அடைந்தன. மேலும், பிரபல ஐடி நிறுவனங்கள் இன்ஃபோஸிஸ், டிசிஎஸ், ஹெச்சிஎல் டெக் மற்றும் எஸ்பிஐ, ஐசிஐசிஐ வங்கி, மார்க்கெட் லீடர் ரிலையன்ஸ், கோட்டக் வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி, ஹெச்யுஎல் உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகளும் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com