ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

தள்ளாட்டத்தில் பங்குச் சந்தை: 145 புள்ளிகளை இழந்தது சென்செக்ஸ்

பங்குச் சந்தையில் புதன்கிழமை ஏற்ற, இறக்கம் அதிகரித்து காணப்பட்டது. இதைத் தொடர்ந்து மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 0.25 சதவீதம் இழப்பை சந்தித்தது.

News image
Updated On :16 பிப்ரவரி 2022, 9:44 pm

தினமணி

பங்குச் சந்தையில் புதன்கிழமை ஏற்ற, இறக்கம் அதிகரித்து காணப்பட்டது. இதைத் தொடர்ந்து மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 0.25 சதவீதம் இழப்பை சந்தித்தது.
 இந்த வாரத்தின் தொடக்க வர்த்தக தினமான திங்கள்கிழமை சென்செக்ஸ், நிஃப்டி ஆகிய இரண்டு குறியீடுகளும் ஒரே நாளில் கடந்த 10 மாதங்களில் இல்லாத வகையில் 3 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் இந்த குறியீடுகள் கிட்டத்தட்ட முழுமையாக மீண்டெழுந்தன. ஆனால், புதன்கிழமை தொடக்கத்தில் இருந்த உற்சாகம் நேரம் செல்லச் செல்ல குறையத் தொடங்கியது.
 உலகளாவிய சந்தை குறிப்புகள் சாதகமாக இருந்த நிலையில், அதன் முழு தாக்கம் இந்திய சந்தையில் எதிரொலிக்கத் தவறியது. வர்த்தகத்தின் போது ஏற்றம், இறக்கம் அதிகரித்து இருந்தது. ரஷியா-உக்ரைன் இடையேயான பதற்றத்தால் சந்தையில் நிலையற்ற தன்மை அதிகரித்துள்ளது.
 இருப்பினும், மேற்கத்திய நாடுகளின் சந்தைகள் இறுதி நேரத்தில் விரைவான விற்பனையைத் எதிர்கொண்டன. அதன் தாக்கம் உள்நாட்டுச் சந்தையில் கடுமையாக எதிரொலித்தது. இதனால், பங்குச் சந்தை சரிவுடன் முடிவடைந்தது என்று பங்கு வர்த்தகத் தரகு நிறுவனங்கள்
 தெரிவித்தன.
 அமெரிக்காவின் பணவீக்கம் உயர்ந்த நிலையில், பிரிட்டனின் பணவீக்கம் ஜனவரியில் 5.5 சதவீதமாக உயர்ந்து 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சென்றது. அதன் தாக்கமும் சந்தையில் எதிரொலித்தது. இதைத் தொடர்ந்து ஆட்டோ, பேங்க், ஐடி பங்குகள் அதிகம் விற்பனையை எதிர்கொண்டன என்று வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
 1,998 நிறுவனப் பங்குகள் விலை உயர்வு : மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வர்த்தகமான 3,453 நிறுவனப் பங்குகளில் 1,998 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,359 பங்குகள் வீழ்ச்சி அடைந்தன. 96 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன.
 116 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 20 பங்குகள் புதிய குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்தன. சந்தை மூலதன மதிப்பு ரூ.39 ஆயிரம் கோடி உயர்ந்து வர்த்தக முடிவில் ரூ.262.19 லட்சம் கோடியாக இருந்தது. பதிவு செய்துள்ள முதலீட்டாளர்கள் எண்ணிக்கை 9.72 கோடியாக உயர்ந்துள்ளது.
 
 சென்செக்ஸ் தள்ளாட்டம்: சென்செக்ஸ் காலையில் 168.63 புள்ளிகள் கூடுதலுடன் 58,310.68-இல் தொடங்கி, 57,780.28 வரை கீழே சென்றது. பின்னர், அதிகபட்சமாக 58,569.22 வரை உயர்ந்த சென்செக்ஸ், இறுதியில் 145.37 புள்ளிகளை இழந்து 57,996.68-இல் நிலைபெற்றது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 முதல் தர நிறுவனங்களில் 10 நிறுவனப் பங்குகள் ஆதாயம் பெற்றன. 20 பங்குகள் சரிவைச் சந்தித்தன.
 என்டிபிசி சரிவு: சென்செக்ஸ் பட்டியலில் உள்ள என்டிபிசி 1.63 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக, எஸ்பிஐ, அல்ட்ரா டெக் சிமெண்ட், ஐசிஐசிஐ பேங்க், டாடா ஸ்டீல், பஜாஜ்
 ஃபைனான்ஸ் உள்ளிட்டவை 1 முதல் 1.60 சதவீதம் வரை வீழ்ச்சி அடைந்தன.
 பார்தி ஏர்டெல் முன்னேற்றம்: அதே சமயம், முன்னணி தனியார் தொலைத்தொடர்பு நிறுவனமான பார்திஏர்டெல் 1.41 சதவீதம் உயர்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது.
 மேலும், எச்டிஎஃப்சி, எம் அண்ட் எம், டாக்டர் ரெட்டீஸ் லேப், கோட்டக் பேங்க், நெஸ்லே, டெக் மஹிந்திரா, விப்ரோ, ஆக்ஸிஸ் பேங்க், ஹெச்சிஎல் டெக் உள்ளிட்டவையும் ஏற்றம் பெற்ற பட்டியலில் வந்தன.
 நிஃப்டி 30 புள்ளிகள் சரிவு: தேசிய பங்குச் சந்தையில் 1,158 நிறுவனப் பங்குகள் ஆதாயம் பெற்றன. 742 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 50 முதல் தர நிறுவனப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி குறியீடு காலையில் சுமார் 56 புள்ளிகள் கூடுதலுடன் 17,408.45 -இல் தொடங்கி, 17,257.70 வரை கீழே சென்றது. இறுதியில் 30.25 புள்ளிகள் குறைந்து 17,322.20-இல் நிலைபெற்றது. நிஃப்டி பட்டியலில் 17 நிறுவனங்களின் பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 33 பங்குகள் சரிவைச் சந்தித்தன.
 ரியால்ட்டி குறியீடு முன்னேற்றம்: தேசிய பங்குச் சந்தையில் ரியால்ட்டி குறியீடு 1.11 சதவீதம் உயர்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. ஆயில் அண்ட் காஸ், கன்ஸ்யூமர் டியூரபல்ஸ், ஹெல்த்கேர், பார்மா குறியீடுகள் சிறிதளவு உயர்ந்தன. அதே சமயம், நிஃப்டி பிஎஸ்யு பேங்க் குறியீடு 1.11 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.