எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

2-ஆவது நாளாக வீழ்ச்சி: சென்செக்ஸ் 509 புள்ளிகள் இழப்பு

நிகழ் வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமையும் பங்குச் சந்தை எதிர்மறையாக முடிந்தது. மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மேலும் 509 புள்ளிகளை இழந்தது

News image
Updated On :12 ஜூலை 2022, 10:53 pm

 நமது நிருபர்

நிகழ் வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமையும் பங்குச் சந்தை எதிர்மறையாக முடிந்தது. மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மேலும் 509 புள்ளிகளை இழந்தது. ஐடி, நிதி, உலோகம், எஃப்எம்சிஜி, ஆட்டோ துறை பங்குகள் லாப நோக்கு விற்பனையை எதிர் கொண்டன.
உலக அளவில் பெரும்பாலான சந்தைகள் கரடியின் பிடியில் இருந்தன. அதன் தாக்கம் உள்நாட்டு சந்தையிலும் எதிரொலித்தது. பிற்பகலில் மீட்சி பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கரடியின் பிடி இறுகியதால் எதிர்மறையாக முடிந்தது. உள்நாட்டுச் சந்தையில் இருந்து அந்நிய நிறுவனங்களின் முதலீட்டு வெளியேற்றத்துக்கிடையே, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சி அடைந்தது துயரத்தை மேலும் அதிகரித்துள்ளது. சில்லறை பணவீக்கம் மற்றும் தொழிற்சாலை உற்பத்தி தரவுகள் குறித்த சந்தை பங்கேற்பாளர்களின் எதிர்பார்ப்பால் சந்தையில் சுணக்கம் காணப்பட்டதாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
1,871 பங்குகள் விலை வீழ்ச்சி:
மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வர்த்தகமான 3,467 நிறுவனப் பங்குகளில் 1,436 பங்குகள் ஆதாயப் பட்டியலில் இருந்தன. 1,871 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன. 160 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 89 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 26 பங்குகள் புதிய குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்தன. சந்தை மூலதன மதிப்பு ரூ.1.39 லட்சம் கோடி குறைந்து வர்த்தக முடிவில் ரூ.251.92 லட்சம் கோடியாக இருந்தது.
சென்செக்ஸ் 509 புள்ளிகள் சரிவு: காலையில் 175.45புள்ளிகள் குறைந்து 54,219.78-இல் தொடங்கிய சென்செக்ஸ், அதிகபட்சமாக 54,236.49 வரை மேலே சென்றது. பின்னர், 53,824.97 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 508.62 புள்ளிகள் (0.94 சதவீதம்) குறைந்து 53,886.61-இல் நிலைபெற்றது. நாள் முழுவதும் சென்செக்ஸ் ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது.
இன்ஃபோசிஸ் கடும் சரிவு: சென்செக்ஸ் பட்டியலில் மொத்தமுள்ள 30 முதல் தரப் பங்குகளில் என்டிபிசி மட்டும் 1.87 சதவீதம் உயர்ந்தது.
பார்தி ஏர்டெல், பஜாஜ் ஃபைனான்ஸ் சிறிதளவு உயர்ந்தன. மற்ற 27 பங்குகளும் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன. இதில், முன்னணி ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ் 2.33 சதவீதம் குறைந்து வீழ்ச்சி பட்டியலில் முதலிடத்தில் இருந்தது. இதற்கு அடுத்ததாக நெஸ்லே இந்தியா, பவர் கிரிட், ஹிந்துஸ்தான் யுனிலீவர், எம் அண்ட் எம், ஹெச்சிஎல் டெக் உள்ளிட்டவை 1.50 முதல் 2 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன.
மேலும், ஏஷியன் பெயிண்ட், இன்டஸ்இண்ட் பேங்க், டைட்டன், ஐசிஐசிஐ பேங்க், அல்ட்ரா டெக் சிமெண்ட், டாடா ஸ்டீல், கோட்டக் பேங்க் உள்ளிட்டவை 1 முதல் 1.50 சதவீதம் வரை வீழ்ச்சி அடைந்தன.
எச்டிஎஃப்சி இரட்டை நிறுவனங்கள், மாருதி சுஸுகி, டிசிஎஸ், விப்ரோ, எஸ்பிஐ, ஆக்ஸிஸ் பேங்க், டெக் மஹிந்திரா, ஐடிசி உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகளும் விலை குறைந்த பட்டியலில் இருந்தன.
நிஃப்டி 158 புள்ளிகள் வீழ்ச்சி: தேசிய பங்குச் சந்தையில் 762 பங்குகள் மட்டுமே ஆதாயப் பட்டியலில் இருந்தன. 1,159 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலுக்கு வந்தன. நிஃப்டி "50' பட்டியலில் 6 பங்குகள் மட்டுமே ஆதாயப் பட்டியல் இருந்தன. ஏனைய 44 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் இடம்பெற்றன. வர்த்தக முடிவில் நிஃப்டி 157.70 புள்ளிகள் (0.97 சதவீதம்) குறைந்து 16,058.30-இல் நிலைபெற்றது. காலையில் சுமார் 100 புள்ளிகள் குறைந்து 16,126.20-இல் தொடங்கிய நிஃப்டி, அதிகபட்சமாக 16,158.75 வரை மட்டுமே உயர்ந்தது.
காத்திருப்பில் எல்ஐசி முதலீட்டாளர்கள்!
பங்குச் சந்தையில் பட்டியலாகியது முதல் ரூ.918.95-இல் இருந்து தொடர்ந்து கடும் சரிவைச் சந்தித்து வந்த எல்ஐசி, தேசிய பங்குச் சந்தையில் அண்மையில் ரூ.650 வரை கீழே சென்றது. அதன்பிறகு சற்று முன்னேற்றம் கண்டுள்ளது. செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் 0.23 சதவீதம் குறைந்து 716.55-இல் நிலைபெற்றது. எல்ஐசி பங்கு ஒதுக்கீடு பெற்ற பாலிசிதாரர்கள், எப்போது அது உச்சபட்ச விலையை எட்டும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவித்தன.
ரூபாய் மதிப்பு 14 காசு சரிவு
உள்நாட்டு பங்குச் சந்தையில் காணப்பட்ட பலவீனத்தைத் தொடர்ந்து அந்நியச் செலாவணி சந்தையில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் 14 காசு சரிந்து முன்னெப்போதும் இல்லாத வகையில் 79.59-இல் நிலைத்தது.
கச்சா எண்ணெய் பீப்பாய் 104 டாலர்
சர்வதேச சந்தையில் செவ்வாய்க்கிழமை முன்பேர வர்த்தகத்தில் பிரெண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய் 104.67 டாலருக்கு வர்த்தகம் ஆனதாக சந்தைப் புள்ளிவிவரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.