2-ஆவது நாளாக உற்சாகம்: சென்செக்ஸ் 350 புள்ளிகள் முன்னேற்றம்
இந்த வாரத்தின் இரண்டாவது நாளான செவ்வாய்க்கிழமையும் பங்குச் சந்தை நேர்மறையாக முடிந்தது. ஏற்ற, இறக்கம் அதிகரித்திருந்த நிலையில், மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மேலும்


இந்த வாரத்தின் இரண்டாவது நாளான செவ்வாய்க்கிழமையும் பங்குச் சந்தை நேர்மறையாக முடிந்தது. ஏற்ற, இறக்கம் அதிகரித்திருந்த நிலையில், மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மேலும் 350 புள்ளிகள் உயர்ந்தது.
போர்ச் சூழலில் உக்ரைன் -ரஷியா மீண்டும் பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ளதைத் தொடர்ந்து, உலக அளவில் பெரும்பாலான சந்தைகளில் வர்த்தகம் நேர்மறையாக இருந்தது. இதன் தாக்கம் உள்நாட்டுச் சந்தையிலும் எதிரொலித்தது. ஏற்றத்துடன் தொடங்கினாலும், பின்னர் தள்ளாட்டத்தில் இருந்து வந்தது. பின்னர், பிற்பகல் வர்த்தகத்தின் போது சந்தை எழுச்சி பெற்று இரண்டாவது நாளாக நேர்மறையாக நிறைவடைந்தது என்று பங்கு வர்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன. குறிப்பாக எச்டிஎஃப்சி இரட்டை நிறுவனங்கள், பார்தி ஏர்டெல், இன்ஃபோஸிஸ் உள்ளிட்ட முன்னணிப் பங்குகள் வெகுவாக உயர்ந்ததே சந்தையின் எழுச்சிக்கு முக்கியக் காரணம் என்று வர்த்தகர்கள் தெரிவித்தனர். இதற்கிடையே, அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் திங்கள்கிழமை அன்று ரூ.801.41 கோடி அளவுக்கு பங்குகளை விற்று முதலீடுகளை வாபஸ் பெற்றுள்ளதாக சந்தை புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
2,031 நிறுவனப் பங்குகள் விலை சரிவு: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வர்த்தகமான 3,518 நிறுவனப் பங்குகளில் 2,031 பங்குகள் விலை வீழ்ச்சி அடைந்தன. 1,396 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 91 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 129 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 106 பங்குகள் புதிய குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்தன. சந்தை மூலதன மதிப்பு ரூ.1.37 லட்சம் கோடி உயர்ந்து வர்த்தக முடிவில் ரூ.261.62 லட்சம் கோடியாக இருந்தது. பதிவு பெற்ற முதலீட்டாளர்கள் எண்ணிக்கை 10.12 கோடியாக உயர்ந்துள்ளது.
மேலும் 350 புள்ளிகள் முன்னேற்றம்: சென்செக்ஸ் காலையில் 221.27 புள்ளிகள் கூடுதலுடன் 57,814.76-இல் தொடங்கி, 57,639.35 வரை கீழே சென்றது. பின்னர், அதிகபட்சமாக 58,001.53 வரை உயர்ந்த சென்செக்ஸ், இறுதியில் 350.16 புள்ளிகள் (0.61சதவீதம்) உயர்ந்து 57,943.65-இல் நிலைபெற்றது. சந்தையில் ஏற்றம், இறக்கம் அதிகரித்து காணப்பட்டது. இருப்பினும் நாள் முழுவதும் வர்த்தகம் நேர்மறையாக இருந்து வந்தது.
எச்டிஎஃப்சி அபாரம்: 30 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய சென்செக்ஸ் பட்டியலில் 10 பங்குகள் மட்டும் வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன. 20 பங்குகள் ஆதாயம் பெற்றன. இதில், பிரபல தனியார் வீட்டு வசதி கடன் நிறுவனமான எச்டிஎஃப்சி 3.06 சதவீதம் உயர்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக பார்தி ஏர்டெல் 2.90 சதவீதம், அல்ட்ரா டெக் சிமெண்ட் 2.70 சதவீதம் உயர்ந்தன. மேலும், சன்பார்மா, எச்டிஎஃப்சி பேங்க், டாக்டர் ரெட்டி, ஹிந்துஸ்தான் யுனி லீவர், ஐசிஐசிஐ பேங்க், இன்ஃபோஸிஸ், ஏசியன் பெயிண்ட், பஜாஜ் ஃபைனான்ஸ் உள்ளிட்டவையும் ஆதாயப் பட்டியலில் இருந்தன.
ஐடிசி சரிவு: அதே சமயம், பிரபல நுகர்பொருள் உற்பத்தி நிறுவனமான ஐடிசி 0.99 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், இண்டஸ் இண்ட் பேங்க், மாருதி, பவர் கிரிட், எஸ்பிஐ, டாடா ஸ்டீல், என்டிபிசி, டெக்மஹிந்திரா, பஜாஜ் ஃபின் சர்வ், டிசிஎஸ் உள்ளிட்டவையும் விலை குறைந்த பட்டியலில் இருந்தன.
நிஃப்டி 103 புள்ளிகள் உயர்வு:
தேசிய பங்குச் சந்தையில் 813 பங்குகள் ஆதாயம் பெற்றன.
1,123 பங்குகள் நஷ்டமடைந்த பட்டியலில் வந்தன. 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி குறியீடு 103.30புள்ளிகள் (0.60 சதவீதம்) உயர்ந்து 17,3252300-இல் நிறைவடைந்தது. காலையில் 75.20 புள்ளிகள் கூடுதலுடன் 17,297.20-இல் தொடங்கிய நிஃப்டி, 17,235.70 வரை கீழே சென்றது. பின்னர், அதிகபட்சமாக 17,343.65 வரை உயர்ந்தது.
பார்மா குறியீடு முன்னேற்றம்:
தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி பார்மா குறியீடு 1.54 சதவீதம் உயர்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், ஹெல்த்கேர், கன்ஸ்யூமர் டியூரபல்ஸ், ஃபைனான்சியல் சர்வீஸஸ் குறியீடுகள் 1 முதல் 1.35 சதவீதம் வரை ஏற்றம் பெற்றன. அதே சமயம், மீடியாக குறியீடு 1.22 சதவீதம், பிஎஸ்யு பேங்க் குறியீடு 0.83 சதவீதம் வீழ்ச்சியைச் சந்தித்தன.
ஹீரோ மோட்டார் கார்ப் கடும் சரிவு
மும்பை பங்குச் சந்தையில் பிரபல இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹீரோ மோட்டார் கார்ப் பங்குகள் 7.08 சதவீதம் வரை குறைந்து 2,208.35-இல் நிறைவடைந்தது. அந்த நிறுவனம் ரூ.1,000 கோடி அளவுக்கு தவறான செலவு கணக்கு காட்டியுள்ளதை வருமான வரித் துறை கண்டுபிடித்துள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. இது தொடர்பாக பங்குச் சந்தை நிர்வாகம் விளக்கம் கேட்டுள்ளதாக வெளியான செய்தியைத் தொடர்ந்து ஹீரோ மோட்டார் கார்ப் பங்குகள் கடும் சரிவைச் சந்தித்தது. செவ்வாய்க்கிழமை காலையில் ரூ. 2394.00-இல் தொடங்கிய ஹீரோ மோட்டார் கார்ப், அதிகபட்சமாக ரூ.2400.05 வரை உயர்ந்தது. பின்னர், ரூ. 2,155.00 வரை கீழே சென்றது. இறுதியில் ரூ.2,258.60-இல் நிறைவடைந்தது. இதே போன்று தேசிய பங்குச் சந்தையில் ஹீரோ மோட்டார் கார்ப் 6.68 சதவீதம் குறைந்து ரூ.2,219-இல் நிறைவடைந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...