

இந்தியாவில் ஏர்பாட் (AirPods) மற்றும் ஹெட்செட் (headset) உற்பத்தி செய்ய ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐ-போன் 14-ஐ இந்தியாவில் உற்பத்தி செய்ய ஆப்பிள் நிறுவனம் முடிவெடுத்திருந்த நிலையில், தற்போது அதன் மற்ற தயாரிப்புகளான ஏர்பாட் மற்றும் ஹெட்செட் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஆப்பிள் நிறுவனம் என்னற்ற மின்னணுப் பொருள்களைத் தயாரித்து வருகிறது. அந்நிறுவனத்தின் ஐ-போன் பயன்பாடு உலகம் முழுக்க உள்ள மக்களிடம் சென்றுசேர்ந்துள்ளது. மேலும், ஏர்பாட், ஹெட்செட், மடிக்கணினி போன்றவற்றையும் ஆப்பிள் நிறுவனம் தயாரித்து வருகிறது.
அந்தவகையில், லக்ஸ்ஷேர் பிரிசீஷன் (Luxshare Precision) என்ற நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்துக்கான ஏர்பாட்களை சீனா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் உற்பத்தி செய்து வருகிறது.
இதனைப்போன்று இந்தியாவிலும் ஏர்பாட் உற்பத்தியைத் தொடங்க லக்ஸ்ஷேர் பிரிசீஷனை ஆப்பிள் நிறுவனம் கேட்டுக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்கான ஆயத்தப் பணிகளை லக்ஸ்ஷேர் பிரிசீஷன் நிறுவனம் மேற்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன் மூலம் ஆப்பிள் நிறுவனத்தின் ஏர்பாட், ஹெட்செட் இந்தியாவில் முதல்முறையாக தயாரிக்கப்படவுள்ளது.
ஏற்கெனவே ஆப்பிள் நிறுவனத்தின் தற்போதைய தயாரிப்பான ஐ-போன் 14-ஐ இந்தியாவில் உற்பத்தி செய்ய அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.