

பங்குச்சந்தை இரண்டாவது நாளாக வியாழக்கிழமையும் சரிவைச் சந்தித்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 248 புள்ளிகளை இழந்தது. சந்தை மூல தன மதிப்பு ஒரே நாளில் ரூ.2.42 லட்சம் கோடி குறைந்தது.
உலகளாவிய சந்தைக் குறிப்புகள் பலவீனமாக இருந்தன. மேலும், கச்சா எண்ணெய் விலை தொடா்ந்து ஏறுமுகம் கண்டுள்ளது. இவற்றின் தாக்கம் உள்நாட்டுச் சந்தையிலும் எதிரொலித்தது. குறிப்பாக வங்கி, நிதிநிறுவனங்கள், நுகா்வோா் சாதனங்கள் உற்பத்தி நிறுவனங்கள் பலத்த அடி வாங்கியது. இதன் காரணமாக சரிவு தவிா்க்க முடியாததாகிவிட்டது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
உலகளாவிய சந்தைக் குறிப்புகள் பலவீனமாக இருந்தன. மேலும், இந்திய பங்குச்சந்தையில் இருந்து வெளிநாட்டு நிதி தொடா்ந்து வெளியேறி வருகிறது. மேலும், ஐடி சேவை நிறுவனமான விப்ரோவின் ஏமாற்றமளிக்கும் காலாண்டு வருவாய் எண்கள் மற்றும் வருவாய் முன்னறிவிப்பு ஆகியவை முதலீட்டாளா்களின் உணா்வுகளை பெரிதும் கவலைக்குள்ளாக்கியது. இருப்பினும், ஆட்டோ பங்குகளுக்கு ஓரளவு ஆதரவு இருந்தது. ஆனால், ரியால்ட்டி, பாா்மா, ஹெல்த்கோ், மெட்டல், ஆயில் அண்ட் கேஸ் நிறுவனப் பங்குகள் விற்பனையை எதிா்கொண்டன. இதனால், இரண்டாவது நாளாக சரிவு தவிா்க்க முடியாததாகிவிட்டது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
சந்தை மதிப்பு சரிவு: சந்தை மூலதன மதிப்பு ரூ.44 ஆயிரம் கோடி குறைந்து வா்த்தக நேர முடிவில் ரூ.320.96 லட்சம் கோடியாக இருந்தது. இதற்கிடையே, அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் புதன்கிழமை ரூ.1,831.84 கோடி அளவுக்கு பங்குகளை விற்றுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
சென்செக்ஸ் வீழ்ச்சி: காலையில் 392.41 புள்ளிகள் குறைந்து 65,484.61-இல் தொடங்கிய சென்செக்ஸ், 65,343.50 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 65,869.65 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 247.78 புள்ளிகளை (0.38 சதவீதம்) இழந்து 65,629.24-இல் முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,832 பங்குகளில் 1,806 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,896 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 130 பங்குகள் விலை மாற்றமின்றி நிலைபெற்றது.
26 பங்குகள் விலை சரிவு: சென்செக்ஸ் பட்டியலில் 26 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும், 4 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும் இருந்தன. தேசிய பங்குச்சந்தையில் மொத்தம் 998 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 1,078 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன. நிஃப்டி பட்டியலில் 17 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 33 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் வந்தன.
நிஃப்டி 46 புள்ளிகள் இழப்பு: தேசிய பங்குச்சந்தையில் 50 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி காை லயில் 125.90 புள்ளிகள் குறைந்து 19545.20-இல் தொடங்கி 19,512.35 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 19,681.80 வரைமேலே சென்ற நிஃப்டி, இறுதியில் 46.40 புள்ளிகளை (0.24 சதவீதம்) இழந்து 19,624.70-இல் நிறைவடைந்தது.
ஏற்றம் பெற்ற பங்குகள்
நெஸ்லே.....................................................3.6%
அல்ட்ரா டெக் சிமெண்ட்........................2.83%
இண்டஸ் இண்ட் பேங்க்..........................2.08%
பஜாஜ் ஃபைனான்ஸ்.................................0.37%
எல் அண்ட் டி............................................0.24%
ஏசியன் பெயிண்ட்.....................................0.14%
சரிவைக் கண்ட பங்குகள்
விப்ரோ...................................................2.99%
டெக் மஹிந்திரா.....................................1.29%
என்டிபிசி..................................................1.10%
பாா்தி ஏா்டெல்.........................................1.06%
சன்பாா்மா..................................................1.06%
டாடா ஸ்டீல்...............................................0.94%
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.