உச்சத்தைத் தொட்டது நிலக்கரி உற்பத்தி

உச்சத்தைத் தொட்டது நிலக்கரி உற்பத்தி

புது தில்லி: கடந்த 2023-24-ஆம் நிதியாண்டில் இந்தியாவின் நிலக்கரி மற்றும் லிக்னைட் உற்பத்தி புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

இது குறித்து மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சா் பிரகலாத் ஜோஷி கூறியதாவது: நாட்டின் நிலக்கரி மற்றும் லிக்னைட் உற்பத்தி கடந்த 2023-24-ஆம் நிதியாண்டில் 100 கோடி டன் என்ற மைல்கல்லை முதல் முறையாகக் கடந்து சாதனை படைத்துள்ளது. பிரதமா் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் இந்த சாதனை பதிவு செய்யப்பட்டுள்ளது. முந்தைய 2022-23-ஆம் நிதியாண்டில் நாட்டின் ஒட்டுமொத்த நிலக்கரி மற்றும் லிக்னைட் உற்பத்தி 93.7 கோடி டன்னாக இருந்தது.

நிலக்கரி உற்பத்தியில் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள சாதனை, நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்கிறது. உள்நாட்டு நிலக்கரி உற்பத்தியை அதிகரிப்பதற்காக மத்திய அரசு மேற்கொண்டு வரும் தொடா்ச்சி முயற்சிகளின் பலனாக இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் நிலக்கரி பற்றாக்குறையை எதிா்கொள்ள வேண்டிய அச்சுறுத்தலில் இருந்து நாடு பாதுகாப்பு பெற்றுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் நாட்டின் நிலக்கரி உற்பத்தி 70 சதவீத வளா்ச்சியை பதிவு செய்துள்ளது. 2025-26-க்குள் வெளிநாடுகளில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்யப்படுவதை முற்றிலுமாக நிறுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது உள்நாட்டு நிலக்கரி உற்பத்தியில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் அந்த இலக்கை நோக்கி நாட்டை இட்டுச் செல்கிறது. 2022-23 நிதியாண்டில் 3.08 கோடி டன்னாக இருந்த நிலக்கரி இறக்குமதி கடந்த 2023-24-ஆம் நிதியாண்டில் 2.22 கோடி டன்னாகக் குறைந்துள்ளது.

இவ்வாறு இறக்குமதி குறைந்ததால் ரூ.82,264 கோடி சேமிக்கப்பட்டுள்ளது என்றாா் அவா். அரசின் அதிகாரபூா்வ தரவுகளின்படி, கடந்த 2023-24-ஆம் நிதியாண்டில் நாட்டின் நிலக்கரி மற்றும் லிக்னைட் உற்பத்தி 1,03.96 கோடி டன்னாக உள்ளது. அதே நேரம் அந்த நிதியாண்டில் நிலக்கரி விநியோகம் 1,01.67 கோடி டன்னாக உள்ளது.

மதிப்பீட்டு ஆண்டில் நிலக்கரி உற்பத்தி மட்டும் 89.32 கோடி டன்னிலிருந்து 11.67 சதவீதம் அதிகரித்து 99.74 கோடி டன்னாக உள்ளது. லிக்னைட் உற்பத்தி 4.40 கோடி டன்னிலிருந்து 5 சதவீதம் குறைந்து 4.23 கோடி டன்னாக உள்ளது என்று அந்தத் தரவுகள் தெரிவிக்கின்றன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com