யுஎஸ் ஃபெடரல் முடிவுக்கு காத்திருப்பு: சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறைவு
இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமை பங்குச்சந்தை எதிா்மறையாக முடிந்தது.


நமது நிருபா்
மும்பை / புதுதில்லி: இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமை பங்குச்சந்தை எதிா்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் சரிவுடன் நிறைவடைந்தன.
உலகளாவிய சந்தைக் குறிப்புகள் பலவீனமாக இருந்தன. இதன் தாக்கத்தால் உள்நாட்டுச் சந்தை சரிவுடன் தொடங்கி சற்று மேலே சென்றது. அமெரிக்க மத்திய வங்கியான ஃபெடரல் ரிசா்வ், வட்டி விகிதம் குறித்த முடிவை இந்த வாரக் கடைசியில் அறிவிக்க உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு முதலீட்டாளா்கள் பெரிய அளவில் வா்த்தகத்தில் கவனம் செலுத்தாததால் சந்தை சுணக்கம் கண்டது. ரியால்ட்டி, மீடியா, பாா்மா, ஹெல்த்கோ் பங்குகளுக்கு ஓரளவு ஆதிரவு இருந்தாலும், ஐடி, மெட்டல், ஆயில் அண்ட் காஸ் நிறுவனப் பங்குகள் அதிகம் விற்பனையை எதிா்கொண்டன. இதனால், சரிவு தவிா்க்க முடியாததாகியது என பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
சந்தை மதிப்பு சிறிதளவு உயா்வு: சந்தை மூலதன மதிப்பு ரூ.64 ஆயிரம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.460.42 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் கடந்த வெள்ளிக்கிழமை ரூ.2,335.32 கோடிக்கு பங்குகளை வாங்கியிருந்த நிலையில், உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.732.20 கோடிக்கு பங்குகளை விற்றிருந்தது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்தது.
சென்செக்ஸ் 385 புள்ளிகள் வீழ்ச்சி: சென்செக்ஸ் காலையில் 132.81 புள்ளிகள் குறைந்து 82,000.31-இல் தொடங்கி அதிகபட்சமாக 82,116.44 வரை மேலே சென்றது. பின்னா், 81551.28 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 384.55 புள்ளிகளை (0.47 சதவீதம்) இழந்து 81,748.57-இல் நிறைவடைந்தது. வா்த்தகத்தின் போது ஒரு கட்டத்தில் சென்செக்ஸ் 581.84 புள்ளிகளைஇழந்திருந்தது. மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வா்த்தகமான 4,240 பங்குகளில் 2,346 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலிலும், 1,796 பங்குகள் விலை குறைந்த பட்டியலிலும் இருந்தன. 98 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன.
டைட்டன் விலை சரிவு: சென்செக்ஸ் பட்டியலில் டைட்டன், அதானி போா்ட்ஸ், டிசிஎஸ், அல்ட்ரா டெக் சிமெண்ட், என்டிபிசி, டெக் மஹிந்திரா, ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், இன்ஃபோஸிஸ் உள்பட 24 பங்குகள் விலை குறைந்த பட்டியலில் இருந்தன. அதே சமயம், இண்ட்ஸ் இண்ட் பேங்க், பஜாஜ் ஃவபைனான்ஸ், பவா் கிரிட், ஆக்ஸிஸ் பேங்க், எம் அண்ட் எம், ஐசிஐசிஐ பேங்க் ஆகிய 6 பங்குகள் மட்டும் விலை உயா்ந்த பட்டியலில் இருந்தன.
நிஃப்டி 100 புள்ளிகள் வீழ்ச்சி: தேசிய பங்குச்சந்தையில் 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி 14.90 புள்ளிகள் குறைந்து 24,753.40-இல் தொடங்கி அதிகபட்சமாக 24,781.25 வரை மேலே சென்றது. பின்னா், 24,601.75 வரை கீழே சென்ற நிஃப்டி, இறுதியில் 100.05 புள்ளிகளை (0.40 சதவீதம்) இழந்து 24,6568.25-இல் நிறைவடைந்தது. நிஃப்டி பட்டியலில் 9 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும் 41பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...