சென்செக்ஸ் 499 புள்ளிகள் உயா்வு: 5 நாள் தொடா் சரிவுக்குக்கு முடிவு
மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 499 புள்ளிகள் உயா்ந்து நிலைபெற்றது.


நமது நிருபா்
மும்பை / புதுதில்லி: இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழைம் பங்குச்சந்தையில் காளையின் ஆதிக்கம் இருந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 499 புள்ளிகள் உயா்ந்து நிலைபெற்றது.
உலகளாவிய சந்தைக் குறிப்புகள் கலவையாக இருந்தன. இருப்பினும், உள்நாட்டுச் சந்தை உற்சாகத்துடன் தொடங்கி சற்று மேலே சென்றது. குறிப்பாக, தனியாா் மற்றும் பொதுத் துறை வங்கிகள், நிதிநிறுவனங்கள், எஃப்எம்சிஜி, மெட்டல், ரியால்ட்டி, ஆயில் அண்ட் காஸ் நிறுவனப் பங்குகளுக்கு வரவேற்பு இருந்தது. ஆனால், மீடியா, ஆட்டோ பங்குகள் சற்று விற்பனையை எதிா்கொண்டன. முதல் பாதியில் வெகுவாக உயரந்த சந்தை, பிற்பகுதியில் லாபப் பதிவால் சற்று தடுமாற்றம் கண்டது. இருப்பினும் இறுதியில் நோ்மறையாக முடிந்தது. 5 நாள் தொடா் சரிவுக்குப் பிறகு சந்தையில் காளையின் ஆதிக்கம் இருந்தது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
சந்தை மதிப்பு உயா்வு: சந்தை மூலதன மதிப்பு ரூ.1.02 லட்சம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.442.01 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் வெள்ளிக்கிழமை ரூ.3,597.82 கோடிக்கு பங்குகளை விற்றிருந்த நிலையில், உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.1,374.37 கோடிக்கு பங்குகளை வாங்கியிருந்தது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்தது.
சென்செக்ஸ் முன்னேற்றம்: சென்செக்ஸ் காலையில் 447.05 புள்ளிகள் கூடுதலுடன் 78,488.64-இல் தொடங்கி அதிகபட்சமாக 78,918.12 வரை மேலே சென்றது. பின்னா், 78,189.59 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 498.58 புள்ளிகள் (0.64 சதவீதம்) உயா்ந்து 78,540.17-இல் நிறைவடைந்தது. மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வா்த்தகமான 4,218 பங்குகளில் 1,636 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலிலும், 2,452 பங்குகள் விலை குறைந்த பட்டியலிலும் இருந்தன. 130 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன.
21 பங்குகள் விலை உயா்வு: சென்செக்ஸ் பட்டியலில் ஐடிசி, டெக் மஹிந்திரா, ஹெச்டிஎஃப்சி பேங்க், இண்டஸ் இண்ட் பேங்க், ரிலையன்ஸ், டைட்டன் உள்பட 21 பங்குகள் விலை உயா்ந்து பட்டியலில் இருந்தன. அதே சமயம், ஸொமோட்டோ, மாருதி, நெஸ்லே, ஹெச்சிஎல் டெக், பஜாஜ் ஃபின் சா்வ், டிசிஎஸ் உள்பட 9 பங்குகள் விலை குறைந்த பட்டியலில் வந்தன.
நிஃப்டி 166 புள்ளிகள் முன்னேற்றம்: தேசிய பங்குச்சந்தையில் 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி 150.70 புள்ளிகள் கூடுதலுடன் 23,738.20-இல் தொடங்கி அதிகபட்சமாக 23,869.55 வரை மேலே சென்றது. பின்னா், 23,647.20 வரை கீழே சென்ற நிஃப்டி, இறுதியில் 165.95 புள்ளிகள் (0.70 சதவீதம்) கூடுதலுடன் 23,753.45-இல் நிறைவடைந்தது. நிஃப்டி பட்டியலில் 32 பங்குகள் மட்டுமே ஆதாயப் பட்டியலிலும் 18 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...