
இந்திய பங்குச் சந்தை வணிகம் இன்று (டிச. 27) உயர்வுடன் முடிந்தது. சென்செக்ஸ் இரண்டாவது நாளாக உயர்வுடன் முடிந்தது. நிஃப்டி நேற்று சரிவுடன் முடிந்த நிலையில், இன்று ஏற்றம் கண்டு 23,800 புள்ளிகளுக்கு மேல் நிறைவு பெற்றது.
துறை ரீதியாக ஆட்டோ, பார்மா துறை பங்குகள் உயர்ந்திருந்தது. மெட்டல் துறை பங்குகள் வீழ்ச்சியுடன் இருந்தது.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 226.59 புள்ளிகள் உயர்ந்து 78,699.07 புள்ளிகளாக வணிகம் நிறைவு பெற்றது. மொத்த வணிகத்தில் இது 0.29 சதவீதம் உயர்வாகும்.
தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 63.20 புள்ளிகள் உயர்ந்து 23,813.40 புள்ளிகளாக நிறைவு பெற்றது. இது மொத்த வணிகத்தில் 0.27 சதவீதம் உயர்வாகும்.
சென்செக்ஸ் இன்று காலை உயர்வுடன் தொடங்கியது. வணிக நேரத் தொடக்கத்தில் 78,607.62 புள்ளிகளில் தொடங்கிய சென்செக்ஸ், 79,043.15 புள்ளிகள் வரை உயர்ந்தது. பின்னர் படிப்படியாக சரிந்து 78,598.55 என்ற அதிகபட்ச சரிவைச் சந்தித்தது. வணிக நேர முடிவில் 226 உயர்ந்து 78,699 புள்ளிகளுடன் வணிகம் நிறைவு பெற்றது.
சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 தரப் பங்குகளில் 20 நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் காணப்பட்டன. எஞ்சிய 10 நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் இருந்தன.
அதிகபட்சமாக எம்&எம் நிறுவனப் பங்குகள் 2.49% உயர்ந்திருந்தது. இதற்கு அடுத்தபடியாக இந்தஸ் இந்த் வங்கி 2.31%, பஜாஜ் ஃபைனான்ஸ் 1.35%, டாடா மோட்டார்ஸ் 1.31%, பஜாஜ் ஃபின்சர்வ் 1.29%, சன் பார்மா 1.09%, ஐசிஐசிஐ வங்கி 0.79% உயர்ந்திருந்தது.
இதேபோன்று அதிகபட்சமாக எஸ்பிஐ நிறுவனப் பங்குகள் -1.58% சரிந்தன. அதானி போர்ட்ஸ் -1.07%, டாடா ஸ்டீல் -1.04%, சொமாட்டோ -0.72%, எல்& டி -0.59% சரிந்திருந்தன.
வணிக நேரத் தொடக்கத்தில் நிஃப்டி 23,801.40 புள்ளிகளுடன் தொடங்கியது. படிப்படியாக உயர்ந்து 23,938.85 புள்ளிகள் என்ற உச்சத்தை எட்டியது.
பிற்பாதியில் தொடர்ந்து சரிந்து 23,800.60 புள்ளிகள் வரை சென்றது. வணிக நேர முடிவில் 63 புள்ளிகள் உயர்ந்து 23,813 புள்ளிகளுடன் நிறைவு பெற்றது.
நிஃப்டி பட்டியலில் உள்ள 50 தரப் பங்குகளில் டாக்டர் ரெட்டி, எம்&எம், இந்தஸ் இந்த் வங்கி, எய்ச்சர் மோட்டார்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ், விப்ரோ, சிப்லா, ட்ரெண்ட் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் முடிந்தன.
இதையும் படிக்க | கோயிலில் சிலிண்டர் வெடிப்பு! பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.