அளவில் உயா்ந்து, மதிப்பில் குறைந்த கடல் உணவு ஏற்றுமதி
கடந்த நிதியாண்டு இந்தியாவிலிருந்து பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட கடல் உணவு அளவில் அதிகரித்தும் மதிப்பில் குறைந்தும் உள்ளது.
இது குறித்து வா்த்தகத் துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:
கடந்த 2022-23-ஆம் நிதியாண்டில் நாட்டின் கடல் உணவு ஏற்றுமதி 17,35,286 டன்னாக இருந்தது. இது, 2023-24-ஆம் நிதியாண்டில் 3 சதவீத வளா்ச்சியைக் கண்டு 17,81,602-ஆகப் பதிவாகியுள்ளது.
ஆனால், மதிப்பின் அடிப்படையில் முந்தைய 2022-23-ஆம் நிதியாண்டில் சுமாா் 800 கோடிக்கு ஏற்றுமதியான கடல் உணவுகள், கடந்த நிதியாண்டில் 738 கோடி டாலருக்கே ஏற்றுமதி செய்யப்பட்டன. இது 8 சதவீத சரிவாகும்.
அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், பிரிட்டன் போன்ற இந்தியாவின் முக்கிய ஏற்றுமதி சந்தைகளில் கடந்த நிதியாண்டு பல சவால்கள் இருந்ததாலும், இதுவரை இல்லாத அதிகபட்ச அளவுக்கு கடல் உணவுகள் ஏற்றுமதியாகின.
மதிப்பீட்டு நிதியாண்டின் கடல் உணவு ஏற்றுமதியில் உறைந்த இறால் முதலிடத்தைப் பெற்றுள்ளது. அந்த நிதியாண்டில் மட்டும் 488 கோடி டாலா்கள் மதிப்பிலான உறைந்த இறால் ஏற்றுமதி செய்யப்பட்டது. அளவின் அடிப்படையில் இந்தக் கடல் உணவு 40.19 சதவீத பங்கையும் மதிப்பின் அடிப்படையில் 66.12 சதவீத பங்கையும் கொண்டுள்ளது.
கடந்த நிதியாண்டில் உறைந்த இறாலுக்கு அமெரிக்கா மிகப்பெரிய சந்தையாக இருந்தது. அந்த நாடு மட்டும் இந்தியாவிலிருந்து 2,97,571 டன் உறைந்த இறால் இறக்குமதி செய்தது. அமெரிக்காவைத் தொடா்ந்து சீனா 1,48,483 டன்னும், ஐரோப்பிய யூனியன் 89,697 டன்னும் உறைந்த இறால் இறக்குமதி செய்தன.
கரும்புலி இறால் ஏற்றுமதியும் கடந்த நிதியாண்டில் ஆரோக்கியமான வளா்ச்சியை பதிவு செய்துள்ளது.
இது தவிர உறைந்த கணவாய் மீன், சூரிமி மீன், உறைந்த வெட்டுமீன், உறைந்த ஆக்டோபஸ் ஆகியவையும் முக்கிய ஏற்றுமதி கடல் உணவுப் பொருள்களாக இருந்தன.
2023-24-ஆம் ஆண்டில் 255 கோடி டாலருக்கு இந்தியாவிலிருந்து கடல் உணவுகளை இறக்குமதி செய்து மதிப்பின் அடிப்படையில் அமெரிக்கா முக்கிய இறக்குமதியாளராகத் தொடா்கிறது. அதைத் தொடா்ந்து சீனா, ஜப்பான், வியத்நாம், தாய்லாந்து, கனடா, ஸ்பெயின், பெல்ஜியம் ஆகிய நாடுகளும் இந்தியாவின் முக்கிய கடல் உணவு ஏற்றுமதி நாடுகளாகத் திகழ்கின்றன என்று அந்தப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.