ஏற்ற, இறக்கத்தில் பங்குச்சந்தை: சென்செக்ஸ் 105 புள்ளிகள் உயர்வு

இந்த வாரத்தின் முதல் வர்த்தக தினமான திங்கள்கிழமை பங்குச்சந்தை இறுதியில் நேர்மறையாக முடிந்தது.
ஏற்ற, இறக்கத்தில் பங்குச்சந்தை: சென்செக்ஸ் 105 புள்ளிகள் உயர்வு
Updated on
1 min read

இந்த வாரத்தின் முதல் வர்த்தக தினமான திங்கள்கிழமை பங்குச்சந்தை இறுதியில் நேர்மறையாக முடிந்தது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 105 புள்ளிகள் உயர்ந்து நிலைபெற்றது.

உலகளாவிய சந்தைக் குறிப்புகள் கலவையாக இருந்தன. இதன் தாக்கத்தால் உள்நாட்டுச் சந்தை சரிவுடன் தொடங்கியது. அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி விகித முடிவுக்காக முதலீட்டாளர்கள் காத்திருப்பதால், உள்நாட்டுச் சந்தை பெரும்பாலான நேரம் நிலையற்ற தன்மையில் இருந்துவந்தது. இருப்பினும், பிற்பகலில் கிடைத்த ஓரளவு ஆதரவால் நேர்மறையாக முடிந்தது. குறிப்பாக, ஐடி, எஃப்எம்சிஜி பங்குகள் விற்பனையை எதிர்கொண்ட நிலையில், ஆட்டோ, மெட்டல், ஃபார்மா, ஹெல்த்கேர், ரியால்ட்டி பங்குகளுக்கு ஆதரவு கிடைத்தது. இது சந்தை வலுப்பெற உதவியது என்று பங்கு வர்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சந்தை மதிப்பு: இதற்கிடையே, சந்தை மூலதன மதிப்பு ரூ.29 ஆயிரம் கோடி உயர்ந்து வர்த்தக முடிவில் ரூ.378.79 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் கடந்த வெள்ளிக்கிழமை ரூ.848.56 கோடிக்கு பங்குகளை வாங்கியிருந்த நிலையில், உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.682.26 கோடிக்கு பங்குகளை விற்றுள்ளது புள்ளிவிவரத் தகவல் மூலம் தெரிய வந்துள்ளது.

சென்செக்ஸ் முன்னேற்றம்:

காலையில் 56.13 புள்ளிகள் குறைந்து 72,587.30-இல் தொடங்கிய சென்செக்ஸ், 72,314.16 வரை கீழே சென்றது. பின்னர், பிற்பகலில் அதிகபட்சமாக 72,985.89 வரை மேலே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 104.99 புள்ளிகள் (0.14தவீதம்) உயர்ந்து 72,748.42-இல் நிறைவடைந்தது. மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வர்த்தகமான 4,056 பங்குகளில் 2,008 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 1,932 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன. 116 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன.

டாடா ஸ்டீல் அபாரம்: சென்செக்ஸ் பட்டியலில் டாடா ஸ்டீல் (5.69 சதவீதம்), எம் அண்ட் எம் (3.05 சதவீதம்), ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் (2.98 சதவீதம்), டாட்டா மோட்டார்ஸ் (2.75 சதவீதம்), சன்ஃபார்மா, (1.47 சதவீதம்), ரிலையன்ஸ் (1.45 சதவீதம்) உள்பட மொத்தம் 14 பங்குகள் ஆதாயப் பட்டியலில் வந்தன. அதே சமயம், இன்ஃபோசிஸ், டிசிஎஸ், டைட்டன், விப்ரோ, ஹிந்துஸ்தான் யுனிலீவர், நெஸ்லே ஆகியவை 1 முதல் 2 சதவீதம் வரை குறைந்தன. இவை உள்பட மொத்தம் 16 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன.

நிஃப்டி 32 புள்ளிகள்

உயர்வு: தேசிய பங்குச்சந்தையில் 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி வர்த்தக இறுதியில் 32.35 புள்ளிகள் (0.15 சதவீதம்) உயர்ந்து 22,055.70-இல் முடிவடைந்தது. வர்த்தகத்தின் போது 21,916.55 வரை கீழே சென்ற நிஃப்டி, பின்னர்அதிகபட்சமாக 2123.70 வரை மேலே சென்றது. நிஃப்டி பட்டியலில் 21 பங்குகள்ஆதாயப் பட்டியலிலும், 29 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும்

இருந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com