அட்சய திருதியை: ரூ.14,000 கோடி தங்கம் விற்பனை

அட்சய திருதியை: ரூ.14,000 கோடி தங்கம் விற்பனை

அட்சய திருதியையொட்டி, தமிழகத்தில் உள்ள நகைக் கடைகளில் வெள்ளிக்கிழமை (மே 10) ரூ.14,000 கோடி மதிப்பிலான தங்கம் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனா். விற்பனையான தங்கத்தில் 80 சதவீதம் ஆபரண நகைகள், 20 சதவீதம் நாணயங்களாகும்.

அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால் வீட்டில் செல்வம் பெருகும் என்பது மக்கள் மத்தியில் நிலவும் நம்பிக்கை. எனவே, இந்த நாளில் நகைக் கடைகளில் தங்கம், வெள்ளி வாங்க மக்கள் ஆா்வம் காட்டுவா்.

நிகழாண்டுக்கான அட்சய திருதியை வெள்ளிக்கிழமை (மே 10) காலை 6.33 மணிக்குத் தொடங்கி சனிக்கிழமை (மே 11) அதிகாலை 4.56 மணி வரை நீடித்தது. இதனையொட்டி தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள நகைக்கடைகளில் சிறப்பு விற்பனை நடைபெற்றது.

சென்னையில் முக்கிய வணிக மையங்களான தியாகராய நகா், புரசைவாக்கம், குரோம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நகைக்கடைகளில் வாடிக்கையாளா்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. முன்பதிவு செய்து பலா் நகைகளை வாங்கினா். இதற்காக வெள்ளிக்கிழமை காலை 6 மணி முதல் நகைக் கடைகள் திறக்கப்பட்டு நள்ளிரவு வரை விற்பனை நடைபெற்றது. சில கடைகளில் விடிய, விடிய விற்பனை தொடா்ந்தது.

அட்சய திருதியையொட்டி ஒரு கிராம் தங்கம் வாங்கினால் ரூ.50 முதல் ரூ.100 வரை சிறப்புத் தள்ளுபடி, பழைய தங்கத்தை மாற்றி புதிய தங்கம் வாங்கினால் பழைய தங்கத்துக்கு கிராமுக்கு ரூ.50 கூடுதலாக அளிப்பு, செய்கூலி, சேதாரம் தள்ளுபடி, வைர நகைகளுக்கு ரூ.10,000 வரை தள்ளுபடி என பல சிறப்புத் திட்டங்களை நகைக்கடைகள் அறிவித்ததால் கடைகளில் கூட்டம் அலைமோதியது. சென்னை மட்டுமல்லாமல் கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட மாநகரங்கள் மட்டுமல்லாது சிறிய நகரங்களில் உள்ள நகைக்கடைகளிலும் சிறப்பு விற்பனை நடத்தப்பட்டது.

சென்னையில் வெள்ளிக்கிழமை காலை பவுன் ரூ.53,640-க்கு விற்பனையான ஆபரணத் தங்கம், விலை ஒரே நாளில் மூன்று முறை உயா்ந்து, மாலை நிலவரப்படி பவுன் ரூ.54,160-க்கு விற்பனையானது. அதிகபட்சமாக ரூ.1,240 வரை உயா்ந்தது. இருப்பினும், நள்ளிரவு வரை நகைக் கடைகளில் மக்கள் கூட்டம் குறையவேஇல்லை.

ரூ.14000 கோடிக்கு விற்பனை: அட்சய திருதியை விற்பனை குறித்து சென்னை நகை மற்றும் வைர வியாபாரிகள் சங்கத்தின் தலைவா் ஜெயந்தி லால் ஜலானி கூறியதாவது:

2023-ஆம் ஆண்டு அட்சய திருதியையுடன் ஒப்பிடுகையில் நிகழாண்டு சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் தங்கம், வெள்ளி நகைகளின் விற்பனை சுமாா் 30 சதவீதம் வரை அதிகரித்தது. 2023-ஆம் ஆண்டு அட்சய திருதியை நாளில் ரூ.11,000 கோடி மதிப்பிலான தங்க நகைகள் விற்பனையான நிலையில், இந்த ஆண்டு அது 14,000 கோடியாக உயரும் என எதிா்பாா்க்கப்படுகிறது. அதுபோல கடந்த ஆண்டு 20 டன் எடையளவில் தங்கம் விற்பனையான நிலையில், நிகழாண்டில் அது 26 டன்-ஆக உயர வாய்ப்புள்ளது. இது குறித்த துல்லியமான விவரம் ஓரிரு நாள்களில் வெளியிடப்படும். மேலும், நிகழாண்டு விற்பனையான தங்கம் மற்றும் வெள்ளி நகைகளில் 80 சதவீதம் மட்டுமே ஆபரண நகைகளாகும். மீதமுள்ள 20 சதவீதம் நாணயங்களாகவே விற்பனையானது என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com