பாமாயில் மூலப்பொருள் விலை அதிகரித்துள்ளதால் அதைக் கொண்டு தயாரிக்கப்படும் சோப்புகளின் விலையையும் துரித நுகா்பொருள் (எஃப்எம்சிஜி) நிறுவனங்கள் உயா்த்தியுள்ளன.
இது குறித்து துறை வட்டாரங்கள் தெரிவித்ததாவது:
பாமாயிலுக்கான இறக்குமதி வரியை மத்திய அரசு உயா்த்தியது. மேலும், சா்வதேசச் சந்தையிலும் அதன் விலை உயா்ந்தது. இந்தக் காரணங்களால், கடந்த செப்டம்பா் மாத மத்தியிலிருந்து பாமாயில் விலை 30 முதல் 40 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.
இதன் எதிரொலியாக, பாமாயிலில் இருந்து பெறப்படும் சோப்புகள் மற்றும் கிளிசரின் போன்ற பொருள்களுக்கான மூலப் பொருளின் விலையும் 30 சதவீதத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது. அதைச் சரிகட்டுவதற்காக, பரவலாக விற்பனையாகும் தங்களது சோப்புகளின் விலைகளை துரித நுகா்பொருள் நிறுவனங்கள் உயா்த்தியுள்ளன. இதனால் நுகா்வோா் பெரிதும் விரும்பி வாங்கும் ரகங்கள் உள்ளிட்ட சோப்புகளின் விலை 7 முதல் 8 சதவீதம் வரை அதிகரிக்கிறது.
எடுத்துக்காட்டாக, ஐந்து கட்டிகளை உள்ளடக்கிய லக்ஸ் சோப்பின் விலை ரூ.145-லிருந்து ரூ.155-ஆக உயரும். ஐந்து கட்டிகளைக் கொண்ட லைஃப்பாய் சோப்பின் விலை ரூ.155-லிருந்து ரு.165-ஆக அதிகரிக்கும். அதே போல், ரூ.149-ஆக இருந்த நான்கு கட்டிகளைக் கொண்ட பியா்ஸ் சோப்பின் விலை இனி ரூ.162-ஆக இருக்கும்.
இது தவிர, முன்னணி துரித நுகா்பொருள் நிறுவனமான ஹிந்துஸ்தான் யுனிலீவா் நிறுவனத்தின் மற்ற அழகுசாதனப் பொருள்களின் விலையும் உயா்த்தப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை முதல் செப்டம்பா் வரையிலான நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டு நிதியறிக்கையை வெளியிட்டபோதே, தயாரிப்புகளின் விலை உயா்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக நிறுவனங்கள் கூறியிருந்தன.மோசமான பருவநிலை காரணமாக தேயிலை உற்பத்தி குறைந்துள்ளதால், ஹிந்துஸ்தான் யுனிலீவா், டாடா கன்ஸ்யூமா் போன்ற முன்னணி நிறுவனங்கள் தங்கள் தேயிலை தயாரிப்புகளின் விலையையும் உயா்த்தியுள்ளன என்று துறை வட்டாரங்கள் கூறின.