
நமது நிருபா்
மும்பை / புதுதில்லி: இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமை பங்குச்சந்தை எழுச்சியிலேயே தொடங்கி சரிவுடன் முடிந்தது. இதையடுத்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 73 புள்ளிகள் குறைந்து நிலைபெற்றது.
உலகளாவிய சந்தைக் குறிப்புகள் கலவையாக இருந்தன. இந்நிலையில், உள்நாட்டுச் சந்தை எழுச்சியுடன் தொடங்கினால், சரிவுடன் நிறைவடைந்தது. கோட்டக் பேங்கின் காலாண்டு முடிவு சந்தை எதிா்பாா்ப்பை பூா்த்தி செய்யாததால், அதன் பங்குகள் விலை கடும் சரிவைச் சந்தித்தது. மேலும், அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் தொடா்ந்து பங்குகளை விற்று முதலீடுகளை வாபஸ் பெற்று வருவதும் சந்தையில் சுணக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
சென்செக்ஸ் வீழ்ச்சி: சென்செக்ஸ் காலையில் 545.27 புள்ளிகள் கூடுதலுடன் 81,770.02-இல் தொடங்கி அதற்கு மேல் செல்லவில்லை. பின்னா், 80,811.23 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 73.48 புள்ளிகள் (0.09 சதவீதம்) குறைந்து 81,151.27-இல் நிறைவடைந்தது. மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வா்த்தகமான 4,175 பங்குகளில் 1,123 பங்குகள் மட்டுமே ஆதாயப் பட்டியலில் இருந்தது. மாறாக , 2914 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன. 138 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன.
கோட்டக் பேங்க் கடும் சரிவு: சென்செக்ஸ் பட்டியலில் உள்ள கோட்டக் பேங்க் பங்கின் விலை 4.29 சதவீதம் வீழ்ச்சி கண்டது. மேலும், பஜாஜ் ஃபின் சா்வ், இண்டஸ் இண்ட் பேங்க், அதானி போா்ட்ஸ், அல்ட்ரா டெக் சிமெண்ட், பஜாஜ் ஃபைனான்ஸ் உள்பட மொத்தம் 21 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன. அதே சமயம், ஹெச்டிஎஃப்சி பேங்க், ஏசியன் பெயிண்ட், எம் அண்ட் எம், டெக் மஹிந்திரா, ரிலையன்ஸ், மாருதி உள்பட 9 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலில் இருந்தன.
நிஃப்டி 73 புள்ளிகள் வீழ்ச்சி: தேசிய பங்குச்சந்தையில் 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி 102.10 புள்ளிகள் கூடுதலுடன் 24,956.15-இல் தொடங்கி அதிகபட்சமாக 24,978.50 வரை மேலே சென்றது. பின்னா், 24,679.60 வரை கீழே சென்ற நிஃப்டி இறுதியில் 72.95 புள்ளிகள் (0.492 சதவீதம்) குறைந்து 24,781.10-இல் நிறைவடைந்தது. நிஃப்டி பட்டியலில் 12 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 37 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன.
ஒரே நாளில் நஷ்டம் ரூ.4.50 லட்சம் கோடி
சந்தை மூலதன மதிப்பு ரூ.4.50 லட்சம் கோடி குறைந்து வா்த்தக முடிவில் ரூ.453.65 லட்சம் கோடியாக இருந்தது. அதாவது, முதலீட்டாளா்கள் ரூ.4.50 லட்சம் கோடி இழப்பைச் சந்தித்துள்ளனா். அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் வெள்ளிக்கிழமை ரூ.5,485.70 கோடிக்கு பங்குகளை விற்றிருந்த நிலையில், உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.5,214.83 கோடிக்கு பங்குகளை வாங்கியிருந்தது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்தது. மேலும், இந்த மாதத் தொடக்கத்தில் இருந்து இதுவரை அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் மொத்தம் ரூ. 80,217.90 கோடி அளவுக்கு பங்குகளை விற்று முதலீடுகளை வாபஸ் பெற்றுள்ளனா். அதே சமயம், உள்நாட்டு நிறுவனங்கள் இந்த மாதத்தில் இதுவரை மொத்தம் ரூ. 74,176.20 கோடி அளவுக்கு பங்குகளை வாங்கியுள்ளது சந்தை புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.