தங்கம் விலை கட்டுக்கடங்காமல் உயர்ந்துகொண்டே சென்றாலும், தீபாவளி மற்றும் வட மாநிலங்களில் தீபாவளிக்கு அடுத்தடுத்த நாள்களில் கொண்டாடப்படும் தந்தேராஸ் நாள்களிலும் தங்கம் வாங்குவது புதிய சாதனை படைக்கும் என்றே நிபுணர்கள் கணித்துள்ளனர்.
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் விலை ரூ.60 உயர்ந்து ரூ.7,375 ஆக உள்ளது. ஒரு சவரன் தங்கம் விலை ரூ.480 உயர்ந்து ரூ.59 ஆயிரமாக உள்ளது. அதே வேளையில் 24 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.8,045க்கும், ஒரு சவரன் ரூ.64,360க்கும் விற்பனையாகிறது.
இந்த ஆண்டு தந்தேராஸ் மற்றும் தீபாவளிக்கு விலையுயர்ந்த நகைகளின் தேவை வழக்கம் போல அதிகரித்தே உள்ளது. எனவே, இந்த தீபாவளி காலத்தில், உள்நாட்டு சந்தையில் தங்கம் விற்பனை ரூ.30,000 கோடியைத் தாண்டும் என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.
இதையும் படிக்க.. தீபாவளியன்று மழை பெய்யுமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வதென்ன?
தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது, தங்கத்தை நம்பகமான சொத்தாகக் கருதும் மக்களுக்கு இன்னும் அதிகமாக வாங்கவே தூண்டுகிறது என்கின்றன தரவுகள். அதே நேரத்தில் வெள்ளி அதன் ஒப்பீட்டளவில் குறைந்த விலையில் கிடைப்பது மற்றும் அதன் விலையும் உயர்ந்து வருவதன் காரணமாக, அண்மைக் காலத்தில், மக்கள் மத்தியில் வெள்ளியில் முதலீடு செய்வதும் அதிகரித்தே வருகிறது.
தீபாவளியையொட்டி வரும் தந்தேராஸ் போன்ற பண்டிகை நாள்களில், தங்கம் அல்லது விலை உயர்ந்த உலோகங்கள் மற்றும் ரத்தினங்களை வாங்குவது, குடும்பத்துக்கு செழிப்பையும், செல்வத்தையும் வாரி வழங்கும் என்ற நம்பிக்கை நீண்ட காலமாக மக்களிடையே இருந்து வருகிறது.
ஒரு பக்கம், பண்டிகையைக் கொண்டாட தங்கம் வாங்குவது, அணிவதற்காக மற்றும் பரிசளிக்க தங்கம் வாங்குவது என காரணங்கள் பல்வேறு வகையில் இருந்தாலும், மறைமுகமாக இது முதலீடாகவே பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, இந்தியப் பங்குச் சந்தைகளில் ஏற்ற இறக்கம் காணப்படும் இந்த நாள்களில் பலரது கவனமும் தங்கம் பக்கம் திரும்புவதும், உயர்வுக்குக் காரணமாகிவிடுகிறது. அதிக ஆபத்து இல்லாத முதலீடாக தங்கம் இருப்பதால், விலை எந்த அளவுக்கு உயர்ந்தாலும், தங்கம் வாங்குவது ஒன்றும் குறைந்துவிடாது, அது புதிய சாதனைகளைப் படைத்துக்கொண்டேதானிருக்கும் என்கிறார்கள் பொருளாதார வல்லுநர்கள்.