
சென்செக்ஸ் 1,000 புள்ளிகளுக்கு மேல் சரிந்தும் நிஃப்டி 23,100 புள்ளிகளுக்குக் கீழும் குறைந்து பங்குச்சந்தை இன்று(பிப். 11) கடும் சரிவுடன் வர்த்தகமானது.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 77,384.98 என்ற புள்ளிகளில் தொடங்கியது.
பிற்பகலில் சென்செக்ஸ் 1,000 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது. வர்த்தக நேர முடிவில் 1,018.20 புள்ளிகள் குறைந்து 76,293.60 புள்ளிகளில் நிறைவு பெற்றது. அதிகபட்சமாக 1,200 புள்ளிகள் வரை சென்செக்ஸ் சரிந்தது.
தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 23,100 புள்ளிகளுக்குக் கீழ் சரிந்தது. வர்த்தக நேர முடிவில், 309.80 புள்ளிகள் குறைந்து 23,071.80 புள்ளிகளில் முடிவடைந்தது.
நிஃப்டியில் அப்போலோ மருத்துவமனை, ஈச்சர் மோட்டார்ஸ், ஸ்ரீராம் நிதி, கோல் இந்தியா, டாடா ஸ்டீல் ஆகிய நிறுவனங்கள் மிகப்பெரிய இழப்பைச் சந்தித்தன.
அதேநேரத்தில் அதானி எண்டர்பிரைசஸ், டிரென்ட், பாரதி ஏர்டெல், கிராசிம் இண்டஸ்ட்ரீஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் விலை லாபத்தில் முடிவடைந்தன.
நுகர்வோர் சாதனங்கள், மூலதனப் பொருள்கள், ஐடி, எண்ணெய் மற்றும் எரிவாயு, சுகாதாரம், மின்சாரம், பொதுத்துறை நிறுவனம், ரியல் எஸ்டேட், தொலைத்தொடர்பு போன்ற அனைத்துத் துறை குறியீடுகளும் 1-3 சதவீதம் வரை சரிந்தன.
நிஃப்டி மிட்கேப் குறியீடு 3 சதவீதமும் ஸ்மால்கேப் குறியீடு 3 சதவீதத்திற்கும் அதிகமாகவும் சரிந்தது.
சரிவு ஏன்?
அமெரிக்க அதிபர் ட்ரம்பின் புதிய பொருளாதாரக் கொள்கைகள் இந்திய பங்குச்சந்தை சரிவுக்கு முக்கியக் காரணாமாகப் பார்க்கப்படுகிறது. ஏனெனில் ட்ரம்பின் அறிவிப்புகளில் வர்த்தகப் போர் உருவாகும் வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.
டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின்மதிப்பு குறைந்து வருகிறது.
டாலர் மதிப்பு உயர்வதால் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் இந்தியப் பங்குகளை தொடர்ந்து விற்று வருகிறார்கள். இதுவும் பங்குச்சந்தையின் தொடர் சரிவுக்குக் காரணமாக இருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.