
இந்திய பங்குச் சந்தை வணிகம் இன்று (பிப். 12) மீண்டும் சரிவுடன் தொடங்கியது. சென்செக்ஸ் 157 புள்ளிகளும், நிஃப்டி 78 புள்ளிகளும் சரிவுடன் தொடங்கின.
நேற்றைய பங்குச் சந்தை வணிகமானது 5வது நாளாகச் சரிவுடன் முடிந்த நிலையில், இன்றைய தொடக்கமும் சரிவுடனேயே இருந்தது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் அடுத்தடுத்த வரிவிதிப்பு சிறு - குறு நிறுவனப் பங்குகளை முற்றிலுமாக முடக்கியுள்ளது. பெரிய மற்றும் நடுத்தர நிறுவனங்களின் பங்குகளிலும் இவை எதிரொலிக்கின்றன.
மோடியின் பயணம் எதிரொலிக்குமா?
அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அதிபர் டிரம்ப்பை சந்தித்து இன்று பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இதில் சர்வதேச அளவிலான மற்றும் இந்தியா உடனான வணிகம், பொருளாதார திட்டமிடல் குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சந்திப்புக்கு பிறகு பங்குச் சந்தையில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
காலை 10 மணி நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 834.39 புள்ளிகள் சரிந்து 75,469.77 புள்ளிகளாக வணிகம் நடைபெற்று வருகிறது. மொத்த வணிகத்தில் இது 1.08 சதவீதம் சரிவாகும்.
தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 200.50 புள்ளிகள் சரிந்து 22,826.25 புள்ளிகளாக வணிகம் நடைபெற்று வருகிறது. இது மொத்த வணிகத்தில் 1.06 சதவீதம் சரிவாகும்.
26 நிறுவனங்கள் சரிவு
காலை 10 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் பட்டியலில் உள்ள முதல் 30 தரப் பங்குகளில் 4 நிறுவனங்களின் பங்குகள் மட்டுமே உயர்வுடன் உள்ளன. எஞ்சிய 26 நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் காணப்படுகின்றன.
அதிகபட்சமாக டெக் மஹிந்திரா 0.97%, டிசிஎஸ் 0.91%, சர்ன்பார்மா 0.22%, இன்ஃபோசிஸ் 0.14% உயர்வுடன் இருந்தன.
நிஃப்டி பட்டியலில் உள்ள 50 தரப் பங்குகளில் எல்கி எகியூப்மெண்ட், ஷினைடர், யூனிடெட் பிரீவரீஸ், வெல்ஸ்பூன் கார்ப், டெக் மஹிந்திரா உள்ளிட்ட நிறுவனங்கள் ஆதாயப் பட்டியலில் இருந்தன.
வெளிநாட்டு சந்தை நிலவரம்
இந்திய பங்குச் சந்தைகள் தொடர் சரிவை சந்தித்து வரும் நிலையில், ஆஸ்திரேலிய பங்குச் சந்தை நிலையானதாக உள்ளது. ஆஸ்திரேலியாவை ஒப்பிடும்போது ஜப்பான் பங்குச் சந்தை ஏற்றத்துடனேயே நீடித்து வருகிறது.
திங்கள் கிழமை ரூ. 1.84 லட்சம் கோடி வெளிநாட்டு நிதி வெளியேற்றம் நடந்தது. செவ்வாய்க்கிழமை ரூ. 1.73 லட்சம் கோடி வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பங்குகளைத் திரும்பப் பெற்றனர்.
நேற்றைய நிலவரப்படி, சந்தை மூலதன மதிப்பு ரூ.8.77 லட்சம் கோடி குறைந்து வா்த்தக முடிவில் ரூ.440.99 லட்சம் கோடியாக இருந்தது. முதலீட்டாளா்களுக்கு ரூ.8.77 கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டது.
மேலும், அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் வியாழக்கிழமை ரூ.4,224.92 கோடிக்கு பங்குகளை விற்றிருந்த நிலையில், உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.3,943.24 கோடிக்கு பங்குகளை வாங்கியிருந்தது.
இதையும் படிக்க | இரும்புக்கு 25% கூடுதல் வரி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.