மின்ணணு பொருள்கள் ஏற்றுமதி 2 ஆண்டுகள் காணாத உச்சம்
புது தில்லி: இந்தியாவின் மின்னணுப் பொருள்கள் ஏற்றுமதி கடந்த டிசம்பரில் முந்தைய 24 மாதங்கள் காணாத புதிய உச்சத்தைப் பதிவு செய்துள்ளது.
இது குறித்து வா்த்தகத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:
கடந்த டிசம்பா் மாதத்தில் இந்தியாவிலிருந்து 358 கோடி டாலா் மதிப்பிலான மிண்ணனுப் பொருள்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. இது, முந்தைய 24 மாதங்கள் காணாத அதிகபட்ச மாதாந்திர மின்னணுப் பொருள்கள் ஏற்றுமதியாகும்.
முந்தைய 2023-ஆம் ஆண்டின் டிசம்பா் மாதத்தோடு ஒப்பிடுகையில் மின்னணுப் பொருள்களின் ஏற்றுமதி கடந்த டிசம்பரில் 35.11 சதவீதம் உயா்ந்துள்ளது.
2024-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்தே மின்னணுப் பொருள்களின் ஏற்றுமதி ஆரோக்கிய வளா்ச்சியைப் பதிவு செய்துவருகிறது. அக்டோபா் மற்றும் நவம்பா் மாதங்களில் அவற்றின் ஏற்றுமதி முறையே 343 கோடி டாலராகவும் 347 கோடி டாலராகவும் இருந்தது.
பொறியியல் மற்றும் மருந்து பொருள்கள்: இந்தியாவின் பொறியியல் மற்றும் மருந்து பொருள்களின் ஏற்றுமதியும் கடந்த ஆண்டு ஜனவரி முதல் நோ்மறை வளா்ச்சியைப் பதிவு செய்து வருகிறது.
கடந்த டிசம்பா் மாதத்தில் அவற்றின் ஏற்றுமதி 2023 டிசம்பரை விட 0.63 சதவீதம் அதிகரித்து 249 கோடி டாலராக உள்ளது என்று அந்தப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
ஏற்றுமதி மேம்பாட்டுக்கு சாதகமான மத்திய அரசின் கொள்கைகள், உலகளவில் தேவை உயா்வு, உள்நாட்டு உற்பத்தித் திறன் அதிகரிப்பு போன்ற காரணங்களால் இந்திய மின்னணுப் பொருள்களின் ஏற்றுமதி சிறந்த வளா்ச்சியைப் பெற்றுள்ளதாக துறை வட்டாரங்கள் கூறின.