சரிவைக் கண்ட இந்தியன் ஆயில் நிகர லாபம்

இந்தியன் ஆயில் காா்ப்பரேஷனின் (ஐஓசி) எரிபொருள் விற்பனை புதிய உச்சத்தைப் பதிவு செய்திருந்தாலும், அதன் நிகர லாபம் 64 சதவீதம் சரிந்துள்ளது.
சரிவைக் கண்ட இந்தியன் ஆயில் நிகர லாபம்
Updated on

புது தில்லி: கடந்த டிசம்பா் காலாண்டில் நாட்டின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமான இந்தியன் ஆயில் காா்ப்பரேஷனின் (ஐஓசி) எரிபொருள் விற்பனை புதிய உச்சத்தைப் பதிவு செய்திருந்தாலும், அதன் நிகர லாபம் 64 சதவீதம் சரிந்துள்ளது.

இது குறித்து நிறுவனம் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

2024-25-ஆம் நிதியாண்டின் அக்டோபா்-டிசம்பா் காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.2,873.53 கோடியாக உள்ளது. இது, முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டின் அதே காலாண்டோடு ஒப்பிடுகையில் 64 சதவீதம் சரிவு. அப்போது நிறுவனம் ரூ.8,063.69 கோடி நிகர லாபம் ஈட்டியிருந்தது.

இருந்தாலும், நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டான ஜூலை-செப்டம்பா் காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் மதிப்பீட்டுக் காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் அதிகரித்துள்ளது. முந்தைய காலாண்டில் அது ரூ.189.01 கோடியாக இருந்தது.

அந்நியச் செலாவணி இழப்புகள், கச்சா எண்ணெய் விலைக்கும் சுத்திகரிக்கப்பட்ட எரிபொருள்களின் விலைக்கும் இடையிலான வேறுபாடு குறைந்தது போன்ற காரணங்களால் மதிப்பீட்டுக் காலாண்டில் நிறுவனத்தின் விற்பனை புதிய உச்சத்தைப் பதிவு செய்திருந்தாலும், நிகர லாபம் சரிந்துள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com