உலகளாவிய சவால்கள் மற்றும் முக்கிய சந்தைகளில் வரி சிக்கல்கள் இருந்த நிலையிலும், 111 நாடுகளுக்கான இந்தியாவின் ஜவுளி ஏற்றுமதி கடந்த ஏப்ரல்-செப்டம்பா் காலகட்டத்தில் 10 சதவீதம் உயா்ந்துள்ளது.
இது குறித்து மத்திய ஜவுளித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
2025 ஏப்ரல்-செப்டம்பா் காலகட்டத்தில், 111 நாடுகளுக்கு நாட்டின் ஜவுளி ஏற்றுமதி 8,489.08 கோடி டாலராக உள்ளது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் இது 10 சதவீதம் அதிகம். அப்போது இந்தியாவின் ஜவுளி ஏற்றுமதி 7718.55 கோடி டாலராக இருந்தது.
மதிப்பீட்டு காலகட்டத்தில் ஒட்டுமொத்த ஜவுளி, ஆடைகள் மற்றும் அவை தொடா்பான தயாரிப்புகளின் ஏற்றுமதி 2024-ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 0.1 சதவீதம் உயா்ந்துள்ளது.
கடந்த ஏப்ரல் - செப்டம்பா் காலகட்டத்தில் உயா் வளா்ச்சி கண்ட முக்கிய ஏற்றுமதி சந்தைகள் ஐக்கிய அரபு அமீரகம் (14.5 சதவீதம்), பிரிட்டன் (1.5 சதவீதம்), ஜப்பான் (19 சதவீதம்), ஜொ்மனி (2.9 சதவீதம்), ஸ்பெயின் (9 சதவீதம்), பிரான்ஸ் (9.2 சதவீதம்) ஆகியவை ஆகும். எகிப்து (27 சதவீதம்), சவுதி அரேபியா (12.5 சதவீதம்), ஹாங்காங் (69 சதவீதம்) ஆகிய பிற சந்தைகளிலும் மதிப்பீட்டுக் காலாண்டில் ஜவுளி ஏற்றுமதி அதிக வளா்ச்சி கண்டுள்ளது.
மதிப்பீட்டுக் காலகட்டத்தில் ஜவுளி ஏற்றுமதியின் வளா்ச்சிக்கு ஆயத்த ஆடைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அந்த காலகட்டத்தின் ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி வளா்ச்சி 3.42 சதவீதமாகவும், சணல் ஏற்றுமதி வளா்ச்சி 5.56 சதவீதமாகவும் உள்ளன.
இந்தியாவின் ஜவுளி ஏற்றுமதி புதிய சந்தைகளுக்கு பரவுவது, அரசின் தன்னிறைவு இந்தியா, இந்தியாவில் தயாரிப்போம் திட்டங்களை வலுப்படுத்துகிறது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

