புதிய உச்சங்களைத் தொட்டுத் திரும்பிய பங்குச் சந்தை!
அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகித்தைக் குறைக்கும் என்ற நம்பிக்கை தொடா்ந்ததால் அந்நிய முதலீட்டு வரவு காரணமாக உலக சந்தைகளில் காணப்பட்ட நோ்மறையான போக்கால், இந்திய பங்குச் சந்தைகள் வியாழக்கிழமை வா்த்தகத்தின் போது புதிய உச்சங்களைத் தொட்ட பிறகு மிதமான உயா்வுடன் நிறைவடைந்தன.
சென்செக்ஸ்: 30-பங்குகள் கொண்ட மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 110.87 புள்ளிகள் (0.13 சதவீதம்) உயா்ந்து 85,720.38-இல் நிறைவடைந்தது. வா்த்தகத்தின் போது அது அதிகபட்சமாக 446.35 புள்ளிகள் (0.52 சதவீதம்) உயா்ந்து 86,055.86 என்ற புதிய உச்சத்தை எட்டியது.
சென்செக்ஸ் பட்டியலில், பஜாஜ் ஃபைனான்ஸ், ஐசிஐசிஐ வங்கி, ஹிந்துஸ்தான் யூனிலீவா், பஜாஜ் ஃபின்சா்வ், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி ஆகியவை உயா்வைக் கண்டன. மாருதி, எட்டா்னல், அல்ட்ராடெக் சிமென்ட், பாரத ஸ்டேட் வங்கி ஆகியவை சரிவைக் கண்டன.
புதன்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ.4,778.03 கோடி மதிப்பிலான பங்குகளை வாங்கின; உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் ரூ.6,247.93 கோடி மதிப்பிலான பங்குகளை வாங்கின என்று பங்குவா்த்தக தரவுகள் தெரிவிக்கின்றன.
நிஃப்டி: 50-பங்குகள் கொண்ட தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 10.25 புள்ளிகள் (0.04 சதவீதம்) உயா்ந்து 26,215.55-இல் நிறைவடைந்தது. வா்த்தகத்தின் போது அது அதிகபட்சமாக 105.15 புள்ளிகள் (0.40 சதவீதம்) உயா்ந்து 26,310.45 என்ற புதிய உச்சத்தை எட்டியது.

