

மும்பை: அதிகரித்து வரும் அரசியல் பதற்றங்களுக்கு நடுவில், தகவல் தொழில்நுட்பம், நுகர்வோர் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கித் துறை பங்குகளில் ஏற்பட்ட சரிவால், சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இன்று சரிந்து முடிவடைந்தன.
இது தவிர, தொடர்ந்து வெளியேறி வரும் வெளிநாட்டு நிதி மற்றும் புதிய வரிகள் தொடர்பான நிச்சயமற்ற தன்மைகளும் முதலீட்டாளர்களைக் கலக்கமடையச் செய்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
இன்றைய காலை நேர வர்த்தகத்தின் போது, சென்செக்ஸ் 442.49 புள்ளிகள் சரிந்து 83,185.20 புள்ளிகளாக இருந்தது. வர்த்தக முடிவில் 30 பங்குகளைக் கொண்ட சென்செக்ஸ் 244.98 புள்ளிகள் சரிந்து 83,382.71 புள்ளிகளாகவும் 50 பங்குகளைக் கொண்ட நிஃப்டி 66.70 புள்ளிகள் சரிந்து 25,665.60 புள்ளிகளாக நிலைபெற்றது.
சென்செக்ஸில் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், ஏசியன் பெயிண்ட்ஸ், மாருதி, சன் பார்மா, ஹிந்துஸ்தான் யூனிலீவர், ஐசிஐசிஐ வங்கி, கோடக் மஹிந்திரா வங்கி, டெக் மஹிந்திரா, ஹெச்டிஎஃப்சி வங்கி மற்றும் லார்சன் & டூப்ரோ உள்ளிட்ட பங்குகள் சரிந்தும் மறுபுறம் டாடா ஸ்டீல், என்டிபிசி, ஆக்சிஸ் வங்கி மற்றும் அல்ட்ராடெக் சிமென்ட் ஆகியவை பங்குகள் உயர்ந்தன.
நிஃப்டி-யில் டாடா ஸ்டீல், என்டிபிசி, ஓஎன்ஜிசி, ஆக்சிஸ் வங்கி, ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்த அதே சமயம் டாடா கன்ஸ்யூமர், டிசிஎஸ், ஏசியன் பெயிண்ட்ஸ், மாருதி சுசுகி, எச்யுஎல் ஆகியவை சரிந்தன.
உலோகம், பொதுத்துறை வங்கி, மின்சாரம், எண்ணெய் & எரிவாயு குறியீடுகள் 0.5 முதல் 2% வரை உயர்ந்த நிலையில் ஆட்டோமொபைல், தகவல் தொழில்நுட்பம், ரியல் எஸ்டேட் உள்ளிட்ட குறியீடுகள் 0.5 முதல் 1% வரை சரிந்தன.
சுமார் 7.98 லட்சம் பங்குகள் கைமாறியதைத் தொடர்ந்து பாலி கேப் இந்தியாவின் பங்கின் விலை 3% சரிந்தன. 3வது காலாண்டு வசூல் 22% அதிகரித்ததாலும், நிறுவனத்தின் முன்கூட்டிய விற்பனை 17% உயர்ந்ததாலும் புரவங்கரா பங்கின் விலை 9% உயர்ந்தன.
3வது காலாண்டு லாபம் 45% குறைந்ததால் டாடா எல்க்ஸியின் பங்கின் விலை 4% சரிந்தன. சுமார் ரூ.119.92 கோடி மதிப்பிலான ஆர்டரைப் கையகப்படுத்தியதால் ஓஸ்வால் பம்ப்ஸின் பங்குகள் 1% வரை உயர்ந்தன.
உள்நாட்டில் ஆர்டரைப் பெற்றதையடுத்து மினி டயமண்ட்ஸ் பங்குகள் 2.5% வரை உயர்ந்தன. 3வது காலாண்டு லாபம் குறைந்தபோதிலும் 5பைசா கேபிடல் பங்குகள் 3% உயர்ந்தன. ரூ.15.99 கோடி மதிப்பிலான ஆர்டரைப் பெற்றதால் ரயில்டெல் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவின் பங்கின் விலை 4% உயர்ந்தன. 3வது காலாண்டு வருவாய் வெளியானதைத் தொடர்ந்து யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவின் பங்குகள் 8% உயர்ந்தன.
தரவுகளின் அடிப்படையில், வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் நேற்று (செவ்வாக்கிழமை) ரூ.1,499.81 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ள நிலையில் உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் ரூ.1,181.78 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளனர்.
ஆசிய சந்தைகளில், தென் கொரியாவின் கோஸ்பி குறியீடு, ஜப்பானின் நிக்கேய் 225 குறியீடு மற்றும் ஹாங்காங்கின் ஹாங் செங் குறியீடு ஆகியவை உயர்ந்த நிலையில் ஷாங்காய் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு சரிவுடன் முடிவடைந்தன.
ஐரோப்பிய சந்தைகள் உயர்ந்த நிலையில், அமெரிக்க சந்தைகள் நேற்று சரிவுடன் முடிவடைந்தன.
சர்வதேச ப்ரென்ட் கச்சா எண்ணெய், 0.99% சரிந்து பீப்பாய் ஒன்றுக்கு 64.82 அமெரிக்க டாலராக உள்ளது.
மகாராஷ்டிரத்தில் நடைபெறும் மாநகராட்சி தேர்தல்களை முன்னிட்டு, ஜனவரி 15 ஆம் தேதியன்று பங்குச் சந்தைக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.