

மும்பை: ஆற்றல் மற்றும் உலோகத் துறைப் பங்குகளின் மீதான ஈர்ப்பால், இந்திய பங்குச் சந்தையின் வர்த்தகம் 2வது நாளாக இன்றும் ஏற்றத்துடன் வர்த்தகமாயின.
சாதகமான நிலையில் தொடங்கிய பங்குச் சந்தை வர்த்தகம், முதல் பாதியில் முன்னேறி, நிஃப்டி இன்றைய நாளின் உச்சபட்சமாக 25,372.10 புள்ளிகளைத் தொட்டது. இருப்பினும், வர்த்தகத்தின் மத்தியில் முதலீட்டாளர்கள் லாப நோக்கில் பங்குகள் விற்பனை செய்ததால், பங்குச் சந்தை சற்றே ஏற்ற-இறக்கத்தில் வர்த்தகமான நிலையில், கடைசி நேரத்தில் முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்கியதன் காரணமாக பங்குச் சந்தை இன்றைய உச்சபட்ச நிலைக்கு சென்று முடிவடைந்தன.
வர்த்தக முடிவில், சென்செக்ஸ் 487.20 புள்ளிகள் உயர்ந்து 82,344.68 ஆகவும், நிஃப்டி 167.35 புள்ளிகள் உயர்ந்து 25,342.75 ஆக நிலைபெற்றது. அதே வேளையில், நிஃப்டி மிட்கேப் குறியீடு 1.66%, ஸ்மால்கேப் குறியீடு 2.26% உயர்ந்தன.
துறை வாரியாக இன்று ஊடகம், உலோகம், எரிசக்தி, எண்ணெய் & எரிவாயு, ரியல் எஸ்டேட், பொது துறை வங்கி உள்ளிட்ட குறியீடுகள் தலா 1 முதல் 4% வரை உயர்ந்த நிலையில் எஃப்எம்சிஜி, நுகர்வோர் சாதனங்கள், மருந்து உள்ளிட்ட துறை பங்குகள் சரிந்தன.
சென்செக்ஸில் எடர்னல், பஜாஜ் ஃபைனான்ஸ், பவர் கிரிட், டிரென்ட், மஹிந்திரா & மஹிந்திரா மற்றும் அல்ட்ராடெக் சிமென்ட் ஆகியவை உயர்ந்த நிலையில் மாருதி, சன் பார்மா, இன்ஃபோசிஸ் மற்றும் பார்தி ஏர்டெல் உள்ளிட்ட பங்குகள் சரிந்தன.
நிஃப்டி-யில் பாரத் எலக்ட்ரானிக்ஸ், ஓஎன்ஜிசி, எடர்னல், கோல் இந்தியா மற்றும் ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ் ஆகியவை உயர்ந்தும் மறுபுறம் டாடா கன்ஸ்யூமர், ஏசியன் பெயிண்ட்ஸ், மாருதி சுசுகி, மேக்ஸ் ஹெல்த்கேர் மற்றும் சன் பார்மா உள்ளிட்ட பங்குகள் சரிந்து முடிவடைந்தன.
பங்கு குறித்த அடிப்படையில், டிவிஎஸ் மோட்டார் 3வது காலாண்டு லாபம் 52% உயர்ந்தையடுத்து, நிறுவனத்தின் பங்குகள் 4.7% உயர்ந்தன. ரூ.114 கோடி அளவிற்கு அங்கீகாரக் கடிதத்தில் தன்னிடம் உள்ளது என்று தெரிவித்ததால் எம்ஐசி எலக்ட்ரானிக்ஸ் பங்குகள் 10% அதிகரித்தன.
ஆர்சிலர் மிட்டல் நிறுவனத்திடமிருந்து 248.5 மெகாவாட் விண்ட் ஆர்டரைப் பெற்றதால் சுஸ்லான் எனர்ஜி பங்குகள் 4.5% உயர்ந்தன. 3வது காலாண்டு முடிவுகள் சிறப்பாக இருந்தபோதிலும் விஷால் மெகா மார்ட் பங்குகள் 3% சரிந்தன. 3வது காலாண்டு லாபம் 36% சரிந்ததால் ஆர்பிஜி லைஃப் சயின்சஸ் பங்குகள் 6% சரிந்தன.
சிறந்த காலாண்டு முடிவுகள் இருந்தபோதிலும் பிசி ஜூவல்லர்ஸ் பங்குகள் 3.5% சரிந்தன. லாபம் 116% உயர்ந்த பிறகும் பிகாஜி ஃபுட்ஸ் இன்டர்நேஷனல் பங்குகளின் விலை 2% உயர்ந்தன. வலுவான வருவாயால் கோபால் ஸ்நாக்ஸ் பங்குகள் 4% உயர்ந்தன.
ஓஎஃப்எஸ் வழியாக இந்துஸ்தான் ஜிங்கி 6.7 கோடி பங்குகளை விற்பனை செய்ததால் வேதாந்தா பங்குகள் 4% உயர்ந்தன. ரூ.242.5 கோடி மதிப்புள்ள ஆர்டருக்கு மிகக் குறைந்த ஏலதாரராக உருவெடுத்ததன் மூலம் ஆர்விஎன்எல் பங்குகள் 6% உயர்ந்தன.
கான்கார்ட் பயோடெக், ஒன்சோர்ஸ் ஸ்பெஷாலிட்டி பார்மா, சின்ஜீன் இன்டர்நேஷனல், குஜராத் ஃப்ளோரோகெமிக்கல்ஸ், பாலி மெடிக்கர், ஜோதி லேப்ஸ் உள்ளிட்ட 240க்கும் மேற்பட்ட பங்குகள் இன்று 52 வார குறைந்த விலையை எட்டியது.
உலகளாவிய ப்ரென்ட் கச்சா எண்ணெய், பீப்பாய் ஒன்றுக்கு 0.62% சரிந்து 67.25 அமெரிக்க டாலராக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.