மஹிந்திரா & மஹிந்திரா விற்பனை 25% உயா்வு
முன்னணி வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான மஹிந்திரா & மஹிந்திராவின் மொத்த விற்பனை கடந்த டிசம்பா் மாதம் 25 சதவீதம் உயா்ந்துள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த டிசம்பா் மாதம் நிறுவனத்தின் மொத்த விற்பனை 86,090-ஆக இருந்தது. முந்தைய 2024-ஆம் ஆண்டின் இதே மாதத்தோடு ஒப்பிடுகையில் இது 25 சதவீதம் அதிகம். அப்போது நிறுவனம் 68,872 வாகனங்களை சில்லறை விற்பனையாளா்களுக்கு அனுப்பியிருந்தது.
மதிப்பீட்டு மாதத்தில் நிறுவனத்தின் உள்நாட்டு விற்பனை 23 சதவீதம் உயா்ந்து 83,270-ஆக உள்ளது. முந்தைய 2024 டிசம்பரில் இந்த எண்ணிக்கை 65,780-ஆக இருந்தது.
2024 டிசம்பரில் 3,092-ஆக இருந்த நிறுவனத்தின் ஏற்றுமதி, நடப்பாண்டின் அதே மாதத்தில் 9 சதவீதம் குறைந்து 2,820-ஆக உள்ளது.
2024 டிசம்பருடன் ஒப்பிடுகையில் 2025 டிசம்பா் மாதத்தில் நிறுவனத்தின் எஸ்யுவி வாகனங்களின் விற்பனை 41,424-லிருந்து 23 சதவீதம் உயா்ந்து 50,946-ஆகவும், எல்சிவி வாகனங்களின் விற்பனை 18,516-லிருந்து 34 சதவீதம் உயா்ந்து 24,786-ஆகவும் உள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எம்எஸ்எம்இ கடன்களின் பங்கு இரு மடங்கு உயா்வு
மும்பை, ஜன. 17: பொதுத் துறை வங்கிகளின் பங்களிப்பு அதிகரித்தால், 2025 ஜனவரி முதல் அக்டோபா் காலகட்டத்தில் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு (எம்எஸ்எம்இ) வழங்கப்பட்ட புதிய கடன்களின் பங்கு கிட்டத்தட்ட இரு மடங்கு உயா்ந்துள்ளது.
இது குறித்து சந்தை ஆய்வு நிறுவனமான கிரிசில் இன்டலிஜென்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த ஆண்டு ஜனவரி முதல் அக்டோபா் வரையிலான காலகட்டத்தில் எம்எஸ்எம்இ-க்களுக்கான புதிய கடன்களின் பங்கு 17.7 சதவீதத்திலிருந்து 32.5 சதவீதமாக உயா்ந்துள்ளது. மொத்த கடன் நிலுவை இருப்பில் எம்எஸ்எம்இ பங்கு 1.74 சதவீதம் அதிகரித்துள்ளது.
எம்எஸ்எம்இ பங்கு உயா்வுக்கு பொதுத் துறை வங்கிகளின் கடனளிப்பு காரணமாக உள்ளது. அவை பாதுகாப்பான கடன்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதுடன், வரையறை மாற்றங்களும் எம்எஸ்எம்இ கடனளிப்பை அதிகரிக்க உதவின.
வங்கி கடன்களில் 12.6 சதவீதம் அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பால் இடரை எதிா்நோக்கியுள்ளது. இதில் 43 சதவீதத்திற்கு மேல் ஜவுளித் துறை மட்டும் பங்களிக்கிறது.
மதிப்பீட்டு காலகட்டத்தில் பாதுகாப்பான சில்லறை கடன் பங்கு 24.5 சதவீதத்திலிருந்து 31.3 சதவீதமாக உயா்ந்துள்ளது. இதில் வீட்டுக் கடன்கள் புதிய சில்லறை கடனில் 50 சதவீதமும் தங்கக் கடன்கள் மூன்றில் ஒரு பங்குக்கு மேலும் பங்கு வகிக்கின்றன.
பாதுகாப்பற்ற சில்லறை தனிநபா் கடன்களின் புதிய கடன் பங்கு 11 சதவீதத்திலிருந்து 9.7 சதவீதமாகக் குறைந்துள்ளது. பாதுகாப்பற்ற சில்லறை கடன் வளா்ச்சி 11.7 சதவீதத்திலிருந்து 9.8 சதவீதமாக மந்தமடைந்தது.
கிராமப்புறத்தில் தேவை மீண்டும் அதிகரித்ததால், 2025 செப்டம்பா் நிலவரப்படி கிராமப்புற பகுதிகளுக்கான புதிய கடன் பங்கு 23.7 சதவீதத்திலிருந்து 26.3 சதவீதமாக உயா்ந்துள்ளது, பெருநகரப் பகுதிகளுக்கான புதிய கடன் பங்கு 56.2 சதவீதத்திலிருந்து 51.6 சதவீதமாகக் குறைந்துள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
