

மும்பை: உலகளாவிய வர்த்தக வரி உள்ளிட்ட நிச்சயமற்ற நிலைகளுக்கு மத்தியில், முன்னணி நிறுவனங்களான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், எடர்னல் மற்றும் ஐசிஐசிஐ வங்கி ஆகியவற்றில் ஏற்பட்ட பெரும் இழப்பை தொடர்ந்து, பங்குச் சந்தைக் குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இன்று(ஜன. 19) சரிவுடன் முடிவடைந்தன.
எஃப்.எம்.சி.ஜி மற்றும் ஆட்டோ உள்ளிட்ட பங்குகளை முதலீட்டாளர்கள் வாங்கியதால் குறியீடுகள் இன்றைய குறைந்தபட்ச அளவிளிருந்து சற்றே மீண்ட நிலையில், இந்திய ரூபாயின் மதிப்பு பலவீனமடைந்ததும், இந்தியப் பங்குகளிலிருந்து தொடர்ந்து வெளியேறி வரும் வெளிநாட்டு மூலதனம் உள்ளிட்டவை முதலீட்டாளர்களைப் பதற்றமடைய செய்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
இன்றைய காலை நேர வர்த்தக நேரத்தின் போது, சென்செக்ஸ் 672.04 புள்ளிகள் சரிந்து 82,898.31 புள்ளிகளாக இருந்தது. வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 324.17 புள்ளிகள் சரிந்து 83,246.18 புள்ளிகளாகவும், 50 பங்குகளைக் கொண்ட நிஃப்டி 108.85 புள்ளிகள் சரிந்து 25,585.50 புள்ளிகளாக நிலைபெற்றது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிகர லாபம் 3-வது காலாண்டில் ரூ.18,645 கோடியாக எவ்வித மாற்றமுமின்றி இருந்ததால் அதன் பங்கு 3.04% சரிந்தன.
சென்செக்ஸில் ஐசிஐசிஐ வங்கி, எடர்னல், டைட்டன், அதானி போர்ட்ஸ், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் மற்றும் அல்ட்ராடெக் சிமென்ட் உள்ளிட்ட பங்குகள் சரிந்த நிலையில் இன்டர்குளோப் ஏவியேஷன், டெக் மஹிந்திரா, ஹிந்துஸ்தான் யூனிலீவர் மற்றும் பஜாஜ் ஃபைனான்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் உயர்ந்தன.
நிஃப்டி-யில் விப்ரோ, எடர்னல், டாடா மோட்டார்ஸ் பேசஞ்சர் வெஹிக்கிள்ஸ் மற்றும் மேக்ஸ் ஹெல்த்கேர் ஆகியவை சரிந்த நிலையில் இன்டர்குளோப் ஏவியேஷன், டெக் மஹிந்திரா, கோடக் மஹிந்திரா வங்கி, எச்.யு.எல் மற்றும் மாருதி சுசுகி உள்ளிட்ட பங்குகள் உயர்ந்தன.
பிஎஸ்இ மிட்கேப் குறியீடு, முக்கியக் குறியீடுகளுக்கு இணையாக 0.4% சரிந்த அதே சமயம் ஸ்மால்கேப் குறியீடும் 1.3% வீழ்ச்சியடைந்தன.
டிசம்பர் காலாண்டில் ஐசிஐசிஐ வங்கியின் ஒருங்கிணைந்த லாபம் 2.68% குறைந்து ரூ.12,537.98 கோடியாக இருந்ததையடுத்து அதன் பங்குகள் 2.26% சரிந்தன. இதனிடையில் வங்கியின் 3வது காலாண்டு ஒருங்கிணைந்த லாபம் 4 சதவீதத்திற்கும் மேலாக சரிந்து ரூ.12,883 கோடியாக உள்ளது.
ஆசிய சந்தைகளில், தென் கொரியா கோஸ்பி குறியீடு மற்றும் ஷாங்காய் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு உயர்ந்தன, ஜப்பான் நிக்கி 225 குறியீடு மற்றும் ஹாங்காங் ஹாங் செங் குறியீடு சரிவுடன் முடிவடைந்தன.
ஐரோப்பிய சந்தைகள் கணிசமாக சரிந்த நிலையில் அமெரிக்க சந்தைகள் கடந்த வாரம் வெள்ளிக்கிழமையன்று சரிவுடன் முடிவடைந்தன.
வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் ரூ.4,346.13 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ள நிலையில் உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் ரூ.3,935.31 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளனர்.
இந்திய ரூபாய் கடந்த ஒரு மாதத்தில் 2வது முறையாக டாலருக்கு ஒன்றுக்கு ரூ.91 என்ற எல்லையை கடந்து, இறுதியில் அமெரிக்க டாலருக்கு நிகராக 14 காசுகள் சரிந்து ரூ.90.92ஆக நிலைபெற்றது.
உலகளாவிய ப்ரென்ட் கச்சா எண்ணெய், பீப்பாய்க்கு ஒன்றுக்கு 1.22% சரிந்து 63.35 அமெரிக்க டாலராக உள்ளது.
புதிய பட்டியல்
தேசிய பங்குச் சந்தை மற்றும் நிஃப்டி-யில் பாரத் கோக்கிங் கோல் பட்டியலிடப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.