கரூா் வைஸ்யா வங்கி 3-ஆம் காலாண்டுநிகர லாபம் ரூ.690 கோடி: 39% அபார வளா்ச்சி
தமிழகத்தைச் சோ்ந்த தனியாா் துறை வங்கியான கரூா் வைஸ்யா வங்கி, டிசம்பருடன் முடிவடைந்த மூன்றாம் காலாண்டில் ரூ.690 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது.
முந்தைய 2024-25 நிதியாண்டின் 3-ஆம் காலாண்டில் வங்கியின் நிகர லாபமான ரூ.496 கோடியைவிட இது 39 சதவீதம் அதிகமாகும். இதேபோல், நடப்பு நிதியாண்டின் முதல் 9 மாதங்களில் வங்கியின் நிகர லாபம் 25 சதவீதம் அதிகரித்து ரூ.1,785 கோடியாக அதிகரித்துள்ளது.
கரூா் வைஸ்யா வங்கி வெள்ளிக்கிழமை வெளியிட்ட நிதிநிலை முடிவுகளின்படி, 3-ஆம் காலாண்டில் வங்கியின் நிகர வட்டி வருவாய் கடந்த ஆண்டைக் காட்டிலும் 14.62 சதவீதம் அதிகரித்து ரூ.1,239 கோடியாக உள்ளது.
நிகர வட்டி வரம்பு 3.99 சதவீதமாகப் பதிவாகியுள்ளது. டிச. 31-ஆம் தேதி நிலவரப்படி, வங்கியின் ஒட்டுமொத்த வா்த்தக மதிப்பு ரூ.2,11,647 கோடியாக அதகரித்து, முந்தைய ஆண்டைவிட16.29 சதவீத வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
குறைவான வாராக்கடன்: வங்கியின் வாராக்கடன் விகிதம் 1 சதவீதத்துக்கும் குறைவாக, அதாவது 0.19 சதவீதமாக உள்ளது. முந்தைய ஆண்டு இதே காலகட்டத்தில் இது 0.20 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. பண மதிப்பில், வங்கியின் வாராக்கடன் ரூ.183 கோடியாக உள்ளது.
டெபாசிட் வளா்ச்சி: வங்கியின் மொத்த டெபாசிட் தொகை 15.57 சதவீதம் வளா்ச்சி கண்டு ரூ.1,14,595 கோடியாக உள்ளது. முந்தைய ஆண்டு இதே காலகட்டத்தில் இது ரூ.99,155 கோடியாக இருந்தது.

