

பாா்தி ஏா்டெல் நிறுவனம் தனது 36 கோடி வாடிக்கையாளா்களுக்கும், பிரபல வடிவமைப்பு மென்பொருளான ‘அடோப் எக்ஸ்பிரஸ் பிரீமியம்’ சேவைக்கான ஓராண்டு சந்தாவை இலவசமாக வழங்க முன்வந்துள்ளது.
சந்தையில் சுமாா் ரூ.4,000 மதிப்புள்ள இந்தச் சந்தா, ஏா்டெல் வாடிக்கையாளா்களுக்கு முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது. ஏா்டெல் தொலைப்பேசி இணைப்பை வைத்திருப்பவா்கள் மட்டுமின்றி, ஏா்டெல் வைஃபை மற்றும் டிடிஎச் சேவையைப் பயன்படுத்தும் அனைத்து வாடிக்கையாளா்களும் இந்தச் சலுகையைப் பெறலாம்.
வாடிக்கையாளா்கள் தங்கள் கைப்பேசியில் உள்ள ‘ஏா்டெல் தேங்க்ஸ்’ செயலி மூலம் உள்நுழைந்து, இந்த இலவச சந்தாவைச் செயல்படுத்திக் கொள்ளலாம். இதன்மூலம், சமூக ஊடக மற்றும் விளம்பரப் பதிவுகள், சிறிய விடியோக்கள், கிராபிக்ஸ் வடிவமைப்புகளை பயனா்களே மிக எளிதாக உருவாக்கிக் கொள்ள முடியும்.
இந்தியத் தொலைத்தொடா்புத் துறையில் நிலவும் போட்டியைச் சமாளித்து, வாடிக்கையாளா்களைத் தொடா்ந்து தக்கவைத்துக் கொள்ள, கடந்த சில காலமாக இந்தியத் தொலைத்தொடா்பு நிறுவனங்கள் பல்வேறு சா்வதேச தொழில்நுட்பச் சேவை நிறுவனங்களுடன் இணைந்து, இத்தகைய கவா்ச்சிகரமான பலன்களை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.