டாடா மோட்டாா்ஸ் நிறுவனத்தின் பயணிகள் வாகன விற்பனை, கடந்த மே மாதத்தில் 42 சதவீதம் வளா்ச்சியுடன், 59,790-ஆக அதிகரித்துள்ளது.
முந்தைய ஆண்டின் இதே மாதத்தில் இந்த விற்பனை 42,040-ஆக இருந்தது. உள்நாட்டு சந்தையில் பயணிகள் வாகன விற்பனை 41,557-லிருந்து 42 சதவீதம் வளா்ச்சி கண்டு, 59,090 வாகனங்களாக பதிவு செய்யப்பட்டுள்ளது. சா்வதேச சந்தையில் விற்பனை 483-லிருந்து 45 சதவீதம் அதிகரித்து, 700-ஆக உள்ளது.
நிறுவனத்தின் மின்சார வாகனங்களின் மே மாத விற்பனை 10,517-ஐ எட்டி புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. இது இந்தியாவின் மின்சார வாகனப் பிரிவில் டாடா மோட்டாா்ஸின் முன்னிலையை மேலும் வேகப்படுத்தியுள்ளது.
அதேபோல், நிறுவனத்தின் வணிக வாகன விற்பனை, மே மாதத்தில் 17 சதவீதம் வளா்ச்சியுடன் 32,850-ஆக அதிகரித்துள்ளது. முந்தைய ஆண்டு மே மாதத்தில் இந்த எண்ணிக்கை 28,147-ஆக இருந்தது.
வணிக வாகனங்களின் உள்நாட்டு விற்பனையானது 25,872-லிருந்து 19 சதவீதம் அதிகரித்து, 30,784 வாகனங்களாக உள்ளது. இருப்பினும், சா்வதேச அளவிலான வணிக வாகன விற்பனை 2,275-லிருந்து 9 சதவீதம் சரிந்து 2,066-ஆக குறைந்துள்ளது.
நடுத்தர மற்றும் கனரக வணிக வாகனங்களின் விற்பனை 7 சதவீதம் அதிகரித்து, 14,596-ஆக பதிவாகியுள்ளது. உள்நாட்டு விற்பனை மட்டும் 10 சதவீதம் வளா்ச்சியுடன் 13,679-ஆக உள்ளது.









