இமயத்தின் மடியில்...
சித்தாபூரில் தங்கும் அறையில் லக்கேஜ் எல்லாம் கொண்டு போய் வச்சிட்டு, அந்த சில்லுனு குளிரை அனுபவிக்க தயாரானோம்.பயண களைப்பில் இருந்து விடுபட சித்தாபூரின் தெருவில் நடைபயிற்சி. நடக்கும்போதே


2.
சித்தாபூரில் தங்கும் அறையில் லக்கேஜ் எல்லாம் கொண்டு போய் வச்சிட்டு, அந்த சில்லுனு குளிரை அனுபவிக்க தயாரானோம்.பயண களைப்பில் இருந்து விடுபட சித்தாபூரின் தெருவில் நடைபயிற்சி. நடக்கும்போதே ஒரு டீக்கடையின் முகப்பில் கேதாரின் பழைய படம் ஒன்றை கண்டவுடன், கேதாரை பற்றிய நினைவுகள் பின்னோக்கி போனது ..
சில ஆண்டுகளுக்கு முன்பு கேதார் போய் வந்ததால், அந்த இடத்தின் மீது ஏதோ இனம்புரியாத ஈர்ப்பினால், மறுபடியும் இந்த பயணம்.
2013 ம் ஆண்டு கடும் மழைப்பொழிவால் கேதார் பெரும் அழிவை சந்தித்தது. பல ஆயிரம் மக்கள், குதிரைகள் என இழப்பு கணக்கில்லாமல் இருந்தது. கோவிலுக்கு செல்லும் பாதைகள் மண் சரிவால் காணாமல் போனது. ராம்வாட, கெளரிகுண்ட் போன்ற இடங்கள் பெரும் அழிவை சந்தித்தது. டிவியில் செய்திகளில் பார்க்கும் போதெல்லாம், 'இங்க தானே தங்கியிருந்தோம், இங்க ஒருவர் ஆர்மோனியம் வாசிட்டு இருந்தாரே, இங்க தானே சாப்பிட்டோம், ஆதிசங்கரர் சுவர் முன்பு நின்னு போட்டோ எடுத்தோமே, அச்சச்சோ எல்லாமே தண்ணிலே போயிடுச்சானு’ என்று பார்த்துக்கொண்டிருந்தேன். மீண்டும் ஒரு முறை போக வேண்டும் என்று தோன்றியது அப்போது தான். நினைவு அலைகளில் இருந்து மீண்டு, டீக்கடையில் சாய் சொல்லிவிட்டு, ராஜசேகர்,ஆதி அண்ணாவுடன் பேசிக்கொண்டே அறைக்கு திரும்பினேன். உணவு தயாராக இருந்தது, குளிருக்கு இதமாக ரொட்டி, சாவல், சப்ஜினு அன்பையும் சேர்த்து சுவையாக செய்து கொடுத்தார்கள் ஹோட்டலின் சேவாதாரர்கள்.
சித்தாபூரிலிருந்து அதிகாலையிலே கேதாரை நோக்கி பயணமானோம். சோனபிராயக் வரை வேனில் பயணம். இங்கிருந்துதான் மலையேற்றம் தொடக்கமாகிறது.பயோமெட்ரிக் முறையில் யாத்ரீகர்களின் விவரங்களை சேகரித்து,மருத்துவ பரிசோதனை சீட்டை சரிபார்த்து அனுமதிக்கிறார்கள். குதிரையில் பயணிக்க விரும்பினால் இங்கே குதிரை கிடைக்கும். டோலி வசதியும் உண்டு. உணவகம், டீக்கடை எல்லாம் இருக்கிறது. ஹெலிகாப்டர் பறக்கும் சப்தம் .. படபடபடபடபட .... குப்தகாசியிலிருந்து ஹெலிகாப்டரில் பயணிக்கலாம்.மீண்டும் கேதாரை காண வாய்ப்பு கிடைத்த மகிழ்ச்சியில், " கேதார் பாபா கி ஜெய் " னு உற்சாக கோசத்துடன் பயணத்தின் முதல் அடியை தொடங்கினோம்.
இயற்கையின் சீற்றத்தில் இருந்து மீண்டு வந்தாலும், இன்னமும் அதன் கோர வடுவின் பதிவை மலைகளின் நிலச்சரிவின் தடங்களை காணும் போதே புரிந்தது.ஆற்றின் போக்கு மாறியிருக்குது சில இடங்களில். ஆரம்பமே, நிலச்சரிவில் குவிந்த மண் மேட்டிலிருந்து பாதை தொடங்கியது. மேலே செல்ல செல்ல குளிர தொடங்கியது. பிரமாண்ட மான மலையின் உச்சியிருந்து அருவி நீர் பாதையின் குறுக்கே விழுகிறது. எதிரே வருபவர்களின் நமஸ்காரதிற்கு பதில் நமஸ்காரம் செய்து கொண்டே .. இயற்கையின் மடியில் ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்தேன்.
குதிரையின் காலடி சப்தம், இரும்புலாடதிற்கு பதிலாக ரப்பர் வைத்திருகிறார்கள் மலைபாதைகளில் வழுக்காமல் இருக்க, கவனம் மாறாமல் பாதையின் விளிம்பில் நடக்கும் குதிரையின் அழகு, கம்பீர நடை, யாத்ரீகர்களின் பல மொழிகளின் பேச்சு, நீரோடைகளின் சலசல ஓசை, இப்படியாக 5 கி.மீ. பயணத்தில் கெளரிகுண்ட் போய் சேர்ந்தோம். சில நிமிட ஓய்வு கால்களுக்கு கொடுத்துவிட்டு. குளிருக்கு இதமாக டீ. மீண்டும் பயணம்.
மத்மகேஸ்வர்
சோன்பிராயக்கில் இருந்து மத்மகேஸ்வர் பயணமானோம். இரவு பொழுதில் மலைப்பாதையில் வாகனத்தில் பயணம் மேற்கொள்வது தடைசெய்யபட்டு இருப்பதால், குப்தகாசியில் இரவு தங்கிவிட்டு அதிகாலையில் ரான்சி புறப்பட முடிவானது.
குப்தகாசி.. புராண காலத்தோடு தொடர்புடைய பழமையான ஊர். இங்கு இருக்கும் காசி விஸ்வநாதர் கோவில் அதிர்வுகள் நிறைந்த அருமையான இடம்.கோவில் முன்புறம் கங்கா, யமுனைனு இரு நதிகளில் இருந்து நீர் வருவதாக சொல்கிறார்கள்.இரண்டு நீர்க்குமான சுவையில் வித்யாசம் இருக்கிறது.
யார் வேண்டுமானாலும் தங்கள் கரங்களினால் விஸ்வநாதரை தொட்டு பூசிக்கலாம். சிறிது நேரம் கோவில் அமர்ந்து இருந்துவிட்டு புத்துணர்வுடன் மத்மகேஸ்வரை நோக்கி பயணமானோம்.
வளைந்து நெளிந்து போகும் பாதை,சிறிது விலகினாலும் அதள பாதாளம், உயரே செல்ல செல்ல பாதைகள் எல்லாம் நூலிலை போல தெரிகிறது.இயற்கையின் எழில் நிறைந்த காட்சிகளை கண்டு மகிழ்சியாக இருந்தாலும், பாறைகள் உருண்டு வரும் பகுதினு ஆங்கிலத்தில் எச்சரிக்கை பலகையை பார்க்கும் போதும், சாலைகளில் நிலச்சரிவுகளை பார்க்கும் போதும் அச்சமாக இருந்தாலும், உயிர் மீது ஆசையிருந்தால் இந்த இடங்களை காண முடியாதென்று நினைத்தேன். வேனில் நண்பர்கள், விழிக்கிடைக்குமா அபயக்கரம் கிடைக்குமா பாட்டை பாடிக்கிட்டு இருக்காங்க. பாட்டை கேட்டபடி, இயற்கை காட்சிகளை கண்டு வரும் போதே, ரான்சி வந்தடைந்தோம்.
ரான்சி ... மத்மகேஸ்வர் போகும் வழியில் இருக்கும் சிறிய கிராமம். வாகனம் செல்லும்
பாதை இந்த கிராமத்தோடு முடிகிறது. நடைபயணமாக 18 கி.மீ சென்றால் மத்மகேஸ்வரை அடையலாம். அந்த கிராமத்தில் இருந்த நண்பரின் வழிகாட்டுதல் படி, பயணத்தை தொடர்ந்தோம்.
ரான்சியை கடந்ததும் சரிவான கரடுமுரடான பாதைகள் வரவேற்றன. பிரமாண்ட மலையின் மேலிருந்து விழும் நீர்வீழ்ச்சியில் முகத்தை கழுவி சிறிது ஓய்வெடுத்துவிட்டு, மீண்டும் நண்பர்களுடன் நடையை தொடர்ந்தேன்.நெளிவும் சுளிவுமாக, ஏற்றமும், இறக்கமுமாக பாதை சென்று கொண்டேயிருந்தது. உயரமான மரங்கள்,சலசல நீரோடைனு சில மணி நேரத்தில் Gaundar கிராமத்தை அடைந்தோம். ரான்சி நண்பரின் உறவினர் வீட்டில் உணவு செய்து கொடுத்தார்கள். அன்பான மனிதர்கள் அருமையான உணவு, சிறிது நேரம் ஓய்வுக்கு பின் நடையை தொடர்ந்தோம்.
சிறிது தூரத்தில் இன்னொரு கிராமம், தொடர்ந்து மெதுவாக நடந்து கொண்டே இருந்தோம். சற்று தொலைவில் பஞ்சவடி எனும் இடத்தில் ஓய்வு. அங்கிருந்த அம்மா ஒருவர் எங்களை பற்றிய விவரங்களை கேட்டுவிட்டு பஞ்சகேதார் பயணம் என்றவுடன், மகிழ்சியில் வெள்ளரிகாய் ஒன்றை கொடுத்தார்.
காலையில் 9 மணிக்கு தொடங்கிய பயணம் தொடர்ந்தது. சற்றுக் கடுமையான பாதைதான், மலையேற்றம் விரும்பும் நபர்களே செல்லும் பாதை. மாலையில் இருட்ட தொடங்கியது,குளிரும் எலும்பை ஊடுறுவ தொடங்கியது. இதற்கு மேல் செல்ல வேண்டாம்னு maikhamba கிராமத்தில் இரவு தங்கினோம். சுவையான கிச்சடி, சுட்ட அப்பளத்தோடு உணவை ருசித்துவிட்டு, வெளியே கைகழுவி நிமிரும் போது வெள்ளி காசை வானில் சிதரவிட்டது போல நட்சத்திர கூட்டம் அருமையான காட்சி. குளிர் தந்தியடிக்க ஓடிப்போய் அறைக்குள் நுழைந்து கொண்டேன். நடந்து வந்த களைப்பு அருமையான தூக்கம் ..
விடியும் முன்பு எழுந்து பயணத்திற்கு தயாரானோம். இங்கிருந்து 6 கி.மீ. மத்மகேஸ்வர்.
குளிரை அனுபவித்தபடி நடையை தொடர்ந்தோம். சில மணி நேரத்தில் மத்மகஸ்வரை அடைந்தோம். மலைகளின் பள்ளதாக்கில் அமைந்த பழமையான கோவில். முன்புறத்தில் நீரில் குளியலை முடித்துவிட்டு, கோவில் பூசையில் கலந்து கொண்டு, மத்மகேஸ்வரை தரிசித்துவிட்டு, மீண்டும் ரான்சியை நோக்கி 16 கி.மீ நடையை தொடங்கினோம்.
பஞ்சவடி கிராமத்தில் ஓய்வு. இங்கே கிராமம்னா ஓன்னுரெண்டு வீடு மட்டும் தான் இருக்கும் இங்கே. அருமையான மனிதர்கள். அதிதியை வரவேற்று உபசரிப்பதில் மகிழ்கிறார்கள். "ஜெய் போலே நாத்னு" நமஸ்காரம் சொல்றாங்க. இருட்டுவதற்குள் ரான்சியை அடையனும்னு விரைவாக இறங்கி வந்து மாலை 7 மணிக்கு ரான்சியை அடைந்தோம். ரான்சியில் இரவு தங்கிவிட்டு துங்காநாத் பயணதிற்கு தயாரானோம்.
துங்கநாத்..(tungnath)
ரான்சியில் நண்பரின் வீட்டில் காலை உணவை சாப்பிட்டதும், விடைபெற்றோம்.
துங்கநாத் நோக்கி,செல்லும் வழியில் உக்கிமத்(ukimadh) ஓம்காரேஸ்வர் கோவிலை அடைந்தோம் ..
குளிர் காலத்தில் கேதார் மற்றும் மத்மகேஸ்வர் கோவிலின் உற்சவர் இங்கு கொண்டுவரப்பட்டு பூசிக்கபடும். வடநாட்டு கட்டிடகலையின் வடிவில், பல வண்ணத்தில் முகப்புடன் அழகாகவும் அருமையாக இருக்கிறது கோவில். அங்கு, சிறிது நேரம் இருந்துவிட்டு #சோப்டா (chopta),நோக்கி பயணமானோம்.
சோப்டாவில் இருந்து துங்கநாத் மலையேற்றம் தொடங்கும். பயணதிற்கு தேவையான உணவு ,தண்ணீரை இங்கு வாங்கிக் கொள்ளலாம்.
துங்கநாத் என்றால் சிகரங்களின் நாதன்னு பொருள்படும்.துங்கநாத் உலகிலேயே உயரமான இடத்தில் இருக்கும் சிவன் கோவில். கடல்மட்டதிலிருந்து 3840 மீ உயரத்தில் அமைந்திருக்கிறது. சோப்டாவிலிருந்து 6 கி.மீ உயரத்தில் இருந்தாலும் பாதைகள் செங்குத்தாக இருப்பதால் 5 மணி நேரமாகிறது கோவிலை அடைய.
பாதைகளின் இருபுறமும் உயரமாக வளர்ந்த ஆல்பைன் மரங்களாக இருக்கிறது. இமயதிற்கே உரிய அழகிய மலர்கள் நிறைந்த மலை சரிவுகள்.
பாதைகள் அருமையாக போடபட்டிருந்தாலும், பனி மூட்டத்தால் எதிரே வருபவர்கள் கூட தெரியவில்லை.ஓரிடத்தில் சிறிது ஓய்வெடுத்து டீ அருந்திவிட்டு பயணத்தை தொடர்தோம். சில மணி நேரத்தில் துங்கநாத்தை அடைந்து விட்டோம்.
துங்கநாத் புராண கதைகளோடு தொடர்புடைய இடம். மகாபாரத யுத்ததிற்கு பிறகு பஞ்ச பாண்டவர்கள் சிவனை காண வாரணாசிக்கு வருகிறார்கள். இவர்களை காண விருப்பம் இல்லாமல் அங்கிருந்து குப்தகாசிக்கு வருகிறார், இங்கும் வந்து விட்டார்கள் என்றவுடன் கேதார் நோக்கி சென்றுவிடுகிறார். அங்கு காளை வடிவில் உருமாறி ஓடும் போது பீமன் வாலை பிடித்து இழுக்க பூமிக்குள் நுழைந்து இமாலய மலையில் ஐந்து இடங்களில் உடலின் பாகங்களை சுயம்பு மூர்த்தியாக வெளிபடுத்துகிறார்.
இந்த கதையில் நம்பிக்கை இல்லாவிட்டாலும் நீங்கள் இந்த கோவிலில் திறந்த மனதுடன் அமர்ந்தாலே போதும். உயிரோட்டமுள்ள சக்திநிலை ஆட்கொள்வதை உணரமுடியும். அற்புதமான கோவில். கோவிலில் மாலை 7 மணிக்கு ஆரத்திக்காண சென்றோம். கிடுகிடு குளிரில் அருமையான தரிசனம் கண்டுவிட்டு அறைக்கு திரும்பினோம். கால்களுக்கு சற்று ஓய்வு கொடுக்கலாம், நாளை அதிகாலை சந்திரசிலா போகனும் எல்லோரும் படுக்க போகலாம்னு கேப்டன் சொன்னதும், உறங்கம் வராமல் சிறிது நேரம் குளிரை அனுபவிக்க வெளியே வந்தால், கால்கள் தானாக நடனமாடுகிறது.
சந்திரசிலா ( chandrashila)
அதிகாலையில் 5 மணிக்கு எழுந்து நடுங்கும் குளிரில், மூக்கில் நீராக வடிகிறது. விடியவே இல்லை. இருட்டில் டார்ச் லைட் வெளிச்சத்தில் சந்திரசிலா காண அந்த ஒற்றையடி பாதையில் ஒருவர் பின் ஒருவராக அடியெடுத்து வைத்தோம். 2 கி.மீ தூரத்தில் தான் சந்திரசிலா இருக்கிறது என்றாலும் பக்காவாட்டில் கிடுகிடு பள்ளம் மிரலதான் வைத்தது. உயிருக்கு பயந்தால் இப்படியொரு அனுபவத்தை காணமுடியுமா? ..
நேரம் செல்ல செல்ல பொழுது விடிந்தது. ஒரு மணி நேரத்தில் சந்திரசிலாவை அடைந்தோம். அற்புதம் அற்புதம் .. பிரமாண்டம் பிரமாண்டாம்.. இதை தவிர வேற என்ன சொல்ல, வார்தைகள் கிடையாது வர்ணிக்க. சினிமாவில் வருகிற செட் காட்சி போல பனி முகடுகள் நிறம்பி இருக்கிறது பள்ளதாக்கில். 4000 மீட்டர் உயரத்தில் இருக்கிறோம். இங்கிருந்து பார்த்தால் பஞ்சசுலி, நந்தாதேவி, தூனகிரி( கேள்வி பட்டிருபீங்க பாபாஜி குகை இருக்கும் மலை) , நீலகண்ட் போன்ற மலை சிகரங்களை காணலாம்.
சூரியன் தன் கதிர்களை இந்த மலை முகட்டில் பரவசெய்தவுடன் பனிமலையில் கதிர்களின் ஒளிப்பட்டு தகதகனு பொன்னிரத்தில் மலை ஜொலிக்கிறது. ஆஹா .. அற்புதம். ஆனந்தம்..
இந்த மலையேற்றதிற்கு தேவையான பணமிருந்தால் மட்டுமல்ல, உடல் வலிமையும், மன உறுதியும் இருந்தால் மட்டுமே இப்படியொரு இயற்கையின் அற்புத படைப்பை கண்டு களிக்கலாம். வாய்பிருப்பவர்கள் ஒருமுறை இங்கு பயணமாகி பாருங்கள். நான் சொன்ன எதையும் நம்ப வேண்டாம் .. வந்து பாருங்கள், அனுபவத்தில் உணருங்கள்.. அந்த இடத்தை விட்டு வர மனமில்லாமல் திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டே துங்கநாத் வந்தடைந்தோம். கடும்குளிர் காலத்தில் கோவிலின் நடைவாசல் ஆறுமாத காலம் மூடியிருக்கும். அப்போது முக்மத்தில் உற்சவ மூர்த்திக்கு பூசைகள் நடக்கும்.
புராதன கோவில் இருக்கிறது என்பதை விட இயற்கையின் அற்புதத்தை காணவே மலையேற்ற ஆர்வலர்கள் அதிகம் வருகிறார்கள்.மனதில் சந்திரசிலாவின் காட்சிகளை திரும்ப ஓடவிட்டு, மெதுவாக இறங்கி chopta வந்தடைந்தோம்.
இங்கிருந்து சாகர் (sagar) நோக்கி பயணமானோம்.
தொடரும்....
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...