ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

அன்புடை நெஞ்சம்: அத்தியாயம்-18

உண்மையில், அவன் இன்னும் அவளிடம் தன்னுடைய காதலைச் சொல்லவில்லை. நண்பர்களாகதான் இருக்கிறார்கள். ஆனால் இருவர் மனத்திலும் நேசம் இருக்கிறது.

News image
Updated On :7 ஆகஸ்ட் 2015, 10:04 am

என்.சொக்கன்


ஒரு காதலன். தன் காதலியைக் காண வருகிறான்.

உண்மையில், அவன் இன்னும் அவளிடம் தன்னுடைய காதலைச் சொல்லவில்லை. நண்பர்களாகதான் இருக்கிறார்கள். ஆனால் இருவர் மனத்திலும் நேசம் இருக்கிறது.

அந்தப் பெண் தினை வயலில் கிளிகளை விரட்டும் பணியில் இருக்கிறாள். பயிர்களைக் கிளிகள் நெருங்காமல் துரத்திக்கொண்டிருக்கிறாள்.

இவனோ பெரிய நாட்டின் தலைவன். அவனுடைய மலையில் மூங்கில் குருத்துபோல் தந்தம் கொண்ட ஆண் யானை தன்னுடைய ஜோடியான பெண் யானையை விரும்பிச் செல்கிறது.

வழியில் குறவர்கள் எதிர்ப்படுகிறார்கள். அவர்கள் இந்த யானையைப் பார்த்துக் குரல் எழுப்புகிறார்கள்.

அதனால் பயந்த ஆண் யானை, அங்கிருந்து விலகி, மக்கள் வாழும் ஊர் மன்றத்தை நோக்கிச் செல்கிறது.

அப்படிப்பட்ட ஒரு நாட்டிலிருந்து வந்திருப்பவன் இவன். சுனையில் மலர்ந்த குவளை மாலையை இவளுக்காகக் கொண்டுவந்திருக்கிறான்.

ஆனால், அந்த மாலையைத் தரும்போதும், அவன் தன்னுடைய காதலைச் சொல்லவில்லை. அவளோடு சாதாரணமாகப் பேசுகிறான், இவனும் கிளிகளை விரட்டுகிறான்.

மாலை நேரம் வந்துவிட்டது, அவன் ஊருக்குத் திரும்பவேண்டும், அவளும் தன் வீட்டுக்குச் செல்லவேண்டும்.

அவன் மனம் தயங்குகிறது. அவளோடே நிரந்தரமாக இருந்துவிடலாமே என்று எண்ணுகிறான். ஆனால், அதைச் சொல்ல தைரியம் இல்லை.

இதைப் புரிந்துகொண்ட தோழி, காதலியிடம் பேசுகிறாள், ‘அவன் உன்னைக் காதலிக்கிறான்’ என்று புரியவைக்கிறாள்.

Story image

வாயிலிளங்கண்ணன் எழுதிய குறுந்தொகைப் பாடல் இது:

‘நாகு பிடி நயந்த முளைக்கோட்டு இளம்களிறு

குன்றம் நண்ணி, குறவர் ஆர்ப்ப

மன்றம் போழும் நாடன், தோழி,

சுனைப் பூங்குவளைத் தொடலை தந்தும்

தினைப்புன மருங்கில் படுகிளி ஓப்பியும்

காலை வந்து மாலைப் பொழுதில்

நல்அகம் நயந்து தான்உயங்கிச்

சொல்லவும் ஆகாது அஃதியோனே.'

இன்னொரு காதலன், இவன் தன் காதலியைப் பார்ப்பதற்காக வந்திருக்கிறான். ஆனால், அவள் வீட்டினுள் இருப்பாளா, வெளியே வருவாளா என்று அவனுக்குத் தெரியவில்லை. தவிக்கிறான்.

அப்போது, அவள் வெளியே வருகிறாள். கிளிகளை விரட்டுவதற்காக வயலுக்குச் செல்கிறாள்.

இதைப் பார்த்த காதலனுக்கு மகிழ்ச்சி, ‘கிளிகளே, நீங்கள் வாழ்க’ என்கிறான், ‘பெருவெள்ளம் வந்து இந்த உலகமே மூழ்கிவிட்டாலும், நீங்கள் மட்டும் நிரந்தரமாக வாழுங்கள்!'

‘உனக்கென்ன கிறுக்குப் பிடிச்சிருக்கா? அவ கிளிகளை விரட்டணும்ன்னு கஷ்டப்படறா, நீ என்னடான்னா அதுக்கு வாழ்த்துச் சொல்லிகிட்டிருக்கே?'

‘ஆமா, ஒருவேளை இந்தக் கிளிகள் இல்லைன்னா, அவ வயலுக்கு வரமாட்டா, வீட்டுக்குள்ளயேதான் இருப்பா, நான் அவளைப் பார்க்கறது சிரமம்’ என்கிறான் அவன், ‘இப்போ, கிளிகள் இருக்கறதால அவ வெளியே வரணும், வயல்ல நாங்க சந்திக்கலாம், அந்தப் பக்கம் நிஜக்கிளிங்க மேய, இங்கே நான் என் காதல்கிளியைக் கொஞ்சுவேன்.'

‘அதனால, கிளிகள் குறையவே கூடாது, இன்னும் நிறைய வரணும்’ என்று வாழ்த்துகிற இந்தக் காதலன், ஐங்குறுநூற்றில் வருகிறான், இப்பாடலை எழுதியவர் கபிலர்:

‘வெள்ள வரம்பின் ஊழிபோகியும்

கிள்ளை வாழிய பலவே, ஒள்இழை

இரும்பல் கூந்தல் கொடிச்சி

பெருந்தோள் காவல் காட்டியவ்வே!'

இன்னொரு கபிலர் பாடல் அகநானூற்றில் வருகிறது, அங்கேயும் கிளிகள் வயலை மொய்க்கின்றன, அவற்றை விரட்ட வரும் பெண்கள் சத்தமெடுத்துக் கத்துகிறார்கள்.

அதைக் கிளிகள் பொருட்படுத்துவதில்லை. தங்களுடைய இனத்தை அழைத்து அவையும் கத்துகின்றன.

இப்படி நிஜக்கிளிகளும் பெண்கிளிகளும் கத்துகிற அந்த வயலின் அருகே, ஒரு பலா மரம். அதன் கிளைகளில் அணில்கள் ஆடிக்கொண்டிருக்கின்றன. பெரிய பலாப்பழங்கள் தொங்குகின்றன.

அந்தப் பலாப்பழங்களைப் பறிப்பதற்காக, குறவர்கள் அங்கே குடிசை போட்டுத் தங்கியிருக்கிறார்கள். அருகே ஒரு வேங்கை மரம் நிற்கிறது. தேன் ஒழுகும் அதன் மலர்கள் குடிசைமீது விழுகின்றன. சிறிது நேரத்தில், அந்தக் குடிசை மொத்தமும் மஞ்சள்நிற வேங்கை மலர்களால் மூடப்பட்டுவிடுகிறது.

அங்கே வந்த ஒரு யானை இந்தக் குடிசையைப் பார்க்கிறது. அதைப் புலி என்று நினைத்து பயப்படுகிறது. பக்கத்திலுள்ள மலையை நோக்கி ஓடுகிறது. அதனால் மூங்கில்களெல்லாம் முறிந்து விழுகின்றன.

அந்த மலைநாட்டின் தலைவன், தன்னுடைய காதலியைப் பார்ப்பதற்காக இன்னோர் ஊருக்கு வருகிறான். ஆனால் அவளைக் காணவில்லை. தோழியிடம், ‘நான் என் காதலியைப் பகலில் சந்திக்க இயலாதா? இரவில் வரட்டுமா?’ என்கிறான்.

‘ம்ஹூம், வாய்ப்பே இல்லை’ என்கிறாள் அவள்.

‘ஏன்? என்னாச்சு?'

‘அநேகமா உங்க காதல் விஷயம் எங்க வீட்டுக்குத் தெரிஞ்சுடுச்சுன்னு நினைக்கறேன்’ என்கிறாள் தோழி. ‘எங்கம்மா எங்களை ரொம்ப உன்னிப்பாக் கவனிக்கறாங்க, சும்மா எங்கேயாவது திரும்பினாக்கூட, எங்கே போறே, ஏன் போறேன்னு அப்பா ஆயிரம் கேள்வி கேட்கறார்.'

‘நானும் உன் காதலியும் நெருங்கின சிநேகிதிங்க, ரெண்டு தலை கொண்ட ஒரே பறவைபோல, அவ மனசு எனக்குத் தெரியும்’ என்று சொல்லி நிறுத்துகிறாள் தோழி, ‘இனிமே நீங்க நினைச்சபோதெல்லாம் சந்திக்க இயலாது, ரகசியமா வர்றேன், சந்திக்கறேன்னெல்லாம் சொல்லாம, ஒழுங்கா அவளைப் பெண் கேட்டுத் திருமணம் செஞ்சுக்கோ’ என்று உணர்த்துகிறாள்.

‘யாயே கண்ணினும் கடும்காதலளே,

எந்தையும் நிலன்உறப் பொறாஅன் ‘சீறடி சிவப்ப

எவன்இல குறுமகள் இயங்குதி?’ என்னும்,

யாமே பிரிவு இன்றி இயைந்த துவரா நத்பின்

இருதலைப் புள்ளின் ஓர் உயிர் அம்மே!

ஏனல் அம்காவலர் ஆனாது ஆர்த்தொறும்

கிளிவிளி பயிற்றும் வெளில்ஆடு பெரும்சினை

விழுங்கோள் பலவின் பழுப்பயன் கொண்மார்

குறவர் ஊன்றிய குரம்பை புதைய

வேங்கை தாஅய தேம்பாய் தோற்றம்

புலிசெத்து வெரீஇய புகர்முக வேழம்

மழைபடி சிலம்பில் கழைபடப் பெயரும்

நல்வரை நாட, நீ வரின்

மெல்லியல் ஓரும் தான்வாழலளே.'

வயலில் கிளிகள் பயிர்களைக் கொத்துவது ஒரு குறிப்பிட்ட நாள் வரைதான். அதன்பிறகு, அறுவடை தொடங்கிவிடும், கிளி விரட்டும் வேலை இருக்காது.

ஆகவே, காதலியால் அடிக்கடி வீட்டிலிருந்து வெளியே வர இயலாது. காதலர்கள் சந்திக்கச் சிரமம் ஏற்படும்.

இந்த விஷயத்தைப் பேசும் அகநானூற்றுப் பாடல் ஒன்று, பொதும்பில்கிழான் வெண்கண்ணனார் எழுதியது.

காதலன் மலை நாட்டைச் சேர்ந்தவன். இடி இடித்து மழை பெய்யும் உயர்ந்த பகுதியிலிருந்து வருகிறான்.

அவனுடைய காதலி, தினை வயலைக் காவல் காக்கிறாள். அங்கே கிளிகள் வருகின்றன. அவை யாராலும் எய்ய இயலாத வானவில்லைப்போல் பசுமையான உடல், சிவந்த வாயுடன் இருக்கின்றன. தினைக்கதிர்களைக் கொத்துகின்றன.

ஆனால், அப்படிக் கொத்திய கதிர்களை அதனால் தூக்கிச் செல்ல இயலவில்லை. கனம் தாங்காமல் கீழே போட்டுவிடுகின்றன.

அப்போது அங்கே கானங்கோழிகள் வருகின்றன. கிளி போட்டுவிட்டுச் சென்ற கதிர்களை அவை உண்ணுகின்றன.

இப்படித் தினமும் வயலில் நடந்துவந்த வேலை இப்போது பூர்த்தியாகப்போகிறது, கதிர்கள் அறுவடையாகப்போகின்றன. கிளி விரட்ட அவள் இனி வரமாட்டாள். அவளை அவன் பகல் நேரத்தில் பார்க்க இயலாது.

பரவாயில்லை, இரவில் பார்க்கலாமே.

அதற்கும் வழியில்லை. அவர்கள் ஊரில் தெருவிளக்குகள் போட்டுவிட்டார்கள்.

அன்றைக்குத் தெருவிளக்கெல்லாம் கிடையாதே!

உண்மைதான். ஆனால் அதற்குப் பதிலாக, மணிவிளக்குகள் இருந்தன. அருவியின் பரிசுகள் அவை.

அதாவது, மலைக்குகைகளின் இருட்டில் பாம்புகள் உயர்ந்த மணிகளை உமிழ்கின்றன. அருவி வெள்ளம் அவற்றைக் கொண்டு வந்து ஊரில் போட்டுவிடுகிறது. இரவு நேரத்தில் அவை மின்ன, ஊரில் இருட்டே இல்லை.

‘ஆக, நீங்கள் பகலிலும் சந்திக்க இயலாது, இரவிலும் சந்திக்க இயலாது’ என்கிறாள் தோழி, ‘உன்னுடைய மார்பைத் தழுவ இயலாமல் உன் காதலி சிரமப்படப்போகிறாள், அவள்மீது உனக்குப் பரிதாபம் இல்லையா? விரைவில் திருமண வேலைகளைத் தொடங்கு!'

‘மதிஅரும்பு அன்ன மாசுஅறு சுடர்நுதல்

பொன்நேர் வண்ணம் கொண்டன்று, அன்னோ,

யாங்கு ஆகுவள்கொல் தானே, விசும்பின்

எய்யா வரிவில் அன்ன பைந்தார்ச்

செவ்வாய்ச் சிறுகிளி சிதைய வாங்கிப்

பொறைமெலிந்திட்ட புன்புறப் பெரும்குரல்

வளைசிறை வாரணம் கிளையொடு கவர,

ஏனலும் இறங்கு பொறை உயிர்த்தன, பால்நாள்

நீ வந்து அளிக்குவை எனினே, மால்வரை

மைபடி விடர்அகம் துழைஇ ஒய்என

அருவி தந்த அரவுஉமிழ் திருமணி

பெருவரைச் சிறுகுடி மறுகு விளக்குறுத்தலின்

இரவும் இழந்தனள் அளியள் உரவுப்பெயல்

உரும்இறை கொண்ட உயர்சிமைப்

பெருமலைநாட, நின் மலர்ந்த மார்பே!

அது சரி, கிளி விரட்டப் போன பெண் இப்படிக் காதலனுடன் பேசிக்கொண்டிருந்தால் கிளிகள் தினைப்பயிரை மேய்ந்துவிடாதா? அதைப் பார்த்துப் பெற்றோர் கோபிக்கமாட்டார்களா?

அந்தக் காட்சி நற்றிணையில் வருகிறது, கொள்ளம்பக்கனார் எழுதிய பாடலொன்றில்.

காதலி தினைவயலில் கிளிகளை விரட்டச் செல்கிறாள். ஆனால், அவள் தன் ஜோடியோடு பேசிக்கொண்டிருக்க, கிளிகள் வயலில் புகுந்து வயிறு நிறைய சாப்பிடுகின்றன. இந்த விஷயம் தாய்க்குத் தெரிந்துவிடுகிறது. ‘கிளிங்க மேயும்போது பார்த்துகிட்டுச் சும்மாவா இருந்தே?’ என்று கேட்கிறாள்.

இதனால், காதலிக்குப் பதற்றம், அவசரத்தில் பொய் என்று நினைத்து உண்மையைச் சொல்லிவிடுகிறாள், ‘அம்மா, நான் அங்கே யாரையும் பார்க்கலை, யாரோடயும் சுனையிலே நீராடி விளையாடலை.’

இதைக் கேட்ட தாய்க்கு விவரம் புரிந்துவிடுகிறது. மகள் எங்கேயும் போகக்கூடாது என்று தடை போட்டுவிடுகிறாள்.

மறுநாள், காதலன் வயலுக்கு வருகிறான், தன் காதலியைக் காணாமல் தவிக்கிறான். அவள் வீட்டுப்பக்கம் சென்று பார்க்கிறான்.

இதைக் கவனித்த தோழி, காதலியிடம் பேசுவதுபோல் விஷயத்தைச் சொல்கிறாள், ‘நீ ரொம்ப அப்பாவி, அம்மாகிட்ட இப்படி உண்மையைச் சொல்லி மாட்டிகிட்டியே, இனிமே நீ எப்படி வெளியே போறது? எப்படி அவனைச் சந்திக்கறது? அவனா உன்னைப் பெண் கேட்டு வந்தால்தான் உண்டு!’

‘யாங்குஆகுவமோ, ‘அணிநுதல் குறுமகள்,

தேம்படு சாரல் சிறுதினைப் பெரும்குரல்

செவ்வாய்ப் பைங்கிளி கவர, நீமற்று

எவ்வாய்ச் சென்றனை அவண்?’எனக் கூறி

அன்னை ஆனாள் கழற, முன்நின்று

‘அருவிஆர்க்கும் பெருவரை நாடனை

அறியலும் அறியேன், காண்டலும் இலனே,

வெதிர்புனை தட்டையேன் மலர்பூக் கொய்து

சுனைபாய்ந்துஆடிற்றும் இலன்’என நினைவுஇலை

பொய்யல் அந்தோ வாய்த்தனை, அதுகேட்டுத்

தலைஇறைஞ்சினளே அன்னை,

செலவுஒழிந்தனையால் அளியைநீ புனத்தே.’

ஒரு காதலி தன் காதலனிடம் பேசிக்கொண்டிருக்கிறாள், ‘நேத்திக்கு நான் ஆத்தங்கரையோரமாப் போனேன், அங்கே நிறைய கிளிங்க வந்துச்சு’ என்கிறாள்.

‘அட, அப்புறம்?'

‘அந்தக் கிளிங்கல்லாம் என்னைச் சுத்திப் பறந்துச்சு, ரொம்ப சந்தோஷமா இருந்தது!'

‘இதிலென்ன ஆச்சர்யம்?’ என்கிறான் அவன், ‘பழத்தோட்டத்தைக் கிளிங்க சுத்தறது இயற்கைதானே?'

அவள் அவனைக் கூர்மையாகப் பார்த்து, ‘அதுக்கப்புறம் என்னாச்சு தெரியுமா? அந்தக் கிளிகள்ல ஒண்ணு உன்னைமாதிரி மாறிடுச்சு!'

‘அதுவும் இயற்கைதான், நீ ஒரு கிளி, உன்னைக் காதலிக்கணும்ன்னா நானும் கிளியாதானே மாறணும்?'

Story image

காதல் வானில் இறக்கை விரித்துப் பறக்கும் இந்தக் கிளிகளைக் காட்சிப்படுத்துகிறவர், பழநிபாரதி:

‘நதியோரம் என்னைச் சுற்றிப் பறந்தது கிளிக்கூட்டம்,

கிளிக்கூட்டம் வந்ததெனில் நீயொரு பழத்தோட்டம்!

பறக்கும் கிளிகளிலே, ஒரு கிளி உனைப்போல் உருவெடுக்க,

கிளியே, உனக்காக நானும் கிளிபோல் அவதரிக்க,

றெக்கைகள் கொண்டுவா,

விண்ணிலே பறப்போம்,

உள்ளங்கள் கலப்போம்,

வண்ணம் சூடும் வண்ணக்கிளி!'

இங்கே காதலன் காதலியைக் கிளி என்கிறான். வைரமுத்துவின் திரைப்பாடலொன்றில் காதலியே தன்னைக் கிளி என்று சொல்லிக்கொள்கிறாள், அதற்கான காரணம் வேறு.

காதலன் காதலியின் நாக்கை வர்ணிக்கிறான், ‘உன் நாக்கு இப்படிச் செவந்திருக்கே, நிறைய வெத்தலை போடுவியோ?’ என்கிறான்.

அவளுக்குக் கோபம் வந்துவிடுகிறது. ‘இது வெத்தலை போட்டு வந்த செவப்பு இல்லை, இயற்கையாவே என் நாக்கு செவப்புதான்’ என்கிறாள், ‘வேப்பமரத்துல கிளி இருக்கே, அதோட மூக்குகூடதான் செவந்திருக்கு, அதென்ன வெத்தலையா போடுது?’ என்று பொய்யாகக் கோபிக்கிறாள்.

‘வெடலப்பொண்ணு நுனி நாக்கு,

வெத்தலயாலே செவந்திருக்கு!

வேப்பமரத்துக் கிளி மூக்கு,

வெத்தலபோட்டா செவந்திருக்கு?'

அதே சிவந்த மூக்கை வைத்து இன்னொரு திரைப்பாடலில் அழகிய நாடகத்தைக் காட்டுகிறார் வைரமுத்து.

ஒரு காதலி, தன் காதலனிடம் காதலைச் சொல்லாமல் ஒளிக்கிறாள், இலைகளுக்குள்ளே பச்சைக்கிளி ஒளிவதைப்போல.

காதலன் சிரிக்கிறான், ‘பச்சைக்கிளியாகவே இருந்தாலும், மூக்கு சிவப்புதானே? அதை வைத்து உன் காதலை நான் கண்டுகொண்டுவிட்டேன்’ என்கிறான்:

‘பச்சைக்கிளை, இலைகளுக்குள்ளே

ஒற்றைக்கிளி ஒளிதல்போல,

இச்சை,காதல் நானும் மறைத்தேன்!

பச்சைக்கிளி மூக்கைப்போல,

வெட்கம் உன்னைக் காட்டிக்கொடுக்க,

காதல் உள்ளம் கண்டுபிடித்தேன்!’

சிவந்த கிளியைப் பல பாடல்களில் பார்க்கிறோம், கருத்த கிளியைக் கண்ணதாசன் ஒரு பாடலில் எழுதியிருக்கிறார்:

கன்னங்கருத்த கிளி,

கட்டழகன் தொட்ட கிளி,

அன்னநடை போட்டாளடி, என் செல்லம்மா,

சொன்னமொழி கேட்டாளடி!

வேறு என்ன செய்தாள் அந்தக் கன்னங்கருத்த கிளி?

செப்புச்சிலை எழுதி,

செவத்தபிள்ளை பேர்எழுதி

நம்பிநம்பிப் போனாளடி, என் செல்லம்மா,

நல்வாக்குத் தந்தானடி!

நல்வாக்குத் தந்த காதலனோடு கிளியின் பழக்கத்தை இன்னும் நுணுக்கமாக விவரிக்கிறார் கண்ணதாசன்:

கண்ணும் கண்ணும் பேசையிலே,

கன்னிப்பொண்ணு ஆசையிலே,

மெள்ளமெள்ள வந்தானடி, என் செல்லம்மா,

அள்ளிக்கொண்டுபோனானடி!

ஒரு காதலன், பல பாடல்களை எழுதிவைத்திருக்கிறான். ஆனால், அவை முழுமைபெறாத உணர்வு அவனுக்குள்.

பாடலுக்குப் பண் அமைத்தால் அல்லவா அவை முழுமையாகும்? அதற்கு ஒரு கிளி வருகிறாள். அவன் மகிழ்ச்சியில் திளைக்கிறான். ‘நான் பிறந்த பலனை இன்று அடைந்தேன்’ என்கிறான், ‘அவளைக் கிளிப்பிள்ளை என்று நினைத்தேன், என்னை வென்றுவிட்டாள்’ என மகிழ்கிறான்.

கண்ணதாசனின் திரைப்பாடல் இது:

‘பாடல் ஒரு கோடி செய்தேன்,

கேட்டவர்க்கு ஞானம் இல்லை,

ஆசைக்கிளியே, வந்தாயே பண்ணோடு!

நான் பிறந்த நாளில் இது நல்லநாளே,

சின்னச்சின்ன முல்லை,

கிளிப்பிள்ளை,

என்னை வென்றாளம்மா!’

(தொடரும்)

***

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.