சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

ஜோசப் காம்பெலும் ஆய்ச்சியர் குரவையும்

விஷ்ணு, மூன்றடிகளால் பிரபஞ்சத்தை அளந்தவர் என்கிறது ரிக் வேதம். இதில் அவரது இரண்டு அடிகளே மனிதர்களால் காண முடிந்தவை என்றும், மூன்றாவது அடி மானுடக் கண்களாலோ, பறவைகளின் பறத்தலாலோ எட்டமுடியாத இடத்தில் உள்ளது என்கிறது ரிக். விஷ்ணு தன் பாதங்களால் அளவிடுவதே, பூமியையும் விண்ணுலகங்களையும் ஒழுங்குபட அமைக்கிறது.

News image
Updated On :20 டிசம்பர் 2015, 8:13 am

அரவிந்தன் நீலகண்டன்

புகழ் பெற்ற இறுதி இரவு உணவு காட்சி. அது, பஸ்கா பண்டிகைக் காலம். இரவு உணவுக்கு ஏசுவும் சீடர்களும் கூடியிருக்கிறார்கள். அப்போது ஏசு தன்னை காட்டிக் கொடுக்கப்போகிறவர் யார் என சொல்ல ஆரம்பிக்கிறார். அப்பத் துண்டைத் தோய்த்து யூதாஸிடம் கொடுக்கிறார். இந்த அப்பத் துண்டை எவரிடம் கொடுக்கிறேனோ அவன்தான் என்னை காட்டிக் கொடுக்கப்போகிறான் என்பதைச் சொல்கிறார். யூதாஸிடம், நீ செய்ய வேண்டியதை சீக்கிரமே செய் என்று கூறுகிறார். யூதாஸ், அங்கிருந்து அகன்று தலைமை மத அதிகாரிகளிடம் சென்றார். பின்னர், யூதாஸ் முத்தமிட்டு ஏசுவை காட்டுக் கொடுத்தார்.

Story image

யூதாஸ் ஏன் ஏசுவை காட்டிக் கொடுத்தார்?

முப்பது வெள்ளிக் காசுகளுக்கு ஆசைப்பட்டு காட்டிக் கொடுத்தார் என்பது பொதுவான பதில். ஆனால் அப்படி அல்ல என வைத்துக்கொள்வோம். ஏசு உலகுக்கு வந்த நோக்கம், அவர் சிலுவையில் அறைபடியாமல் நிறைவேறாது. அப்போது அவரை சிலுவையில் அறையவைக்கும் செயலைச் செய்வது அவரது ‘அவதார’ நோக்கத்தை நிறைவேற்ற இன்றியமையாதது. அதனைச் செய்ய அசாதாரணமான ஆன்ம வலு வேண்டும். அதைக் கொண்டிருந்தவர் யூதாஸ் மட்டும்தான். எனவே, யூதாஸுக்கு அப்பத்தைக் கையில் அளித்து ஏசு கூறியது முன்னறிவிப்பு அல்ல; யூதாஸுக்கு ஏசு அளித்த கட்டளை. ஏனெனில், ஏசு பூரணத்துவத்தை அடைய, யூதாஸ் பிரசவச் செவிலியாகச் செயல்பட வேண்டும்.

இந்த மாற்றுப் பார்வையை முன்வைத்தவர் ஜோசப் காம்பெல். இருபதாம் நூற்றாண்டின் புகழ் பெற்ற புராணவியலாளர். 1971-72-களில், கிறிஸ்தவப் புராணத்தில் ஆழ்-படிமங்கள் (archetypes) குறித்து அவர் கிறிஸ்தவ இறையியல் மையங்களில் ஆற்றிய உரைகளில், யூதாஸ் குறித்த இந்த மாற்றுப் பார்வையைப்  பேசுகிறார். காம்பெலின் தனிப்பட்ட ஒரு பார்வை மட்டுமே இது என்றுதான் அன்று அந்த உரையைக் கேட்டவர்கள் கருதியிருப்பார்கள்.

Story image

1983-ல், ஜெனிவாவில் சட்டத்துக்குக் கொஞ்சம் புறம்பான கலைப் பொருட்கள் பண்டைய தோல் சுருள்கள் ஆகியவற்றுக்கான நிழலான சந்தையில், 'யூதாஸ் அருளிய நற்செய்தி’ (Gospel of Judas) இருப்பது கசிய ஆரம்பித்தது. பல கை மாற்றங்கள், திருட்டுகள் எனத் தொடங்கிய அந்த ‘நற்செய்தி’ குறித்த தேடல் வேட்டை, இறுதியில் அது உருப்படியான ஆராய்ச்சியாளர்களின் கரங்களை அடைந்தது. அரிஸோனா பல்கலையும், நேஷனல் ஜியாக்ரஃபிக் அமைப்பினரும் இணைந்து ஆராய்ச்சி செய்து, 'யூதாஸின் நற்செய்தி’ எழுதப்பட்ட பப்பரைஸ் துண்டுகள், கி.பி. 3-ம் நூற்றாண்டாக இருக்கலாம் எனக் கருதுகின்றனர். ஆனால், யூதாஸின் நற்செய்தி என்கிற ஒரு நூல் அதற்கு முன்பே இருந்ததைக் கண்டனம் செய்வதன் மூலம் உறுதிப்படுத்துகிறார் ஐரேனியஸ் என்கிற பிஷப். கி.பி. 180-ம் ஆண்டு, அந்தக் கண்டனங்களை அவர் எழுதியிருக்கிறார். மைய கிறிஸ்தவ இறையியல் 'க்னாஸ்டிக் தப்பிதம்’ (Gnostic heresy: Gnosis என்றால் ஞானம் என்று பொருள்) என அடையாளப்படுத்தும் வகையறாவைச் சார்ந்தது, 'யூதாஸின் நற்செய்தி’.

சுவாரசியம் என்னவென்றால், ஜோசப் காம்பெல் கூறிய அதே விஷயம், இந்த 'யூதாஸின் நற்செய்தி’யில் காணப்படுவதுதான். 'யூதாஸின் நற்செய்தி’யை ஆராய்ச்சி செய்யும் சாப்மன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த மார்வின் மேயர், யூதாஸை தன் மிகச்சிறந்த சீடனாக ஏசு தேர்ந்தெடுத்ததாகக் கூறுகிறார். “பிறருக்கு அது (அதாவது அந்த அளவு ஞானம்) எட்டவில்லை”.

'யூதாஸின் நற்செய்தி’ என்று ஒரு க்னாஸ்டிக் நற்செய்தி நூல் இருப்பது ஜோசப் காம்பெலுக்குத் தெரியாது. ஆனால், அவரால் ஒரு புராணம் தன் பரிணாம வளர்ச்சியில் பல்வேறு வகையில் கிளைவிடும் என்பதை உணர்ந்து, அவற்றிலிருந்து ஒரு மாற்று சாத்தியத்தை முன்வைக்க முடிந்தது. அந்தச் சாத்தியம், வரலாற்றில் உண்மையாகவும் அமைந்திருந்தது என்பதுதான் அதிசயம்.

Story image

ஜோசப் காம்பெல், உலகின் பல பண்பாடுகளின் புராணங்களை ஆராய்ந்தவர். உயிரியலிலும் பயிற்சி உடையவர். இந்திய வேதாந்த மரபில் பிடிப்பு உடையவர். குறிப்பாக, ஸ்ரீ ராமகிருஷ்ண - விவேகானந்த இயக்கத்தினரின் வேதாந்த தாக்கம் கொண்டவர். ஸ்ரீ ராமகிருஷ்ண இயக்கத் துறவியான சுவாமி நிகிலானந்தர் மூலம், இந்தியவியலாளர் ஹென்ரிச் ஸிமரையும் அவர் மூலமாக கார்ல் யுங்கையும் காம்பெல் சந்தித்தார். புராணங்களை அறிதல் குறித்த முக்கியமான பார்வைத் திறப்புகளை இத்தொடர்புகள் மூலமாக காம்பெல் வந்தடைந்தார்.

பொதுவாக, புராணங்களுக்கு நான்கு முக்கியமான செயல்பாடுகள் இருப்பதாக கேம்பெல் கூறுகிறார்.

முதல் செயல்பாடு, பிரபஞ்சத்தின் மாபெரும் இருப்பின் முன்னால் மானுடனுக்கு ஒரு நன்றி கலந்த அற்புதமான வியப்புணர்வை ஏற்படுத்துவது. இதுவே, எந்தப் பண்பாட்டிலும் ஒரு புராணத்தின் மிக முக்கியமானதும், முதன்மையானதுமான செயல்பாடாகும்.

இரண்டாவது செயல்பாடு, மேற்கூறிய வியப்புணர்ச்சியுடன் இணைந்து ஒரு தத்துவ ஒருமையுணர்வை அளிப்பது. பூமி ஏன் சுழல்கிறது? சூரிய சந்திரர்கள் ஏன் சுற்றுகின்றனர்? இந்த ஒழுங்குக்கு அடிப்படையில் இருப்பது என்ன? என்பது போன்ற கேள்விகளுக்குப் பதிலளிக்க முயல்வது. அறிவியலுடன் அடிக்கடி முரண்படும் விஷயம், புராணத்தின் இந்தச் செயல்பாட்டை நேரடிப் பொருளில் புரிந்துகொள்வதுதான்.

மூன்றாவதாக, சமூக ஒழுங்கினை உருவாக்கும் செயல்பாடு. சமூகப் பொருளாதார வரலாற்றுக் காரணிகளுக்கு ஏற்ப தகவமைத்து ஜீவிக்கும் தன்மையைச் சமூகத்துக்கு நல்குகிறது இது. மார்க்ஸிய புராணவியலாளர்கள் புராணச் செயல்பாட்டின் இந்த ஒரு பரிமாணத்தையே தங்கள் சித்தாந்தம் புரிந்த அளவில் முழு உண்மையாகக் காட்ட முயற்சிக்கின்றனர்.

நான்காவதாக, தனி மனிதனின் அக வளர்ச்சிக்கு ஒரு கையேடாகவும் வழிகாட்டியாகவும் புராணங்கள் அமைகின்றன. இந்த நான்கு செயல்பாடுகளையும் எந்தக் கலாசாரத்தின் புராணக் கதை அமைப்புகளிலும் கண்டறிய முடியும்.

எகிப்தில் அடிமைகளாக இருக்கிறபோது, மோசே தன் மாமனாரின் ஆடுகளை மேய்த்துக்கொண்டு, புனிதமான ஒரேப் மலைக்கு வந்தான். அங்கே ஒரு முட்செடியின் நடுவிலிருந்து நெருப்பு உண்டாயிற்று. அவன் உற்றுப் பார்க்கும்போது, அந்த முட்செடி நெருப்பால் எரிந்தும் வெந்துபோகாமல் இருந்தது. அதிலிருந்து இறை குரல் மோசேயை அழைக்கிறது - 'உன் கால்களில் இருக்கிற பாதரட்சையைக் கழற்றிப்போடு; நீ நிற்கிற இடம் பரிசுத்த பூமி’. எகிப்தியரிடமிருந்து யூதரை காப்பாற்றுவதைக் குறித்து மோசேயிடம் யூதர்களின் இறைவன் பேசுகிறார். இப்போது மோசே தன்னிடம் பேசும் இறைவனின் பெயரைக் கேட்கிறார். அதற்கு, இஸ்ரவேல் தேச மக்களின் தெய்வம் தன்னை ‘இருப்பாக இருக்கிறேன்’* என்று சொல்கிறார்.

Story image

செங்கடல் பிளப்பதையும் தரையிலிட்ட கோல்கள் சர்ப்பங்களாக மாறுவதையும் காட்டிலும், ஆண்டவன் தன்னை ‘இருப்பாக இருக்கிறேன்’ எனச் சொல்லும் இந்த இடம்தான் புராணங்களின் முதல் செயல்பாடு என காம்பெல் சொல்வது. பரிசுத்தமான பூமியும், இறை நெருப்பு கனன்றுகொண்டிருக்க, எரியாமல் இருக்கும் முட்செடியும், அதிலிருந்து ‘இருக்கிறவராக இருக்கிறேன்’ என வரும் சப்தமும், பிரபஞ்சம் பெருமர்மத்தின் முன் பெரும் நன்றி கலந்த அற்புத உணர்வினை ஏற்படுத்துகிறது – மோசேக்கு மட்டுமல்ல அதனை உணரும் எவருக்கும்.

புராணத்தின் இரண்டாவது செயல்பாட்டுக்கான மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக அமைவது, யூத விவிலியத்திலிருக்கும் படைப்பு குறித்த கதை. மிகவும் கவித்துவம் நிறைந்த படைப்புப் பாடல்தான் அது. ஒழுங்கின்மையிலிருந்து இறை சங்கல்பத்தால் படைப்பு நிகழும் கவிதையே அது. இயற்கையுடன் மானுடம் இணைந்திருந்ததும், பின்னர் தன்னுணர்வு எழ அது இயற்கையிலிருந்து பிரிவடைவதும் கவித்துவ உருவகங்களாக, அறிவியலுடன் கூடவே வளரும் தன்மை கொண்டவையும்கூட. ஆனால், புராணத்தின் இரண்டாவது செயல்பாட்டுக்கு நேரடித்தன்மை கொள்ளும்போது, அது மோதல்களில் முடிகிறது. பரிணாம அறிவியல் நம்பிக்கையாளர்களுக்கு பைபிளின் படைப்பு குறித்த புராண கவிதைக்கு எதிராக முன்வைக்கப்படுகிறது.

புராணத்தின் மூன்றாவது செயல்பாட்டுக்கான உதாரணங்களும் மிக அதிகமாகவே உள்ளன. நரக-சொர்க்க புராண நம்பிக்கைகள், மறு ஜென்மம் குறித்த புராணங்கள் இவை அனைத்துமே ஏதோ ஒருவிதத்தில் சமூக ஒழுங்கை நிலைநிறுத்துபவை. அவ்வாறே, அரச வம்சத்தினரின் இறை அம்சம் குறித்த புராண நம்பிக்கைகள். சில நேரங்களில், அரச வம்சத்தினர் தமக்காக புராண தோற்றங்களை உருவாக்கிக்கொள்வதும் உண்டு. மாதம் மும்மாரி பெய்ய அரசன் நல்லவனாக இருக்க வேண்டும் என்பதாக உருவாக்கப்பட்ட புராண கதைகள், கற்புடை மாதரின் வலிமை குறித்த புராண கதைகள் இவை எல்லாம் மூன்றாவது செயல்பாட்டை மையமாகக் கொண்டவையே.

Story image

புராணத்தின் நான்காவது செயல்பாடு, தனிமனித வாழ்க்கையை முழுமையாக்குவது. தனிமனித வாழ்க்கை சந்திக்கும் அக நெருக்கடிகளின்போது திசையொளி அளிப்பது. நிழலை பிடிப்பதன் மூலம் வானில் பறக்கும் உயிரினங்களைக் கொல்லும் அரக்கி சிம்ஹிகா. இவள் கடலின் கீழ் வாழ்கிறாள். வானில் பறக்கும் ஹனுமான் இந்த அரக்கியால் இழுக்கப்படுகிறார். அவளால் விழுங்கப்படுகிறார். ஆனால் அவளைக் கொன்று மீண்டு எழுகிறார். நிழல் என்பது உளவியலில் பயன்படுத்தப்படும் ஒரு தொழில்முறை பதம். எந்தப் பெரிய ஆளுமைக்கும் அவரால் மறைக்கப்படும் குண தன்மைகள் ஆழ்மனத்தில் அல்லது நனவிலியில் அமிழ்ந்து கிடக்கும். எந்த அளவு நனவு தளத்தில் அவை மறுக்கப்படுகின்றதோ அதே அளவு வலிமையுடன் அவை நனவிலியில் உறங்கும்.

ஆனால், எப்போது கட்டற்ற சுதந்தரமும் வலிமையும் ஒருவருக்கு ஏற்படுகிறதோ, எப்போது அவர் ஒரு காரியத்தை செய்வதற்கான சங்கல்பத்துடன் களம் இறங்கிறாரோ, எப்போது ஒருவரது தனிப்பட்ட பாய்ச்சல் தொடங்குகிறதோ அப்போது நனவிலியிலிருந்து நிழல்களைப் பிடித்திழுக்கும் அரக்கி மேலே வருகிறாள். உளவியலாளர்கள், கனவுகளின் பரிபாஷையில் ஆழ் கடலை பெரும்பாலும் நனவிலிக்கான குறியீடாகக் கண்டிருக்கிறார்கள். அனுமான் பெரும் வீரன். சிறந்த அறிவாளி. ராம பக்தன். ஆனால், அவருக்கும் நிழல் இருக்கிறது. அவரது நிழல், சிம்ஹிகாவால் பற்றப்படும்போது ஹனுமானாகவே இருந்தாலும்கூட கீழே விழத்தான் செய்கிறார். அரக்கியால் முழுங்கப்படுகிறார். அவரை மீண்டெழ வைப்பது எது? அவர் சீதையைக் கண்டு ராமனின் கணையாழியைக் கொடுக்க வேண்டும். அந்த ராமகாரியத்தில் அவர் வைத்திருக்கும் சித்தமே அவரை மீண்டெழ வைத்தது.

Story image

ஒரு மாணவன் தன் கல்லூரி நாட்களுக்கு வரும்போது ஒரு பழக்கத்துக்கு அடிமையாகிறான். சுதந்தரத்தில் நிகழும் பாய்ச்சலின்போது சிம்ஹிகாவால் பற்றப்படுவதுதான் இது. அவனது சுதந்தரத்தில் அவனது இளம் ரத்த ஆற்றலில் நிழல்கள் மேலே வருகின்றன. சிம்ஹிகாவால் பற்றப்படுகின்றன. பாய்ச்சலே இல்லை என்றால் பயமே இல்லை. ஆனால், பாய்ச்சல் இருக்கும்போது சிம்ஹிகாவை சந்தித்தே ஆக வேண்டும். மீண்டெழத் தேவை, ஒரு பெரும் இலக்கு. வீழ்ச்சிகளிலிருந்து மேலெழ வைக்கும் இலக்கு. தனி மனித வாழ்க்கையின் கையேடாகப் புராணங்கள் மாறும் இடம் இது. (ராமாயணம் இதிகாசம் புராணமல்ல எனக் கூறலாம் - இதிகாசத்தின் புராணக் கூறுகளை முதன்மைப்படுத்தி இங்கே காண்கிறோம்).

ஜோசப் காம்பெலுக்கு விட்டுப்போன ஒரு செயல்பாடு புராணங்களுக்கு உண்டு. தனித்தனியாக நிற்கும் இந்த நான்கு செயல்பாடுகளில் முக்கியமான புள்ளிகளை இணைக்கும் இணைப்பாக அது அமையலாம்.

அது என்ன?

Story image

சிலப்பதிகாரத்தில், ஆய்ச்சியர் குரவை பிரசித்தி பெற்றது. ஆயர் சமுதாய மக்கள், மாயோனாகிய விஷ்ணுவை பாடும் பாடல். அதில் வரும் சில வரிகள் -

வடவரையை மத்தாக்கி வாசுகியை நாணாக்கிக்

கடல்வண்ணன் பண்டொருநாள் கடல்வயிறு கலக்கினையே

கலக்கியகை அசோதையார் கடைகயிற்றாற் கட்டுண்கை

மலர்க்கமல உந்தியாய் மாயமோ மருட்கைத்தே;

அறுபொருள் இவனென்றே அமரர்கணந் தொழுதேத்த

உறுபசியொன் றின்றியே உலகடைய உண்டனையே

உண்டவாய் களவினான் உறிவெண்ணெ யுண்டவாய்

வண்டுழாய் மாலையாய் மாயமோ மருட்கைத்தே;

திரண்டமரர் தொழுதேத்தும் திருமால்நின் செங்கமல

இரண்டடியான் மூவுலகும் இருள்தீர நடந்தனையே

நடந்தஅடி பஞ்சவர்க்குத் தூதாக நடந்தஅடி

மடங்கலாய் மாறட்டாய் மாயமோ மருட்கைத்தே

இப்பாடல்களில் எல்லாம், முதல் இரண்டு வரிகளில் ஒரு பிரபஞ்ச புராண நிகழ்வையும், அடுத்த இரண்டு வரிகளில் ஒரு குறிப்பிட்ட கால-தேச சூழலில் எழுந்த புராண நிகழ்வையும் பேசுகிறார். அவை இரண்டையும் இணைக்கும் ஒரு இழையாக, மாயோனாகிய விஷ்ணு இருக்கிறார். இது ஒரு முரண்நகையாக அதிசயமாக அமைகிறது. இந்த முரணில் இருக்கும் ஒரு நுண்ணிய வெளி, பலவித படைப்புகளுக்கும் சிந்தனை கற்பனை எழுச்சிகளுக்கும் தாவுகளமாக அமைகிறது.

Story image

வடவரையாகிய மேருவை மத்தாக்கி, வாசுகி எனும் பேரரவை கயிறாக்கி பாற்கடல் கடைதல் என்பது சூரிய பாதை நகர்வு முன்செலல் (precession of equinox) எனும் வானியல் நிகழ்வுடன் தொடர்புடையது என்பர் ஆராய்ச்சியாளர்கள். பாற்கடல், விண்மீன்கள் நிறைந்த ஆகாயம். மேரு பூமியின் அச்சு. பூமியின் பம்பரச் சுழற்சியினால் ஏற்படும் நிகழ்வு அது. இந்தப் பிரபஞ்ச நிகழ்வின் புராணப் பார்வையில் இதனை நிகழ்த்தியவர் விஷ்ணு. இப்படி விண் மண்டலமான பாற்கடலையே கடைந்தவரின் அதே கரங்கள், ஆயர் குல பெண்ணான தாய் யசோதையின் கயிற்றால் கண்டுண்டன. இது ஒரு மாயம்.

ஊழியால் உலகழியும் புராணங்கள், பண்பாடுகள் அனைத்திலும் உண்டு. பொதுவாக, இறை சீற்றத்தால் இயற்கை அழிவுகள் நிகழ்வதாகப் புராணங்கள் கூறும். ஆனால், இந்தியப் புராணத்திலோ பொதுவாக பிரளயம் ஒரு இயற்கை நிகழ்வு. ஒரு ஒழுங்கு நியதி. சுழற்சியில் ஒரு பகுதி. அவை அனைத்தையும் விஷ்ணு உண்டுவிடுகிறார். ஆனால், அது இயற்கையாக நிகழ்வது. அங்கு சீற்றம் போன்ற உணர்ச்சியால் நிகழவில்லை. எனவே, உறுபசி ஒன்று இன்றியே உலகங்கள் அனைத்தையும் விழுங்குகிறான். யார்? அறு பொருளாக அமரர்கள் வணங்கும் விஷ்ணு. இது பிரபஞ்ச புராண நிகழ்வு. பசி ஏதுமின்றி உலகையே விழுங்கும் அதே விஷ்ணு, கிருஷ்ணனாக ஆய்ச்சியர் வீட்டு உறி வெண்ணெய்யை திருடித் தின்கிறார். இது ஒரு மாயம்.

Story image

பொதுவாக, ஓங்கி உலகளந்த உத்தமன் விஷ்ணு என்பது பலிச் சக்ரவர்த்தியைப் பாதாளத்தில் அழுத்திய வாமன அவதாரத்தைக் குறிப்பதாகக் கருதப்படுகிறது. ஆனால், இது பிற்கால புராணம். இது குறித்த தொன்மையான புராணம் வேறு. விஷ்ணுவின் மூன்றடிகள் குறித்து ரிக் வேதத்திலேயே வருகிறது. விஷ்ணு, மூன்றடிகளால் பிரபஞ்சத்தை அளந்தவர் என்கிறது ரிக் வேதம். இதில் அவரது இரண்டு அடிகளே மனிதர்களால் காண முடிந்தவை என்றும், மூன்றாவது அடி மானுடக் கண்களாலோ, பறவைகளின் பறத்தலாலோ எட்டமுடியாத இடத்தில் உள்ளது என்கிறது ரிக். விஷ்ணு தன் பாதங்களால் அளவிடுவதே, பூமியையும் விண்ணுலகங்களையும் ஒழுங்குபட அமைக்கிறது. அளவிடுதல் ஒரு படைப்பு. இப்படி, காலடிகளால் பிரபஞ்சத்தைப் படைத்த அதே விஷ்ணு, பாண்டவர்களுக்காக அவர்களுக்கு ஐந்து கிராமங்கள் அல்லது குறைந்தது ஐந்து வீடுகள் பெற்றுத் தருவதற்காகத் தூது நடக்கிறார். இது ஒரு மாயம்.

பிரபஞ்ச இருப்பையும் நம் இருப்பையும் இணைக்கும் ஒரு மாய முரண்நகையாக, அவதாரம் என்பது முன்வைக்கப்படுகிறது. பிரபஞ்சப் பேரிருப்பு முன்னால், அற்பமாக திகழும் மானுட வாழ்க்கையிலும் அதே பிரபஞ்சப் பேரிருப்பின் அடிப்படை உயிர் இயக்கம் வெளிப்படுகிறது.

Story image

இதை உணரும்போது, ஏதோ விண்ணகப் பொறியாளர் படைத்த கட்டுப்பாடான இயந்திர இயக்கமாக இப்பிரபஞ்சம் இருப்பதில்லை. மாறாக, ஒரு குழந்தையின் விளையாட்டாக அது மாறிவிடுகிறது. ஒரு மண் துகளில் பிரபஞ்சம் தெரியும். வில்லியம் பிளேக்கின் ‘to see the world in a grain of sand’, வியப்பின் புராண வடிவம். குழந்தை கண்ணன் வாய் திறக்க, அவன் வாய் மண் துகள்களில் யசோதை பிரபஞ்சத்தையே கண்டது. ஆனால், மாயையின் திரை இப்பேருணர்வை மறைக்கிறது. திரையின் அப்புறம் நின்று சீண்டு விளையாடும் குழந்தை போலவே, பிரபஞ்ச பேருணர்வு நம் சிறிய பூமிப் பந்தில் உருவான புராண கவித்துவங்களில் வெளிப்படுகிறது.

Story image

இந்த இணைப்பின் மாயம் படைப்பூக்க வீரியம் கொண்டது. Creative tension என்று சொல்வார்களே அதை உள்ளடக்கியது. இப்புராணச் செயல்பாடுகள் மூலம் 'ரூபத்திலிருந்து அரூபத்துக்குச் செல்லும்’ கலைகளை, ‘சப்தத்திலிருந்து மௌனத்துக்குச் செல்லும்’ அக பயணக் கையேடுகளை ஒரு பண்பாடு வளர்த்தெடுக்க முடியும். இந்த முரண் இணைப்பு, புராணங்களின் மொழியில் இருக்கும் அக-புற உறவைப் புலப்படுத்தும் ஒரு மெல்லிய இயக்கமும்கூட.

இருபதாம் நூற்றாண்டில், உலகப் புராணங்களை ஆழப் பயின்ற ஜோசப் காம்பெல் காணாமல் விட்ட புராணச் செயல்பாடு இது. ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னர், இளங்கோ அடிகள் காவியக் கவிதையில் அதை நமக்கு அளித்துவிட்டார். அதை புராணவியல் கோட்பாடாக வளர்த்தெடுப்பது, உலகப் பண்பாட்டுக்கு நாம் ஆற்ற வேண்டிய கடமை.

பின்குறிப்பு *

'இருப்பாக இருக்கிறேன்’ - தமிழ் விவிலிய மொழி பெயர்ப்புகளில், ‘இருப்பவராக இருக்கிறேன்’ (விடுதலை பயணம் 3:14) என காணக் கிடைக்கிறது. ஆனால், ஹீப்ரூ மொழியின் மூலத்தில், பல சாத்தியங்களை அளிக்கும் ஒரு சொற்றொடராக அது சொல்லப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.