கரத்தில் வசிக்கும் தெய்வங்களும் ப்ரடெரிக் ஏங்கல்ஸும்
காலையில் எழுந்தவுடன் இந்து குழந்தைகள் கைகளைப் பார்த்து சொல்லக்கூடிய மந்திரம் ஒன்று உண்டு. ‘கராக்ரே வசதே லக்ஷ்மி கரமத்யே சரஸ்வதி கரமூலே


.firstcharacter { float: left; color: #000; font-size: 50px; line-height: 60px; padding-top: 4px; padding-right: 8px; padding-left: 3px; }கா
லையில் எழுந்தவுடன் இந்து குழந்தைகள் கைகளைப் பார்த்து சொல்லக்கூடிய மந்திரம் ஒன்று உண்டு. ‘கராக்ரே வசதே லக்ஷ்மி கரமத்யே சரஸ்வதி கரமூலே ஸ்திதா கௌரி ப்ரபாதே கர தர்ஷனம்’ இந்து மரபில் செல்வம், கல்வி, வலிமை ஆகியவற்றின் தெய்வங்களாக லட்சுமி, சரஸ்வதி மற்றும் கௌரியை கருதுகின்றனர். இந்த தெய்வங்கள் தம் கரங்களில் இருப்பதாக காலையில் இந்துக்களின் குழந்தைகள் கரங்களை நோக்கி வணங்கி கூறுகின்றனர். ஜெயமோகன் குழந்தைகளுக்காக எழுதிய ‘பனிமனிதன்’ என்ற புதினத்தில் இந்த ஐதீகத்தையும் ப்ரெடரிக் ஏங்கல்ஸ் கரங்களுக்கும் உழைப்புக்குமான தொடர்பை குறித்து கூறியதையும் பெட்டி செய்திகளாக தந்திருக்கிறார்.

‘கலைமகள் நாவில் குடியிருந்தால் அவள் கழிப்பறைக்கு எங்கே போவாள்’ என்று கேட்கிற முட்டாள்களை கலைவாணர் என்று அழைக்கிற போலி பகுத்தறிவு நிறைந்த கொடுமையான ஊரில் ஜெயமோகன் ஒரு சிந்தனைக்கான விதையை விதைத்திருக்கிறார். செல்வத்துக்கும் கல்விக்கும் வலிமைக்கும் மானுட கரத்துக்குமான தொடர்பு முக்கியமானது. மார்க்சியத்தின் ஆதி குருக்களில் ஒருவரான ப்ரெடரிக் ஏங்கல்ஸ் லாவக எதிர் அசைவு கொண்ட பெருவிரலுக்கும் உழைப்புக்குமான தொடர்பை மானுட பரிமாண வளர்ச்சியின் ஒரு முக்கிய தாவலாக கருதினார். ஆனால் ஒரு பிரச்சனை. மானுட கரம் என்பது உழைப்புக்கான உறுப்பு என்பது மட்டுமல்ல உழைப்பின் விளைவு - என ஏங்கல்ஸ் கூறினார்: ‘The hand is not only the organ of labour, it is also the product of labour'

ஆச்சாரிய ஏங்கல்ஸ் கூறியதை அப்படி இப்படி மாற்றினாலும் சைபீரிய வதை முகாம்களில் நேர்த்திக் கடனை செலுத்த வேண்டி இருக்கும் என்பதை புனித லெனினும் புனித ஸ்டாலினும் உணர்த்தியிருந்தபடியால் சோவியத் மானுடவியல் இதையெல்லாம் அப்படியே ஏற்றுக் கொண்டது. இதை அழகான புத்தகங்களாகப் போட்டார்கள். 1980களில் வளர்ந்தவர்களுக்கு சோவியத் யூனியன் புத்தகங்களில் ஏங்கல்ஸின் இந்தக் கருத்துகள் சல்லிசான விலையில் நல்ல தரமான தாள்களில் அட்டகாசமான அச்சில் வந்து சேர்ந்தது. ‘குரங்கிலிருந்து மனிதன் உருவானதே உழைப்பினால்தான்’ என்பது இடதுசாரி உலகப் பார்வையின் இன்றியமையாத ஒரு விஷயமாயிற்று.

ஆனால் ஏங்கல்ஸின் இந்த காரண-காரிய தொடர்பில் பிரச்சனை இருப்பது மரபணுவியலின் அடிப்படை தெரிந்த பிளஸ் 2 மாணவனுக்கே தெரிந்திருக்கும். ஏங்கல்ஸின் உலகியல் பார்வை லமார்க்கிய பார்வை. லமார்க் பிரெஞ்சு உயிரியலாளர். நாம் வாழும் சூழலால் நாம் அடையும் மாற்றங்கள் அடுத்த தலைமுறைக்கு கடத்தி செல்லப்படும் என லமார்க் கருதினார். இந்தப் பார்வைதான் ஏங்கல்ஸுக்கும் இருந்தது. ஆனால் உண்மை அதுவல்ல. நாம் வாழும் சூழலில் நாம் அடையும் மாற்றங்கள் அடுத்த தலைமுறைக்கு கடத்தி செல்லப்படுவதில்லை என்பதுதான் உண்மை.
அப்போது நம் கரங்களை ‘உழைப்பு’ உருவாக்கவில்லை. மாறாக நம் கரங்களின் தன்மையிலிருந்து ‘உழைப்பு’ உருவானது. உழைப்பிலிருந்து செல்வமும். ஆனால் ‘உழைப்பு’ மட்டுமல்ல கரத்திலிருந்து உருவானது.

ரோஜர் பவுட்ஸ் (Roger Fouts) சிம்பன்ஸிகளுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான தகவல் பரிமாற்றத்தை ஆராய்ச்சி செய்பவர். சிம்பன்ஸிகளால் சைகை மொழி மூலம் குறியீடுகளை உருவகங்களை உள்வாங்கவும் பயன்படுத்தவும் முடியும். இது பவுட்ஸை மொழியின் உதயம் குறித்த ஒரு பழைய கருதுகோள் ஒன்றைத் தூசி தட்டி கவனம் செலுத்தினார். 1970களில் மானுடவியலாளர் கோர்டான் ஹெவெஸ் (Gordon Hewes) முன்வைத்த அந்த கருதுகோள் இதுதான்: தொல்-மானுட மூதாதைகளான பேரினக் குரங்குகள் கைகளின் மூலமான சைகைகளால் ஒன்றொடொன்று தகவல் பரிமாறிக் கொண்டன. கைகளின் செயல்பாட்டு திறன் விரிவடைய விரிவடைய அதிலிருந்து சைகைகள் மேலும் மேலும் சிக்கலான வடிவங்களை அடைந்தன. அதிலிருந்து மொழி உருவானது. சிம்பன்ஸிகளின் சைகை மொழி திறமைகள் ஹெவெஸின் இந்தக் கருதுகோளுக்கு ஒரு சான்று பகர்வது போல இருந்தது. ஆனால் ஒரு சிக்கல்.. கைகளின் சைகைகளுக்கும் வாயிலிருந்து ஒலியாக பிரவாகிக்கும் மொழிக்குமான ஒரு இடைவெளியை எப்படி நிரப்புவது? இதற்கான விடை நரம்பியல் ஆராய்ச்சியிலிருந்து கிடைத்தது. நரம்பியல் ஆராய்ச்சியாளர் டோரின் கிமூரா (Doreen Kumura) பேச்சுக்கும் கைகளின் அசைவுகளுக்குமான செயல்பாட்டு கேந்திரம் மூளையில் ஒரே இடத்தில் இருப்பதை கண்டுபிடித்தார். ஆக கைகளின் இயக்கமும் வாயொலி எழுப்புதலும் ஒரே இடத்திலிருந்து உதயமாகின்றன. தொல் மானுட பேரினக்குரங்குகள் கைகளால் சைகை மொழி தகவல் பரிமாற்றத்தை கொண்டிருந்தன. மனித தொல் மூதாதைகள் இருகால்களில் எழுந்து நிற்க ஆரம்பித்த போது கரங்கள் பெருமளவு விடுதலை அடைந்தன. அவை மேலும் மேலும் சிக்கலான சைகை கட்டமைப்புகளை உருவாக்கலாயின. கைகளின் இந்த இயக்கங்களிலிருந்து வாய் மொழி கிளர்ந்தெழுந்தது. ஆக கரங்களின் நளினமான சிக்கலான அசைவுகள், சிறப்பான கருவிகளை மட்டுமல்ல மொழிகளையும் உருவாக்கிற்று. ஏறக்குறைய இரண்டு லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் மானுடத்தின் தகவல் பரிமாற்ற முறை கை சார்ந்த சைகை மொழியிலிருந்து வாய் சார்ந்த மொழிக்குப் புலம் பெயர்ந்தது.
ஆம். கரங்களில் செல்வம் மட்டுமல்ல ‘வாக்’ என இந்திய மரபில் உருவகிக்கப்படுகிற வார்த்தைகளின் உதயமும் உள்ளடங்கியிருக்கிறது. சரஸ்வதி வாக்தேவதை. (இந்த சக-பரிணாம உதயம் குறித்த ஒரு முழுமையான சித்திரத்தை ப்ரிட்ஜாப் காப்ராவின் ‘The Hidden Connections’ என்கிற நூலில் காணலாம். பக். 55-60; ரோஜர் பவுட்ஸின் முக்கியமான நூல் ‘Next of Kin’.)

தற்போது அறிவியல் மானுட கரத்தின் பரிணாம வளர்ச்சி குறித்து மற்றொரு அதிசயமான உண்மையை கண்டடைந்தது. சிம்பன்ஸிக்கும் மானுடத்துக்குமான பொது மூதாதை ஒன்று உண்டு. அது 13 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தது. அவற்றின் கரங்கள் சிம்பன்ஸிகளின் கரங்களைக் காட்டிலும் மானுடத்தின் கரங்களை போலவே இருந்திருக்கின்றன. அதாவது பரிணாம வளர்ச்சியின் நோக்கில் மானுட கரம் பரிணாமத்தில் பிற்பட்டது. சிம்பன்ஸிகளின் கரங்கள் அதிக பரிணாம வளர்ச்சி உடையவை. மானுடத்தின் கரங்களில் உள்ளுறைந்திருந்தன உழைப்பும், வாய்மொழிக்கான விதைகளும். அக்கரங்களிலிருந்தே அவை உருவாகி வந்தன. அதாவது ஏங்கல்ஸ் கூறியது தலைகீழாகிவிட்டது. ஆனால் ஏங்கல்ஸை ஒரு முன்னோடி சிந்தனையாளராக கருதியாகவேண்டும். கரத்தையும் உழைப்பையும் பரிணாம வளர்ச்சியையும் அவர் ஒருங்கிணைத்து பார்த்தார். காரண காரிய அம்பின் திசையில் அவர் தவறு செய்துவிட்டார். ஆனால் அது ஒரு அரசியல் கோட்பாடாக ஏன் ஒரு மதநம்பிக்கையாகவே மார்க்ஸியர்களால் மாற்றப்பட்டுவிட்டது. ஒரு சிந்தனா-முன்னோடி மத-சித்தாந்த நிறுவனராகும் போது ஏற்படும் சோகம் அது. ஏங்கல்ஸ் கருதியதை விட கரம் மானுட பரிணாம வளர்ச்சியில் பெரும் பங்கு ஆற்றியுள்ளது இப்போது தெரிகிறது. ஏங்கல்ஸும் ஏன் அண்மைக்கால ஆராய்ச்சியாளர்களும் கருதியதைக் காட்டிலும் மானுட கரம் புராதனமானது.
சிந்தித்துப் பாருங்கள். பரிணாம விருட்சத்தில் பழமையான மானுட கரங்களில் இத்தகைய அற்புத சக்திகள் அடங்கியிருந்திருக்கின்றன. லட்சக்கணக்கான ஆண்டு பரிணாமமே அவற்றை வெளிக் கொணர்ந்தது. எனில் நம் கரங்களைக் காட்டிலும் பரிணாம வளர்ச்சியில் மேலும் மெருகு பெற்ற சிம்பன்ஸிகளின் கரங்களில் எத்தனை தெய்வங்கள் உள் உறங்குகின்றனவோ!
(மானுட கரத்தின் பரிணாம பழமை : ’The evolution of human and ape hand proportions’:
http://www.nature.com/ncomms/2015/150714/ncomms8717/full/ncomms8717.html)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...