போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

பரிசுத்த ஆவியும் பதஞ்சலியும்

இன்டர்நெட்டில் வலம் வரும் வீடியோக்களில் ஒன்று கிறிஸ்தவ சபைகளில் பலர் தரையில் விழுந்து புரண்டுகொண்டிருக்க, கிறிஸ்தவ போதகர்கள் அவர்கள் மீதிருக்கும் ‘அசுத்த ஆவிகளை’ அகற்றி பரிசுத்த ஆவியை வரவைக்கும் காட்சி. பொதுவாக, மிகுந்த ஏளனத்துடன் இந்தக் காட்சிகள் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன.

News image
Updated On :21 ஜூன் 2015, 5:25 am

அரவிந்தன் நீலகண்டன்

இன்டர்நெட்டில் வலம் வரும் வீடியோக்களில் ஒன்று கிறிஸ்தவ சபைகளில் பலர் தரையில் விழுந்து புரண்டுகொண்டிருக்க, கிறிஸ்தவ போதகர்கள் அவர்கள் மீதிருக்கும் ‘அசுத்த ஆவிகளை’ அகற்றி பரிசுத்த ஆவியை வரவைக்கும் காட்சி. பொதுவாக, மிகுந்த ஏளனத்துடன் இந்தக் காட்சிகள் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன. ‘என்ன நடிப்பு’, ‘சிவாஜி கணேசனே தோத்துப் போயிருவார்’ இத்யாதி கமென்ட்களுடன் இவை பகிர்ந்துகொள்ளப்படுகின்றன. ஆனால், இப்படி இவற்றை பகிர்ந்துகொள்கிறவர்கள் கவனிக்கத் தவறும் ஒரு சோகம் இதில் உள்ளது.

Story image

காசுக்காக நடத்தப்படும் நாடகங்களை விட்டுவிடலாம். ஆனால் இவர்களை விமரிசிக்கிறவர்கள், மிகக் குறைந்தபட்சம் ஒரு பெந்தகோஸ்தே கூட்டத்துக்காவது செல்ல வேண்டும். ‘பரிசுத்த ஆவி’ இறங்கும் அந்த நிகழ்வை பார்க்க வேண்டும். உண்மையில் அதிலும் நடிப்புகள் உண்டு. மிகவும் வர்த்தகச் சமன்பாடுகள் கொண்ட நடிப்புகள் உண்டு. ஆனால், அவற்றைத் தாண்டி அதில் ஒரு நிஜம் இருக்கிறது. தரையில் விழுந்து புரண்டுகொண்டிருக்கும் மக்களின் உள்ளவியலை புரிந்துகொள்ள அந்த நிஜத்திலிருந்துதான் தொடங்க வேண்டும்.

எல்லா மதங்களிலும் ‘மீண்டும் பிறத்தல்’ என்கிற ஒரு ஆழ-உள்ளவியல் இருந்துகொண்டிருக்கிறது. கிறிஸ்தவம் இதை வெளிப்படையாக ‘born again’ எனக் கூறுகிறது. ஒருவித பரவசநிலையில் உள்ளக்கிளர்ச்சியுடன் தன்னை ஒப்புவிக்கும் ஒரு நிலை எனக் கூறலாம். இதற்கு ஒரு இறையியல் சட்டகத்தை கிறிஸ்தவம் அளிக்கிறது. அதை ஒரு புறவய உண்மையாகவும் ஒரே உண்மையாகவும் நிறுவிகிறது. குறிப்பாக, பல புறநகர்ப் பகுதிகளிலும் அடித்தட்டு மக்கள் வாழும் பகுதிகளிலும் முளைத்தெழும் கிறிஸ்தவ சபைகளில் இது ஒரு உள்ளவியல் தொற்றாகப் பரவுவதை காணமுடியும். இதன் நேர்மறை எதிர்மறை விளைவுகள் என்ன என்பதை நாம் யோசித்தே ஆக வேண்டும். மதங்களைத் தாண்டிய ஒரு மானுட கடமையாக அதை நாம் செய்ய வேண்டும்,

நேர்மறை விளைவுகள் உடனடியாக ஒருவித மாற்றமும் ஒருவித விடுதலை உணர்வும் கிடைக்கிறது. இதுவரை தன்னை பீடித்திருந்ததாக கருதப்படும் ஒருவித தடை அகன்றுவிட்டதாக ஒரு மனநிலையும், தடைக்குக் காரணம் சைத்தான் என்றும், அது அகன்றுவிட்டமைக்குக் காரணம் கர்த்தரின் கருணை என்றும் மனம் கற்பிக்கிறது. இது ஒருவித தன்னம்பிக்கையை அளிக்கிறது. வாழ்க்கையில் சோர்ந்திருப்பவனுக்கு இது நிச்சயமாக ஒரு முன்னகர்தல்தான்.

ஆனால், இதன் எதிர்விளைவுகள் என்ன?

சைத்தான் என்பது அதுவரை தான் வாழ்ந்துவந்த பண்பாட்டுக் களத்தை குறிக்கும் ஒன்றாக மாறுகிறது. தன் புராண நம்பிக்கைகள், வாழ்க்கை சடங்குகள், மண்ணின் தெய்வங்கள் அனைத்திலிருந்தும் அறுக்கப்பட்டு ஒரு புதிய வாழ்க்கை. வேரற்ற நிலைக்கு அந்த நபர் தள்ளப்படுகிறார். குறுகிய அடிப்படைவாத இறை நம்பிக்கை என்கிற இறுகிய இரும்புச் சங்கிலிக்குள் அவர் பிணைக்கப்படுகிறார். மானுட மலர்தலின் அனைத்து பிற சாத்தியங்களிலிருந்து சில நூற்றாண்டுகள் பின்னால் நகர்ந்துவிடுகிறார்.

ஆனால், அதற்காக அவர் அனுபவித்த ஒரு உண்மை அக அனுபவத்தை நாம் மறுத்துவிட முடியாது.

இதுதான் சிக்கலான விஷயம். ஆனால் இதை வேறொரு கோணத்தில் அணுக முடியும். தரையில் புரண்டு ஆக்ரோஷமாகக் கத்தும் நம் கிறிஸ்தவ சகோதரர்களை எள்ளி நகையாடுவதற்கு முன்னால், இது உண்மையான ஒரு அனுபவம் என்பதை ஏற்றுக்கொண்டு அதை விளக்க முற்படுவோம்.

லீ சானெல்லா (Lee Sannella), கலிபோர்னியாவைச் சார்ந்த உள்ளவியல் சிகிச்சையாளர். அக-ஆளுமைப் பிரச்னைகளுக்கு கடுமையாக ஆளான மக்களது வாழ்க்கையை அவர் ஆராய்ந்தார். அடிப்படையில் நடந்துகொண்டிருக்கக்கூடிய சிக்கலான விஷயம் என்ன என்பது அவருக்குப் புரிந்தது. மிக மோசமாகத் தளர்ச்சியுற்று மனச்சோர்வுற்று உடைந்துபோன ஒரு மனிதன், திடீரென்று ஆற்றலும் ஆனந்தமும் நிறைந்த ஒருவனாக மாறும் ஒரு தருணம்: இதுதான் மீண்டும் பிறக்கும் தருணம். இதை ஒவ்வொரு மதமும் அதற்கே உரிய நம்பிக்கைகளைக் கொண்டு பேசியிருக்கிறது. ஆனால், ஒட்டுமொத்தமாக இதை நம்பிக்கையிலிருந்து விலகிப் பார்க்க வேண்டும்.

Story image

லீ சானெல்லா அப்படித்தான் பார்த்தார். நடப்பது குண்டலினியின் எழுச்சி எனும் பார்வையில் முடிந்தது அவரது ஆராய்ச்சி. குண்டலினி மட்டும் மதநம்பிக்கை இல்லையா என்கிற கேள்வி எழலாம். இல்லை. லீ சானெல்லாவின் ஆராய்ச்சிக்குமுன், இந்தியாவைச் சார்ந்த ஒரு யோக ஆசிரியர் கோபிகிருஷ்ணா ஒரு முக்கியமான நூலை எழுதியிருந்தார். குண்டலினி ஒரு உயிரியல் அடிப்படை கொண்ட விஷயம் என்பதை அவர் கூறியிருந்தார். கோபிகிருஷ்ணா, குண்டலினியை மானுட பரிணாம வளர்ச்சியை நடத்திச்செல்லும் அக ஆற்றல் எனக் கூறியிருந்தார். லீ சானெல்லா, இதிலிருந்துதான் மானுட அகப்பிரச்னைகள் உச்சமடைந்து ஒரு பெரும் பரவசத் தாவல் நிகழ்த்தப்படுவது குண்டலினி விளைவு என்பதை வந்தடைந்தார். குண்டலினி என்பது நம்பிக்கை அல்ல; அது ஒரு ஆழமான உள்ளம்-உடல் பிரிக்கமுடியாதபடி இணைந்த ஒரு உயிர்நிகழ்வு. இதை மேற்கத்திய உள்ளவியல் கூறுகளான மனத்தளர்ச்சி அல்லது டிப்ரஷன் சைக்காஸிஸ் இத்யாதி வகையறாக்களில் சேர்க்கமுடியாது. ஆனால், மேற்கத்திய உள்ளவியல் கூறுகளில் பயிற்சிபெற்ற ஒரு மருத்துவர் அதை மட்டுமே செய்வார்.

Story image

மேற்கத்திய நாடுகளில் Transpersonal psychology எனக் கூறப்படும் உள்ளவியல் புலத்தின் பிதாமகரான ஸ்தனிஸ்தலவ் க்ரோப் (Stanislav Grof) இதை மேலும் விவரிக்கிறார். ஒரு மனிதன், அவனில் குண்டலினி விழித்தெழும்போது பல்வேறு உணர்ச்சிக் கொந்தளிப்புகளுக்கும் புத்தாக்க உத்வேகங்களுக்கும் ஆளாகிறான். அதீதமாகும் பாலியல் இச்சைகளில் இருந்து மனத்தளர்ச்சி அகம் உடைதல் என பல்வேறு நிலைகளுக்குள் அவன் செலுத்தப்படுகிறான். இந்தக் காலகட்டத்தில் அவனை சரியாக வழி நடத்த ஒரு ஆன்மிக உள்ளவியல் வழிகாட்டி தேவை. இதை க்ரோப் கூறுகிறார். அப்படிக் கிடைக்கும் வழிகாட்டியின் மூலம் குண்டலினி கிளர்ச்சிக்கு ஆளாகும் நபர், தன்னை முழுமையாக்கும் ஒரு நகர்வை நோக்கிப் பயணிக்கிறார். அத்தகைய நகர்வை holotropism என்கிறார் க்ரோப். அடிப்படைவாத நம்பிக்கைகளில் சிக்காமல் தன்னை விரிவாக்கும் ஒரு பெரும் சாத்தியத்தில் இருக்கும் நபர்கள், இந்தக் குண்டலினி எழுச்சியின் தொடக்கக்கட்ட குழப்பத்தில் ஆழ்ந்திருப்பவர்கள். கோபிகிருஷ்ணா, உள்ளவியலுக்கு அளித்த மிகப் பெரும் கொடை, இந்தப் பார்வை என்று சொல்லலாம்.

Story image

இன்று மேற்கத்திய உள்ளவியல் ஆராய்ச்சிகளில், குண்டலினி சிண்ட்ரோம் என்கிற பதங்களெல்லாம் புழங்க ஆரம்பித்திருக்கின்றன. இங்குதான் யோகா என்பது முக்கியமான ஒன்றாக ஆகிறது. யோகா என்பது வெறும் உடல் சார்ந்த ஆசனங்களோ, ஏன் மூச்சுப் பயிற்சியோகூட அல்ல. அது, உள்ளத்தையும் உடலையும் ஒன்றாகப் பார்க்கும் ஒரு முழுமை தரிசனத்தில் எழுந்தது. ஆன்மிக அனுபவம் என அறியப்படுவதை, கூர்மையான அறிவியல் பார்வைக்கு உட்படுத்திய ஒரு தரிசனம் அது. அதனை திருமூலரும் பதஞ்சலியும் நமக்குத் தந்தார்கள். கோபிகிருஷ்ணா போன்றவர்கள் அதனை இன்றைய சூழ்நிலைக்கு ஏற்ப பார்க்கும் அறிதலை நமக்கு அளித்தார்கள். அதனை மேற்கத்திய உள்ளவியல் பயன்படுத்துகிறது.

இன்று தம்மை சைத்தான் பீடித்திருப்பதாக நம்பி தரையில் புரண்டு, கர்த்தர் தம்மை பிசாசின் கட்டுகளில் இருந்து விடுவிப்பார் என முழுமையாக நம்பி அந்த ‘விடுதலையை’ அறிந்துகொள்கிற நம் கிறிஸ்தவ சகோதரர்கள் யார்? திருமூலரின் பதஞ்சலியின் சந்ததிகள். மனத்தின் அடி ஆழங்களிலும் ஆன்மிக அனுபவங்களின் அதி உச்சங்களிலும் அச்சமில்லாமல் சென்று அக அறிவியலை அளித்த பாரம்பரியத்தில் வந்தவர்கள். அவர்கள் இப்படி தரையில் உருண்டு அழுது புலம்பி ஒரு அடிப்படைவாத இறைநம்பிக்கையிடம் சரண்டையும் இடத்தில் நிறுத்தியது எந்தத் தேவை?

அது எதுவாக இருந்தாலும், அதுதான் அந்தத் தேவைதான் யோகம். அது, தேசிய பண்பாடாக, தேசிய கூட்டு மனத்தின் பிரிக்கமுடியாத பாரம்பரியமாவதை கோரி நிற்கிறது. உங்கள் எதிர்காலத்தை விரிவும் ஆழமும் அழகும் கொண்டதாக ஆக்கும் அக ஆற்றலை உங்கள் மூச்சுப்பயிற்சியின் மூலமும், உங்கள் உடலின் மூலமும் பெற முடியும் – அதற்கு ஒரு விண்ணுறை தெய்வம் தேவை இல்லை என்பதை ஒவ்வொரு இந்தியனும் உணர வைக்க வேண்டும். அந்தப் பரிபூரண விடுதலையை யோகாவைவிட வேறு எது அளிக்க முடியும்?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.