டார்வினின் ஒளியில் போஸ்
டார்வின் தனது சக காலத்தின் மிகச்சிறந்த உயிரியலாளர்களில் ஒருவரான பர்டோன் -சாமுவேல்சனிடம் தாவரங்களில் மின் செயலியக்கம்


.firstcharacter { float: left; color: #000; font-size: 50px; line-height: 60px; padding-top: 4px; padding-right: 8px; padding-left: 3px; }டார்வின் தனது சக காலத்தின் மிகச்சிறந்த உயிரியலாளர்களில் ஒருவரான பர்டோன்- சாமுவேல்சனிடம் தாவரங்களில் மின் செயலியக்கம் இருக்கிறதா என கண்டறிய கேட்டுக்கொண்டார். சாண்டர்சனும் வீனஸ் ஃப்ளைடிராப் (Venus flytrap) என்கிற பூச்சி தின்னும் தாவரத்தில் மின் இயக்கச் செயல்பாடுகள் இருக்கின்றன என்று கண்டுபிடித்தார். ஆனால் சாண்டர்சன், அது அந்த தாவரத்துக்கு மட்டுமான தனித்தன்மை என கருதினார். இந்த இடத்தில், டார்வினின் பார்வையைக் கணிக்க சாண்டர்சன் தவறிவிட்டார்.
டார்வின் காலத்தில் ஒரு புகழ்பெற்ற இறை நம்பிக்கை இருந்தது. இயற்கை என்பது இறைவனால் வடிவமைக்கப்பட்டது. தெருவில் போகும் வழியில் ஒரு கடிகாரம் ஒருவருக்குக் கிடைக்கிறது. அவர் கடிகாரத்தையே பார்த்தறியாதவராக இருக்கலாம். ஆனால், அந்தக் கடிகாரத்தைத் திறந்து அதன் உள்ளே பல்வேறு சக்கரங்கள், பல் அமைப்புகள் ஆகியவை இருப்பதைப் பார்க்கும்போது, அதை வடிவமைத்தவர் ஒருவர் இருக்க வேண்டும் என்பதை அவர் புரிந்துகொள்வார். அதுபோலவே, இயற்கையில் உள்ள ஒவ்வோர் உயிரினத்திலும் ஒரு வடிவமைப்பு உள்ளது. அதை ஒருவர் அறியும்போது அந்த அமைப்பை வடிவமைத்தவராகிய இறைவனது புகழை - பேரறிவை அவர் அறிகிறார்.
இந்தக் கருத்தை முன்வைத்தவர் வில்லியம் பேலி (William Paley 1743-1802) எனும் இறையியலாளர். இயற்கை இறையியல் (Natural Theology) என்று சொல்லப்பட்ட இந்தக் கோட்பாடு, அந்தக் காலகட்டத்தின் பல மேற்கத்திய உயிரியலாளர்களிடமும் அறிஞர்களிடமும் பெரும் செல்வாக்கு பெற்றிருந்தது. கடிகாரம் என்று ஒன்றிருந்தால், கடிகாரத்தைச் செய்த ஒரு ஆள் இருக்க வேண்டும். படைப்பு என்று ஒன்றிருந்தால் படைப்பாளி என்ற ஒரு ஆள் நிச்சயம் இருக்க வேண்டும்.

உதாரணமாக, கண்ணை எடுத்துக்கொள்ளுங்கள். அதன் செயல்பாடு, ஒரு அற்புதமான கேமராவைப்போல் இருக்கிறதில்லையா? இப்படி, ஒவ்வொரு உறுப்பும், ஒவ்வொரு உயிர் அமைப்பும் படைப்பாளியின் செயல்திறனை வெளிப்படுத்துகின்றன.
சார்ல்ஸ் டார்வின் இளைஞராக இருந்தபோது, இறையியல் கல்லூரியிலும் கொஞ்ச காலம் படித்திருந்தார். அப்போது இந்தக் கோட்பாடு அவரைக் கவர்ந்த ஒன்று. பின்னர் அவர், ஹெச்.எம்.எஸ். பீகிள் (HMS Beagle) என்ற கப்பல், உலகப் பயணம் புறப்பட்டபோது அதில் உடன் சென்றார். 1831 முதல் 1836 வரைக்குமான பயணம் அது. இந்தப் பயணத்தின்போது, பல தென் அமெரிக்கத் தீவுகளின் உயிரினங்களின் பன்மையையும் ஒற்றுமையையும் டார்வின் கண்டார். உயிரினங்கள் ஒரு பொது மூதாதையில் இருந்து கிளைத்தவை என அவர் மெள்ள மெள்ள ஒரு தீர்மானத்துக்கு வந்தார். கண்டறிவின் மூலம், கூர்ந்த அவதானிப்பின் மூலம், மெள்ள மெள்ள தீர்மானமாக அவர் இந்த நிலைபாட்டை வந்தடைந்தார். எந்த ஓர் உயிரின உறுப்பும் அல்லது செயல்பாடும், தன்னளவில் முழுமை கொண்டதாகத் தோன்றினாலும் அவை கொஞ்சம் கொஞ்சமாகப் பரிணமித்து வந்திருக்கின்றன. அந்த உயிரினத்துடன் தொடர்புடைய கிளைகளில் எந்த உறுப்பின் இந்தத் தொடர்ச்சியையும் காண முடியும்.

கண்ணைப்போல் மிகவும் அதிசயிக்கத்தக்க விதத்தில் தனித்தன்மை கொண்ட ஓர் உறுப்பை எடுத்துக்கொள்ளலாம். அதுகூட, ஒளியை உள்வாங்கும் திறன் கொண்ட சிறிய சிறிய செல்களில் இருந்து ஊசித்துளை கேமரா (pinhole camera) போன்ற கண் உறுப்பு என கிளைத்து வந்திருக்கிறது. இன்று நாம் காணும் அதிசயமான முப்பரிமாண பார்வையைக் கொடுக்கும் கண், ஒரு காலத்தில் படைப்பு - படைப்பாளி என பேசுகிறவர்களுக்குப் பெரும் ஆதாரமாக இருந்தது. அதை, டார்வினிய அறிவியல் உடைத்துவிட்டது.
இதையே, தாவரங்களிலும் டார்வின் எதிர்பார்த்திருக்க வேண்டும். எல்லா விலங்கினங்களின் நரம்பு செயல்பாடுகளிலும் இருக்கும் ஒரு பொதுத்தன்மை, அவற்றின் மின் செயல்பாடு. எனில், தாவரங்களுக்குப் புலனறிதல் இருக்கும் பட்சத்தில், அதே மின் செயல்பாடு அவற்றிலும் இருக்கலாம். எல்லா தாவரங்களின் அறிதல் செயல்பாடும் மின்னியக்கத்தன்மை கொண்டதாக இருக்கலாம். டார்வின், சாண்டர்சனிடம் கண்டறிய விரும்பிய விஷயம் இதுவாகத்தான் இருக்க வேண்டும். ஆனால் சாண்டர்சன், பூச்சி உண்ணும் தாவரத்திடம் மின் செயல்பாட்டைக் கண்டறிந்தாலும், அதை உயிரியல் பரிணாமம் எனும் பெரிய திரைச்சீலையில் பொருத்திப் பார்க்கத் தவறிவிட்டார். அவரால் இயலவில்லை. இங்குதான் ஜகதீஷ் சந்திர போஸ் வெற்றி அடைந்தார். ஆனால், அதன் பிறகும் பிரச்னை ஓயவில்லை.

வெளியில் இருந்து கிடைக்கும் புலன் தூண்டுதல்கள், தாவரங்களின் உடலுக்குள் மின்னழுத்த சமிக்ஞைகளை ஏற்படுத்துகின்றன. அவை தாவரங்களின் உள்ளே பரவி அவற்றின் நீர் அழுத்தத்தை மாற்றுகின்றன. இதன்மூலம், தாவரங்கள் எதிர்வினை ஆற்றுகின்றன. இவையெல்லாம் போஸ் முன்வைத்த கண்டுபிடிப்புகள். இதில் எவ்வித ‘மறைஞானம்’ (mysticism) எல்லாம் இருக்கவில்லை. ஆனால், போஸின் எதிர்ப்பாளர்கள் தொடர்ந்து அவரைத் தாக்கி வந்தார்கள். போஸ் தமது அதீத ஆர்வத்தால் அல்லது கிழக்கத்திய மனநிலையால், இப்படி செடிகளுக்கு உணர்ச்சிகள் இருக்கும், அவற்றுக்கு நரம்பு மண்டலம் இருக்கும் என தவறாகக் கருதுகிறார் என தொடர்ந்து பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வந்தது.
இன்று, தாவர நியூரோ - உயிரியல் (plant neuro-biology) என்றே ஒரு துறை இருக்கிறது. கூடவே, நியூரோ என்கிற பதத்தை எப்படி தாவரங்களுக்குப் பயன்படுத்த முடியும் என்கிற சர்ச்சையும் இன்னும் இருக்கிறது. இந்தத் துறையில் செயல்படும் ஒரு முன்னணி உயிரி - இயற்பியலாளர் (bio-physicist) ஷெப்பர்ட் என்பவர். ஆஸ்திரேலிய பல்கலைக் கழகத்தைச் சார்ந்தவர். அவர் நூறாண்டுகளுக்கு முன்னர் போஸ் செய்த ஆராய்ச்சிகள் மற்றும் அவர் கண்டடைந்த விஷயங்களில் இருந்து, இன்றைய தாவர நியூரோ – உயிரியல் நிரூபிக்கும் அல்லது ஆராய்ச்சி செய்வதைப் பட்டியலிட்டுத் தருகிறார்.
அவை:
1. புற உலகை அறிந்துகொள்ளவும், அவற்றுக்கு எதிர்வினையாற்றவும் தாவரங்கள் நிச்சயமாக மின்சார சமிக்ஞைகளைப் பயன்படுத்துகின்றன.
2. விலங்கினங்களைப் போலவே நரம்பு செல்கள் அல்லது நியூரான்கள் இல்லாவிட்டாலும், நியூரானிய செயல்பாட்டை ஒத்த நரம்பு மண்டலம் போன்ற ஒரு செயல்பாட்டு அமைப்பு தாவரங்களில் உள்ளது.
3. தாவரங்களுக்கு ஞாபக சக்தி (memory) உண்டு. அவற்றுக்கு ‘பட்டறிவு’ உண்டு.
4. அனைத்து தாவரங்களிலும் நீர் சார்ந்த மின்-வேதியியல் செயல்பாடுகள் நாடித்துடிப்பாக இருக்கின்றன.
ஒருவிதத்தில், போஸை ஆராதித்தவர்களும் அவரது கண்டறிதல்களின் முக்கியத்துவத்தை சரியாக அறிந்து கொள்ளவில்லையோ என தோன்றுகிறது. அவரை எதிர்த்தவர்கள், நிச்சயமாக அவரது பார்வையின் பேரெல்லையை நினைத்துக்கூட பார்க்கத் தவறிவிட்டார்கள். இதனால், தாவரவியலும் உயிர் குறித்த நமது அடிப்படை அறிதலும் பல பத்தாண்டுகள் பின் தங்கிவிட்டன.
போஸை அறிந்துகொள்ள டார்வின் உதவுகிறார் என்பது சுவாரசியமான உண்மை. ஒரு உயிரியலாளர் கூறினார் – ‘பரிணாம அறிவியல் இல்லாமல் உயிரியலில் எதையுமே அர்த்தப்படுத்த முடியாது’.
போஸ் விஷயத்தில், அது நூற்றுக்கு நூறு உண்மை.
•••
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...