போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

டாவின்ஸியும் மிளகுப்பிள்ளையார் தலவரலாறும் நாதமுனிகளும்

ப்ரிட்ஜாப் கேப்ரா (Fritjof Capra) என்கிற பெயர் ஆன்மிக வட்டத்தில் பெரும்பாலான இந்தியர்களுக்கு பிரபலமான பெயர். அணுவுக்கு உள்ளே இருக்கும் துகள்களை

News image
Updated On :17 மே 2015, 4:42 am

அரவிந்தன் நீலகண்டன்

.firstcharacter { float: left; color: #000; font-size: 50px; line-height: 60px; padding-top: 4px; padding-right: 8px; padding-left: 3px; }ப் 

ரிட்ஜாப் கேப்ரா (Fritjof Capra) என்கிற பெயர் ஆன்மிக வட்டத்தில் பெரும்பாலான இந்தியர்களுக்கு பிரபலமான பெயர். அணுவுக்கு உள்ளே இருக்கும் துகள்களை ஆராய்ச்சி செய்கிற இயற்பியலாளர் – particle physicist. 1970களில் அவர் எழுதிய ‘Tao of Physics’ இன்றைக்கும் மிகவும் பிரசித்தி பெற்ற நூல். அதில் அவர் ‘கிழகத்திய’ மதங்களான இந்து மதம், பௌத்தம், தாவோ ஆகியவற்றின் தரிசனங்களுக்கும் இயற்பியல் இன்று காட்டும் பிரபஞ்ச தரிசனத்துக்குமான இணைத்தன்மையை விவரித்திருந்தார். புகழ்பெற்ற இந்தியவியலாளரான ஆனந்த குமாரசாமி நடராஜ தாண்டவத்தை விவரிப்பதை கேப்ரா தனது நூலில் மேற்கோள்காட்டி அதையே அறிவியலையும் மெய்யியலையும் கலையையும் இணைக்கும் ஒரு அற்புதமான குறியீடாக முன்வைத்தார். இது இந்தியாவில் ப்ரிட்ஜாப் கேப்ராவை மிகவுமே பிரபலப்படுத்தியது. பல தருணங்களில் இது தவறான புரிதலையும் ஏற்படுத்தியது. ‘வெள்ளைக்காரங்க அணுவுக்குள்ள நடராஜர் டான்ஸ் ஆடுறதை கண்டுபிடிச்சி போட்டோ எடுத்துருக்காங்க.’

Story image
Story image

ஆனால் இந்த நூலுக்கு பிறகு கேப்ரா தன் அறிவுத்தேடலை தொடர்ந்தார். ஒரு விரிவான பார்வையை முன்வைத்தார். இவை குறித்து தொடர்ந்து அவர் நூல்கள் எழுதினார்., ஏனோ ‘தாவோ ஆஃப் பிஸிக்ஸ்’ பிரபலமடைந்த அளவு அந்த நூல்கள் இந்தியாவில் பிரபலமடையவில்லை. ஆனால் இவை முக்கியமானவை. இந்த நூல்களின் அடிப்படையில் நாம் இன்று ‘தாவோ ஆஃப் பிஸிக்ஸ்’ நூலைப் பார்க்கும் போது ஒரு முக்கியமான உலகப்பார்வைக்கான முன்பிரகடனமே அந்த நூல் என்பதை மிக எளிதாக உணர்ந்துக் கொள்ள முடியும்.

கேப்ரா கூறுவதென்ன? நியூட்டானிய இயற்பியல் பிரபஞ்சத்தை ஒரு மிகப்பெரிய இயந்திரமாக உருவகித்தது. நியூட்டானிய இயற்பியலின் தாக்கம் எல்லா அறிதல் புலங்களிலும் இருந்தது. இவை உருவாக்கிய அமைப்புகள் இயந்திரமயமானவை. அனைத்தையும் குறுக்கி பார்க்கும் –reductionism- என்பதை மட்டுமே ஒரே அறிவியல் பார்வையாக முன்வைக்கப்பட்டது. காலனியம் பரவிய அந்தக் காலகட்டத்தில் நியூட்டானிய உலகப்பார்வை கோலோச்சியது. சூழலியல் குறித்துக் கவலைப்படாத மட்டற்ற பொருளாதார வளர்ச்சியை அது முன்வைத்தது. ஃப்ராய்டின் மனம் குறித்த பார்வையாகட்டும், ஆடம் ஸ்மித் முதல் கெயின்ஸ் வரையிலான பொருளாதாரம் ஆகட்டும், மூலக்கூறு உயிரியல் ஆகட்டும் அங்கெல்லாம் அடிப்படை அறிதல் சட்டகம் என்பது நியூட்டானிய அறிதலே.

ஆனால் ‘புதிய இயற்பியல்’ உருவான போது, அது பிரபஞ்சம் என்பது அதிலிருக்கும் அனைத்தும் ஒன்றோடொன்று பிணைக்கப்பட்டிருக்கும் உறவு இழைகளால் ஆனது என ஒரு பார்வையை முன்வைத்தது. இந்த ஒருங்கிணைப்புகள் (interconnectedness) குறித்து நோக்கும் அறிவியல் புலங்கள், சமூகப் பார்வைகள் சூழலியல் சார்ந்த ஒரு வளர்ச்சியை, வளங்குன்றா நீடித்த வளர்ச்சியை (sustainable development) முன்வைக்கின்றன. புதிய அறிவியலின் தொடக்கமாக ஒவ்வொரு அறிதல் புலத்திலும் ஏற்படும் பார்வை மாற்றங்களை முக்கியச் சிந்தனையாளர்களை, முதலடி எடுத்து வைப்பவர்களை நமக்கு கடந்த இருபதாண்டுகளுக்கும் மேலாக கவனப்படுத்தியபடியே இருக்கிறார்கள்.

Story image
Story image

கேப்ரா  உயிரியலில் ப்ரான்ஸிஸ்கோ வரேலா, ஹும்பர்ட்டோ மட்டுரானா முன்வைக்கும் ஆட்டோப்பயாஸிஸ் எனும் கோட்பாட்டை சுட்டுகிறார். Autopoiesis: auto-சுயம் poiesis-உருவாக்குதல்,  poetry என்பதுடன் தொடர்புடைய வார்த்தை. ஒருவித புத்தாக்கத்தன்மை கொண்ட உருவாக்குதல். நம் ஊரில் இதைச் சுயம்பு என்பார்கள். தான்தோன்றி. பெரும் கற்கோவில்களின் மூலவராக இருக்கும் லிங்கங்கள் முதற்கொண்டு தெருவோர மரங்களின் கீழே இருக்கும் படிமங்கள் கூட சுயம்புவாக இருப்பதைக் காணலாம். சூழலியலில் கயா கோட்பாட்டை அடிக்கோடிட்டு காட்டுகிறார். உளவியலில் பகுப்பாய்வுடன் நின்றுவிடாமல் முழுமைப்பார்வை கொண்ட transpersonal psychology, Jungian psychology ஆகியவை வளர்கின்றன. பொருளாதாரத்தில் சூழலியலையும் ஆற்றல்-பயன்பாட்டையும் கணக்கில் எடுக்க வேண்டுமென்கிற குரல் மேலெழுகிறது. முக்கியத்துவம் பெறுகிறது, E.F.ஷூமாக்கரின் ’பௌத்த’ பொருளாதாரம், ஹெசல் ஹேண்டர்சனின் மதீப்பீடுகள் கொண்ட தார்மீக சந்தை பொருளாதாரம் ஆகிய பார்வைகள் பொருளாதார மாற்றுச் சாத்தியங்களை முன்வைக்கின்றன. இவை அனைத்தும் ஒன்றோடொன்று தொடர்புடையவை.

கேப்ராவின் இந்தப் பயணத்தில் ஒரு மூதாதை குரல் அவருக்குக் கிடைக்கிறது. ரொம்பப் புராதன மூதாதை அல்ல. மத்தியகால ஐரோப்பாவில் வாழ்ந்தவர். ஓவியர், இயற்கை ரசிகர், தொழில்நுட்ப வல்லுனர் என பல பரிமாணங்கள் கொண்ட லியனார்டோ டாவின்ஸி. டாவின்ஸியின் அறிவியல் (Science of Leonardo) குறித்தும் டாவின்ஸியிடம் இருந்து நாம் என்ன கற்க முடியும் (Learning from Leonardo) என்றும் கேப்ரா எழுதியிருக்கிறார்.

லியனார்டோ டாவின்ஸியின் குறிப்புகளில் இன்றைய அறிவியல் பார்வைகளின் முன்னறிதல்கள் இருக்கின்றன. அன்றைக்கு அதிகார மத பீடமாக இருந்த ரோமன் கத்தோலிக்க சபை பரிசோதனை மூலம் உருவாகும் அறிவியலை தமது இறையியலுக்கான அச்சுறுத்தலாக பார்த்தது. அரிஸ்டாட்டிலிய தத்துவமே கிறிஸ்தவ இறையியலின் தத்துவார்த்த அஸ்திவாரமாக கருதப்பட்டது. அதை அசைத்துவிடும் சாத்தியம் கொண்ட எதையும் அனுமதிக்கலாகாது. ஆனால் டாவின்ஸி இந்த நிலைபாட்டை ஏற்றுக்கொள்ளவில்லை. கலிலியோவுக்கும் பிரான்ஸிஸ் பேகனுக்கும் முன்னரே பரிசோதனை அடிப்படையிலான அறிவியல் அறிதலை டாவின்ஸி முன்வைத்தார் என்கிறார். என்றால் நியூட்டானிய அறிவியலுக்கும் டாவின்ஸி (தன்னை அறியாமலே) முன்வைத்த அறிவியலுக்குமான வேறுபாடுதான் என்ன? டாவின்ஸி கலை மூலமாகவே அறிவியலுக்குள் நுழைந்தார் என்பதை சுட்டிக்காட்டுகிறார் கேப்ரா. இதுவே ஒரு முழுமைத்துவம் கொண்ட அறிவியல் அறிதலுக்கான பார்வையையும் பாதையையும் டாவின்ஸிக்கு திறந்தது.

டாவின்ஸி தான் பார்க்கும், கூர்ந்து கவனிக்கும் ஒவ்வொரு இயற்கை நிகழ்வையும் கையேட்டு ஓவியங்களாக வரைந்து வைத்து கொள்வார். அதில் குறிப்புகளும் இருக்கும். அவர் ஒன்றோடொன்று தொடர்புடையதாக அவதானித்த விஷயங்களை அருகருகில் வரைந்திருக்கிறார். நூற்றாண்டுகளுக்கு பிறகு கேப்ரா இவற்றை பார்க்கிறார். நீர் சுழல்கள், நீரோட்டங்கள், காற்றின் வேக ஓட்டங்கள் இவற்றுக்கும் மானுட உறுப்புகளின் தோற்றங்களுக்கும், அசைவுகளுக்கும் இருக்கும் ஒற்றுமைகளை இணைப்படுத்தி ஒரே பக்கத்தில் அருகருகில் வரையப்பட்டிருப்பதை  காண்கிறார். டாவின்ஸி உயிருள்ளவை உயிரற்றவை என்கிற பாகுபாட்டைத் தாண்டி ஒரு முழுமைப்பார்வையுடன் தன்னைச் சுற்றியிருக்கும் பொருண்மையையும் உயிர்த்துவ உலகையும் அணுகியிருக்கிறார் என்பதை கேப்ரா உணர்கிறார். இதுவே நியூட்டானிய இயந்திரப் பார்வையிலிருந்து டாவின்ஸியை வேறுபடுத்துகிறது என்கிறார் கேப்ரா.

Story image

டாவின்ஸியிடம் நகர வடிவமைப்பு குறித்து ஆலோசனைகள் கேட்கப்பட்டிருக்கின்றன. அவரும் ஆழமான ஆலோசனைகளை வழங்கியிருக்கிறார். நகரத்தை உயிருடைய ஒன்றாக பார்க்க வேண்டுமென்று கருதியிருக்கிறார். நீராதாரங்களை நகரத்தின் அல்லது அதைச் சார்ந்திருக்கும் குடியிருப்பின் ரத்த ஓட்டமாக பார்க்க வேண்டுமென்று கருதியிருக்கிறார். ஒரு ஆற்றைப் பயன்பாட்டுக்காக மாற்ற வேண்டுமென்றால் பிரம்மாண்டமாக அதன் மீது போர் தொடுப்பது போல செயல்பட கூடாது என்கிறார்.  அதை அன்புடன் திசைமாற கோரிட வேண்டுமென்கிறார். ‘A river, to be diverted from one place to another, should be coaxed and not coerced with violence’ சிறு அணைகளை பரிந்துரை செய்கிறார்.

இத்தகைய ஒரு பார்வை இந்திய மரபில் மீண்டும் மீண்டும் சொல்லப்படுகிறது. பால ஆதி சங்கரன் தன் தாய்க்காக பூர்ணா நதியை தன் வீட்டருகில் வரச் செய்ய அதை வேண்டிக் கொண்டான் என்கிற ஐதீக கதை உண்டு. தாழ்த்தப்பட்டவன் என்பதால் வேள்வியிலிருந்து ஒதுக்கி விரட்டப்பட்ட கவசகன் சரஸ்வதி நதியை தன் பாடல்களால் பிரவாகம் செய்ய வைத்தான் எனச் சொல்லப்படுகிறது.  சேரன்மாதேவியில் இருக்கும் மிளகுப் பிள்ளையார் கோவில் தலபுராணம் இந்த பார்வையில் சுவாரசியமானது.

பொதுநல சேவை செய்ய விரும்பிய கர்நாடக அந்தண இளைஞன் ஒருவனுக்கு அகத்தியர் நீராதார அமைப்புகளை அமைத்திட கூறினாராம். அதற்கான வழிமுறையாக ஒரு பசுவை பின்பற்றிச் செல்லச் சொன்னாராம். பசு சாணம் போடும் இடங்களில் மதகுகள் அமைக்கவும் அது சிறுநீர் பெய்யும் இடங்களில் மறுகால் அமைக்கவும் அது படுக்கும் இடங்களில் ஏரி தோண்டவும் அது மறையும் இடத்தில் மீதி தண்ணீர் அங்கே சேரும்படியாக ஒரு குளம் தோண்டவும் சொன்னாராம். இதை அந்தக் கர்நாடக அந்தணன் செய்தது அன்றைய திருவிதாங்கூர் ராஜ்ஜியத்தின் பகுதியாக இருந்த தமிழ் பிரதேசங்களில். இன்றும் இந்த கால்வாய்கள் கனடியன் கால்வாய்கள் என்றே அழைக்கப்படுகின்றன. சேரன்மாதேவியில்தான் இந்தப் பசு தோன்றியதாம். அங்கிருக்கும் மிளகுப் பிள்ளையார் கோவில் தலபுராணத்தில் இருக்கும் கதை இது.

Story image
Story image

ஐதீகக் கதைதான். வரலாற்றுச் சான்றோ அறிவியல் ஆதாரமோ இல்லாத கதையாகக் கூட இருக்கலாம்தான். ஆனால் அதில் உயிரின இயக்கத்துக்கும் நீரின் இயற்கையான ஓட்டத்துக்குமான ஒரு பிணைப்பு பேசப்படுகிறது. கதையின் இதயநாடி அதுதான். நம்முடைய பண்டைய நீர் பாசன முறையில் இயற்கையோடு இயைந்த ஒரு வடிவமைப்பு தொழில்நுட்பம் இருந்திருக்கிறது. இன்னும் அழகான விஷயம் என்னவென்றால் இந்த இயற்கையோடு இயைந்த தொழில்நுட்பத்திலிருந்து சமூக அமைப்புகளும் உருவாக்கப்பட்டிருக்கின்றன. நாதமுனிகள் தம் வாழ்நாளின் கடைசி காலத்தில் "குளப்படியில் மழைபெய்தால் ஒரு குருவி வாழும், வீராணத்தில் மழைபெய்தால் நாடெல்லாம் விளையும்' என்று தன் சீடர்களிடம் சொன்னாராம். சீடர்களுக்கு இதன் பொருள் புரியவில்லை. வீராணம் ஏரி சோழ தேசத்தில் உள்ளது. ஸ்ரீ ராமானுஜர் நேரில் சென்று பார்த்தாராம். வீராணம் ஏரியில்  எழுபத்து நாலு மதகுகள் வழியாக வயல்களுக்கு நீர் பாசனம் செய்யப்படுகிறது. நாதமுனிகள் கூறியதன் பொருளை புரிந்து கொண்ட ஸ்ரீ ராமானுஜர் இந்த அவதானிப்பின் அடிப்படையிலேயே எழுபத்து நான்கு மதகுகளாக எழுபத்து நான்கு சிம்காசனாதி பதிகள் எனப் பெரியோரை நியமித்து அருட்பெரும் வெள்ளமாக தாம் உணர்ந்ததை சமுதாயத்தில் அனைத்து மக்களுக்கும் கொண்டு போகச் செய்தார் என வைணவர்கள் கூறுகிறார்கள்.

டாவின்ஸியின் அறிவியல் போலவே நம் ஐதீகக் கதைகளிலும் புதைந்துதான் கிடக்கிறது மானுடத்துக்கான வாழ்வியல் உண்மைகள். பசுவின் பாதையைத் தொடர்ந்து கால்வாய் தோண்டிய பெயர் தெரியாத கனாடியனும், ஏரி மதகுகளிலிருந்து சமுதாய இயக்கத்தை உருவகித்த நாதமுனிகளும் லியனர்டோ டாவின்ஸியும் ஒன்றுபடும் புள்ளி இருக்கிறது: உயிரியக்கத்துடன் இணைந்த ஒரு வளர்ச்சி – அகத்திலும் புறத்திலும்.
 

இரு குறிப்புகள்:

(தாவோ ஆஃப் பிஸிக்ஸ் – தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. ‘இயற்பியலின் தாவோ: மொழிபெயர்ப்பு ஆசிரியர்: பொன். சின்னத்தம்பி முருகேசன், சந்தியா பதிப்பகம்.)

சேரன் மாதேவி நீர்நிலையின் இன்றைய பரிதாபநிலை  (புகைப்படங்கள்: திரு.ராமகிருஷ்ணன், விவேகானந்த கேந்திரம்)


                          ***

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.