சில ஆண்டுகளுக்குப் பிறகு, சில வேடர்கள், தம் குரு வனவாசிகளின் பைசாசிக மொழியில் ‘ப்ருஹத்கதாமஞ்சரி’ (பெரும்கதைமாலை) எனும் நூலை எழுதியிருப்பதாகவும், அதை அரசவையில் பாடிக் காட்டவும் அனுமதி கேட்டனர். ஆனால் சாலிவாகனனோ, பைசாசிகம் போன்ற இழி மொழிகளில் நல்ல இலக்கியம் எதுவும் இருக்க முடியாது எனக் கூறி அதை மறுத்துவிட்டான். இதற்கு பின்னர் அரசன் நோய்வாய்ப்பட்டான். அதற்குக் காரணம், அவன் உண்ட மாமிசம் தரக்குறைவாக இருந்ததுதான். அது ஏன் என விசாரித்தபோது, அவனுக்கு வேட்டையாடி மாமிசம் கொண்டுவரும் வனவாசிகள், தம் வனத்தில் ஒரு முனிவர் தினமும் இனிய பாடல்களைப் பாடுவதாகவும், அதை அனைத்து விலங்குகளும் கேட்டு ஊன் உறக்கம் மறந்து இருப்பதால், அவை மெலிந்துவிட்டதாகவும், எனவேதான் மாமிசம் சுவை குன்றி இருப்பதாகவும் கூறினர். இதைக்கேட்டு அதிசயப்பட்ட சாலிவாகனன், அவரைக் கண்டுவரப் புறப்பட்டான். காட்டில் ஒரு முனிவர் இனிய குரலில் பாடல்களை ஏட்டுச்சுவடிகளிலிருந்து பாடி, பின்னர் அவற்றை நெருப்பில் இடுவதைக் கண்டான். விலங்குகளும் மெய்மறந்திருக்கும் அற்புதமான பாடல். அந்த முனிவர் வேறெவரும் அல்ல, குணத்யர்தாம். சம்ஸ்கிருதத்தை விட்டு பைசாசிச மொழியைக் கற்று அதில் அவர்தான் ப்ருஹத்கதாமஞ்சரியை இயற்றியிருந்தார். இதை உணர்ந்த சாலிவாகனன், அவர் இலக்கியத்தின் மதிப்பை உணர்ந்து, அவற்றை அவர் நெருப்புக்கு இரையாக்குவதைத் தடுத்து மன்னிப்பு கேட்டுக்கொண்டான்.