போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

மாட்டிறைச்சி அரசியல் - ஒரு பார்வை

தாத்ரியில் நிகழ்ந்த விஷயம் ஒரு குற்றம். கொலைக் குற்றம். அந்த மனிதர் பசுவைத் திருடினாரா, கன்றைத் திருடினாரா அல்லது மாட்டிறைச்சி தின்றாரா அல்லது ஆட்டிறைச்சி தின்றாரா என்பதெல்லாம் கேள்விகளே அல்ல.

News image
Updated On :17 அக்டோபர் 2015, 9:23 am

அரவிந்தன் நீலகண்டன்

ண்மையில், தாத்ரியில் ஒரு இஸ்லாமியர் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மாட்டிறைச்சி விவாதம் தேசிய விவாதமாக மாற்றப்பட்டுள்ளது. ஒவ்வொரு முறை இந்தியம் சார்ந்த ஒரு விழிப்புணர்வு மேலெழும்போதும், இத்தகைய விவகாரங்கள் பெரும் தேசிய சர்ச்சைகளாக வெடித்துக் கிளம்புவதைக் காண இயலும். இதில் ஊடகங்களின் பங்கும் தூண்டுதலும் முக்கியமானவை.

Story image

இந்திய மண் சார்ந்த சிறுபான்மை மதப்பிரிவினர் சமணர்கள். இவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இறைச்சிக்கு வட இந்தியாவில் சில இடங்களில் விதிக்கப்பட்ட தாற்காலிகத் தடை ஒன்று ‘உணவு பண்பாட்டு ஒடுக்குமுறை’ என்றும் ‘உணவு பாசிசம்’ என்றும் ஊடகங்களால் திரிக்கப்பட்டது. ஏற்கெனவே 2008-ல் உச்ச நீதிமன்றம், சமண பண்டிகையின்போது கால்நடை வதைக்கூடங்களை மூடும்படி தீர்ப்பளித்தது.(1)

ஆனாலும், உணவு பாசிசம் என்கிற பிரசாரம் தொடர்ந்து நடைபெற்றது. இந்தப் பிரசாரத்தின் தொடர்ச்சியாக, தாத்ரியில் நடந்த உள்ளூர் விவகாரம் தேசிய நிகழ்வாக மாற்றப்பட்டது. எதுவானாலும், தாத்ரியில் நிகழ்ந்த விஷயம் ஒரு குற்றம். கொலைக் குற்றம். அந்த மனிதர் பசுவைத் திருடினாரா, கன்றைத் திருடினாரா அல்லது மாட்டிறைச்சி தின்றாரா அல்லது ஆட்டிறைச்சி தின்றாரா என்பதெல்லாம் கேள்விகளே அல்ல. ஒரு கும்பல் சேர்ந்து ஒரு மனிதரைக் கொலை செய்திருக்கிறது. அது கண்டிக்கப்பட வேண்டும். அந்தக் குடும்பத்துக்கு நீதி கிடைக்க வேண்டும்.

இதைப் பயன்படுத்தி ஊடகங்களும் முற்போக்கு பிரசாரகர்களும் செய்யும் பிரசாரங்கள், இங்கு மத்திய அரசை நோக்கியதாகவே இருக்கின்றன. இதில் இருப்பது வெறும் வெறுப்பும் அரசியலும்தான். எப்படியாவது ஓரணியில் உள்ள ஒரு சிலரை ‘ஆமா அதுக்கென்ன இப்போ?’ என்பதுபோல பேசவைக்க வேண்டும். அதற்கென்று ஒரு சில உளறல் திலகங்கள் (வேறெந்த சித்தாந்த அணியிலும் இருப்பது போலவே) இருக்கிறார்கள் என்பது வேறு விஷயம். அதன்பிறகு, அதையே ஒரு நிலைப்பாடாக மாற்றி அவர்களை ஊடகங்களில் அடி அடி என அடிக்க வேண்டும். இதில் இருக்கும் அடிப்படை அநீதியை விடுங்கள். அரசியல் சகுனித்தனம் என நினைத்துக்கொள்ளுங்கள். அது அரசியல் / சித்தாந்த எதிரிகளுக்கு உள்ளே உள்ள பிரச்னை.

Story image

DYFI அமைப்பினரின் மாட்டுக்கறி விழா

ஆனால், அதன்பிறகு ‘மாட்டிறைச்சித் திருவிழா’ என்று ஒன்றை நடத்துகிறார்களே முற்போக்குகள், அதில்தான் இருக்கிறது தாத்ரி கொலைக்கு நிகரான வன்முறை. அந்தக் கிராமத்துக் கொலைகாரக் கும்பலைக் காட்டிலும், கச்சிதமான வன்முறையையும் பாசிச மனப்பான்மையையும் கொண்டவை இந்த மாட்டிறைச்சித் திருவிழாக்கள். இதற்குப் பின்னணியில் இருக்கிற ஒரு மனப்பான்மை என்னவென்றால், மாட்டிறைச்சி என்பது பிராம்மணியத்தால் உருவாக்கப்பட்ட ஒரு மூடநம்பிக்கை.

வேத காலத்தில் மாட்டிறைச்சி சாப்பிட்டார்கள்… விவேகானந்தர் மாட்டிறைச்சி சாப்பிட்டார். காந்தி, தான் பிறந்த மதச்சூழலால் மாட்டிறைச்சி சாப்பிடுவதை ஏற்க முடியவில்லை. சிறுபான்மையினருக்கும் பிரிட்டிஷாருக்கும் எதிரான ஒரு அரசியல் ஆயுதமாகப் பசுவதை தடை மாறியது என தொடர்ந்து நேருவைக் கொண்டு இதை நிறைவு செய்யும்போது, மாட்டிறைச்சி ஒரு மகத்தான மாற்றுத்தரப்பாக நிறுவப்பட்டுவிட்ட திருப்தி கிடைக்கிறது.

கொஞ்சம் இந்த வரலாற்றாடலின் உள்ளே போய்ப் பார்க்கலாம்.

வேத காலம் முதல் விவேகானந்தர் வரை

வேத காலத்தில், மாட்டிறைச்சி சாப்பிட்டார்கள் என்பதைச் சொல்பவர்கள், வேத காலத்திலேயே பசுவுக்கு ‘அகன்யா’ – கொல்லப்படக்கூடாதது என்கிற பெயர் இருந்தது என்பதைச் சொல்லமாட்டார்கள். வேத இலக்கியம் முழுக்க, பசு ஒரு மதிக்கப்படும் விலங்காக வருகிறது. வளமையின் சின்னமாக, பிரபஞ்ச தாயாக, களங்கமற்ற அன்பாக, பசுவுக்கும் கன்றுக்குமான அன்பு வாத்சல்யம் வேத இலக்கியங்களில் பேசப்படுகிறது. மருந்துக்காக, மாட்டிறைச்சி – உதாரணமாக இளம் கன்று - மிக முக்கிய சில விருந்துகளில் மாட்டிறைச்சி படைக்கப்பட்டது. ஆனால் பசு போற்றப்பட்டது. நிச்சயம் அது வணங்கப்பட்டிருக்கும். பிரணவம் என்பதே பசு - கன்று வாத்சல்ய ஒலியின் மீட்டுருவாக்கமாக இருக்கலாம் என கொயன்ராட் எல்ஸ்ட் என்கிற இந்தியவியலாளர் கூறுகிறார்.(2)

Story image

வேத காலம் என்பது பொதுவாக ஆரியப் படையெடுப்பை ஏற்றுக்கொள்வோரால் கி.மு. 1500 என வரையறுக்கப்படுகிறது. வேதப் பண்பாட்டின் வேர்களையும் அம்சங்களையும் சிந்து - சரஸ்வதி நாகரிகத்தில் பார்க்கிறவர்களுக்கு, அதன்காலம் கி.மு. 4000-லேயே தொடங்குகிறது. எனவே, ராஜஸ்தானில் 2009-ல் கண்டெடுக்கப்பட்ட 4000 ஆண்டுகள் பழமையான எலும்புக்கூடு குறித்து நாம் பேசப்போவதை வேதங்களுடன் இணைக்கலாம், இணைக்காமல் இருக்கலாம். நீங்கள் எந்த நிலைப்பாட்டை எடுக்கப்போகிறீர்கள் என்பதைப் பொறுத்தது. இந்த எலும்புக்கூடு, தொழுநோய் வந்து சிகிச்சை அளிக்கப்பட்டவரின் எலும்புக்கூடு. உலகின் முதல் ஆவணப்படுத்தப்பட்ட தொழுநோயாளியின் எலும்புக்கூடு. விஷயம் என்னவென்றால், அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை அல்லது அவரைப் புதைக்கும்போது அந்த இடுகுழி ‘எரிக்கப்பட்ட பசுஞ்சாணப் பொடியால்’ (‘vitrified ash from burned cow dung’, ஆம் திருநீறேதான்!) நிரப்பப்பட்டிருந்தது.(3)

Story image

அதாவது, திருநீறை – பசுஞ்சாணத்திலிருந்து கிடைக்கும் பொருட்களை - மருத்துவத்திலும் சடங்கிலும் பயன்படுத்தும் மரபு, இங்கே குறைந்தது நாலாயிரம் ஆண்டுகள் முன்பிருந்தே தொடங்கிவிட்டது.

பசுவை ‘புனித விலங்கு’ என்று பார்த்திருப்பார்களா என்பது நமக்குத் தெரியாது. ஏனெனில், ‘புனித விலங்கு’ என்பது பின்னாட்களில் பிறர் உருவாக்கிய அடையாளச் சொல். ஆனால், தாயாக காமதேனுவாக கொல்லப்படத்தகாதவளாக வாத்சல்யத்தின் வடிவாகப் பார்க்கும் பார்வை வேதங்களில் தொடங்கிவிட்டது. பசுவைக் கொலை செய்வது அன்றைக்கு இருந்திருந்தது என வைத்துக்கொண்டால்கூட, பசுவதையைப் பாவம் எனப் பார்க்கும் நிலைப்பாடும் அப்போதே தொடங்கிவிட்டது.

தொடர்ந்து பசுஞ்சாணம், கோமியம் அனைத்தும் அன்றாட வாழ்வியலில் மிக அதிகமான அளவில் பயன்படுத்தப்படும் பண்பாடு ஒன்று உருவாக்கப்பட்டது. ‘ஆவினுக்கு அருங்கலம் அரன் அஞ்சாடுதல்’ என, பஞ்சகவ்யம் நம் பண்பாட்டில் சமயம் தொடங்கி மருத்துவம், விவசாயம் என அனைத்திலும் பயன்படுத்தப்பட்டது. இன்றைக்கும் இயற்கை விவசாயக் குழுக்களை இந்தியா முழுக்க இணைக்கக்கூடிய விஷயங்களில் ஒன்றாகப் பஞ்சகவ்யம் உள்ளது.

இஸ்லாமியப் படையெடுப்புகளில் இந்துக் கோவில்கள் உடைக்கப்பட்டபோது, அவற்றின் கர்ப்பக்கிரகங்களில் பசுக்களைக் கொல்வது ஒரு வெற்றிச் சடங்காகக்கூட செய்யப்பட்டது. பின்னர், பசுக்களை இந்துக்கள் வாழும் இடங்களில் கொல்வது, இந்துக்களை அவமானப்படுத்தும் செயலாக முன்னெடுக்கப்பட்டது. அதுவும்கூட நீடிக்கவில்லை என்பதுதான் முக்கியம். இந்தியாவை ஆண்ட மொகலாய மன்னர்களில், சமன்வய செயல்பாட்டில் ஈர்க்கப்பட்டவர்கள் பசுவதையைத் தடை செய்தனர். இதற்கு, மராட்டியர்களின் அழுத்தமும் ஒரு காரணமாக அமைந்தது. பின்னர் பிரிட்டிஷாரே, இந்தியாவில் பெரும்பாலான இடங்களில் இருந்த ஆட்டிறைச்சிக் கடைகளை மாட்டிறைச்சிக் கூடங்களாக மாற்றலாயினர். அவர்களின் ராணுவத் தேவைகளுக்காகச் செய்யப்பட்ட வேலை இது.

Story image

இறுதி மொகலாய அரசரான பகதூர் ஷா ஸஃபர், 1857 எழுச்சியின்போது, 12 மே 1857 அன்று, டெல்லியில் பசுவதையைத் தடை செய்து ஆணை பிறப்பித்தார். மட்டுமல்லாமல், அதே ஆண்டு ஜூலையில் அதை உறுதிசெய்து, யாராவது பசுவை வதை செய்வது கண்டுபிடிக்கப்பட்டால் அந்த நபர் சுட்டுக்கொல்லப்படுவார் என ஆணை பிறப்பித்தார். ஆகஸ்ட் 2, 1857-ல் பக்ரீத் பண்டிகையின்போது, பகதூர் ஷா இதே ஆணையை மீண்டும் பிறப்பித்தார்.(4)

இந்தப் பின்னணியிலேயே, விவேகானந்தர் மாட்டிறைச்சி சாப்பிட்டார் என்பதில் இருக்கும் அரை குறை உண்மையைப் பார்க்க வேண்டும். பசு மாமிச எதிர்ப்பாக எழுந்த 1857 எழுச்சியை தம் அமெரிக்க உரைகளில் ஆராதித்துப் பேசியவர் விவேகானந்தர். அவர் மாட்டிறைச்சி உண்டது இந்தியாவில் அல்ல, வெளிநாட்டில். இதில்கூட தேர்ந்தெடுத்து நடத்தப்படும் கருத்து மயக்க மோசடி ஒன்று உண்டு. அவர் மாட்டிறைச்சியை மேற்கில் இருக்கும்போது சாப்பிட்டதாகக் கூறப்படுவதை அவர் ‘தாமசத்திலிருந்து விடுபட இறைச்சி (மாட்டிறைச்சி அல்ல, meat not beef) சாப்பிடுங்கள்’ எனக் கூறுவதுடன் இணைக்கையில் நடைபெறுகிறது. எழுத்தரசியல் பிழைத்தோருக்கு அறம் கூத்தாகும்.

Story image

விவேகானந்தர் பசு சம்ரக்க்ஷணையைக் கடுமையாகத் தாக்கிய ஒரு தருணம், பஞ்சத்தில் மக்கள் இறந்துகொண்டிருப்பதை குறித்து கவலைகொள்ளாமல், பசு பாதுகாப்பு குறித்து பேசிக்கொண்டிருந்தவர்களைக் கண்டபோது. மேற்குறிப்பிட்ட பஞ்சத்தில், மிகக் கடுமையாகப் பஞ்ச நிவாரணப் பணியில் ஈடுபட்டவர்கள் ஆரிய சமாஜிகள்தான். விடுதலைப் போராட்ட வீரர் லஜ்பத் ராய் எழுதிய ஆரிய சமாஜம் நூலில் இந்தப் பணிகள் குறித்த விவரணங்களும், இந்தப் பணிகளுக்கு எதிராக பிரிட்டிஷ் அரசாங்கமும் மிஷினரிகளும் போட்ட முட்டுக்கட்டைகளும் விரிவாகக் காணக் கிடைக்கும். அதே ஆரிய சமாஜத்தினர், பசு பாதுகாப்பிலும் ஈடுபட்டனர். இதற்கு வலுவான காரணங்கள் இருந்தன.

பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில், இந்தியாவின் பசு இறைச்சி, பிரிட்டிஷாருக்கு நாக்கில் எச்சில் ஊறவைத்தது. அவர்களுக்கு இந்தப் பசு வணக்கம் பெரும் தடையாக இருந்தது. இந்தியர்களை மாட்டிறைச்சி சாப்பிடவைத்து பண்பாடு உடையவர்களாக்குவதற்கு இந்த பசு - கோமாதா உணர்ச்சி தடையாக இருந்தது. இதே நோக்கில்தான், இந்தியப் பசுக்கள் குறித்த சர்வேக்கள் இருந்தன.(5) காரல் மார்க்ஸ், ‘இந்து மதம் மனிதர்களை இழிவுபடுத்தி, இயற்கையின் சிகரமான மனிதனை விலங்கான பசுவின் முன்பும் குரங்கின் முன்பும் மண்டியிட வைத்துவிட்டது’ என எழுதினார்.(6)

இந்தக் காலகட்டத்தில்தான், கிழக்கிந்திய கம்பெனி சில பண்டிதர்களை ‘கமிஷன்’ செய்து, வேத கால ஆரியர்கள் பசுவைச் சாப்பிட்டார்கள் என எழுதவைத்தது. நாம் பசுவைச் சாப்பிட்டால் வெள்ளைக்காரன்போல் ஆகலாம் என்பதுபோல் நம்பிக்கைகள் பரப்பப்பட்டன. சைவ உணவு சாப்பிடுகிறவர்களிடம், ‘நீ இறைச்சி சாப்பிட்டால் வெள்ளைக்காரன்போல பலசாலி ஆகிவிடலாம்’ என்பது போன்ற ‘நாட்டார்’ பாடல்கள்கூட பாடப்பட்டன. காந்தியே சிறுவயதில் இப்படி ஒரு பாடலைக் கேட்டுத்தான், அந்தப் பாதையில் முதல் அடி எடுத்துவைக்க ஆட்டிறைச்சி சாப்பிட்டுப் பார்த்தார்.

பிரிட்டிஷாரின் ‘புனிதப் பசுவின்’ மீதான ‘சிலுவைப் போர்’ ஒரு திட்டமிட்ட இன ஒழிப்புச் செயலாக, குறைந்தபட்சம் வெளிப்பார்வைக்கு இல்லாமல் இருக்கலாம். ஆனால் அது நிறைவேறியிருந்தால், பின்னர் உருவாக்கப்பட்ட காலனிய பஞ்சங்களின்போது மிக மோசமான அழிவை நாடு சந்தித்திருக்கும். பிரிட்டிஷாரை எதிர்க்கும் எந்த வலிமையையும் அது இந்திய மனத்தில் இருந்து அழித்திருக்கும்.

இதற்கு இணையான மற்றொரு வரலாற்று நிகழ்வைக் காணலாம்.

அமெரிக்க எருமை அரசியல்

அமெரிக்க பூர்விகர்களின் புனித விலங்கான பெரும் எருமைகள், 1870-களில் கொல்லப்பட்ட நிகழ்வு அது. அமெரிக்க பூர்விகக் குடியினங்களில் பெரும்பாலானோர் பேரெருமையை உண்டார்கள். அதேநேரத்தில், அவற்றை தம் ‘புனித விலங்காக’க் கருதினார்கள். அமெரிக்கத் துப்பாக்கி வேட்டையர்கள், கட்டற்ற இறைச்சிக்காகவும், அமெரிக்கப் பூர்விகக் குடிகளின் வாழ்வாதாரத்தை அழிக்கவும், அமெரிக்கச் சமவெளிகளின் பேரெருமைகள் மீது துப்பாக்கிகள் கொண்ட சிலுவைப் போரை நடத்தினர். இறுதியில், எருமை ஒழிப்பு என்பதே அமெரிக்க பூர்விகர்களின் ‘திமிரை’ அடக்குவதற்காகச் செய்யப்பட்ட ஒரு பெரும் ‘கௌபாய்’ இயக்கமாக மாறியது. இதில், மதம் மாற்றப்பட்ட கையூட்டு பெற்றுக்கொண்ட அல்லது சொந்தப் பகைகளுக்காகச் செயல்பட்ட பூர்விகக்குடிகளும் சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள்.

Story image

19-ம் நூற்றாண்டில், சூழலியல், விலங்கினப் பாதுகாப்பு ஆகியவை குறித்த விழிப்புணர்வுகள் ஏற்பட்டிருந்தன. என்றபோதிலும், அமெரிக்கப் பெரும் எருமையினங்களை ஒழிப்பதை அமெரிக்க அரசு தடுக்கவில்லை. அவற்றைக் காப்பாற்ற அனுப்பப்பட்ட கோரிக்கைகள், மௌனமான கற்சுவரையே எதிர்கொண்டன. அமெரிக்க ராணுவ கமாண்டர் ஜெனரல் ஃபில் ஷெரிடியன், ‘பேரெருமைகளைக் கொல்வதே அமெரிக்கப் பூர்விகக் குடிகளை அடக்கிவைப்பதற்கான மிகச்சிறந்த வழி’ எனக் கூறினார். 1871-ல், அமெரிக்க அரசின் உள்துறைச் செயலர் கொலம்பஸ் டிலானோ இதே கருத்தை வலியுறுத்தினார். 4280 பேரெருமைகளைத் தனிமனிதனாகக் கொன்ற பில் கோடி, கௌபாய் நாயகனாகச் சித்தரிக்கப்பட்டான். (7)

Story image

எதிர்ப்புக்கான எந்த வலுவும் இல்லாமல், வாழ்வாதாரத்துக்கு அமெரிக்க வெள்ளையின காலனியாளர்களை நம்பி வாழும் நிலைக்குப் பூர்விகக் குடிகள் தள்ளப்பட்டனர். கூட்டம் கூட்டமாகப் பேரெருமைகள் கொல்லப்பட்ட சமவெளிகளில், சூரிய வெப்பத்தில் உலர்ந்து வெளுத்துக் கிடந்த எருமைகளின் எலும்புகளுடன், அமெரிக்கப் பூர்விகக் குடிகளின் எதிர்ப்பின் முதுகெலும்பும் உடைந்துகிடந்தது. இதை, சர்வ நிச்சயமாக உறுதிசெய்த பின்னரே, இந்தப் பேரெருமை இனத்தைப் பாதுகாப்பது குறித்து அமெரிக்க அரசு சிந்திக்க ஆரம்பித்தது.

Story image

இந்தியாவிலும் இதைப்போன்ற ஒரு நிகழ்வை பிரிட்டிஷார் நிகழ்த்தியிருப்பார்கள். பசுக்களை கோமாதா எனக் கருதும் ‘மூடநம்பிக்கை’யில் இருந்து வெள்ளையர்கள் நம்மை விடுவித்தார்கள் என வைத்துக்கொள்வோம். காலனிய அரசு தொடர்ந்து ஏற்படுத்திய பஞ்சங்களிலிருந்தும், அவர்களால் சிதைக்கப்பட்ட இந்திய விவசாயம் மீண்டிருக்க முடியாது. அப்போது உணவுக்காக, முழுக்க முழுக்க பிரிட்டிஷ் அரசிடம் இந்திய மக்கள் கையேந்தியிருப்பார்கள். காலனியம் அளிக்கும் கொழுத்த லாபத்தில், மிகச் சல்லிசாக மலின உணவை ‘கருணாமூர்த்தியாக’ இந்தியர்கள் மீது பிரிட்டிஷ் அரசு விட்டெறிந்திருக்கும். இந்திய விடுதலைப் போராட்டமே சில நூற்றாண்டுகள் பின்தங்கிப்போயிருக்கும்.

திலகர் – காந்தி வேறுபாடும் ஒற்றுமையும்

திலகர் காலகட்டத்தில் ஏற்பட்ட பசுப் பாதுகாப்புப் போராட்டத்தில், திலகர் இரண்டு விஷயங்களில் தெளிவாக இருந்தார். 1. முஸ்லிம்களின் அடிப்படை உரிமைகள்; 2. இந்து - முஸ்லிம் பிளவை உருவாக்குவதற்கான பிரிட்டிஷ் முயற்சிகளை முறியடிப்பது. எனவே, அவர் பசுவதை தடை குறித்துக் கூறிய கருத்து, எந்த ஒரு சிவில் சமூகத்துக்கும் முன்னுதாரணமாக இருக்கக்கூடியதாகும்.

ஒட்டுமொத்த பசுவதை தடையைக் கோரும் நிலையில், இந்துக்களோ அரசியல் சூழ்நிலையோ இல்லை. இந்துக்கள் வாழும் பகுதியில் பசுவதை செய்வது தண்டனைக்குரிய குற்றமாக இருக்க வேண்டும். அதேபோல, முஸ்லிம் ஒருவர் தன் வீட்டில் வைத்திருக்கும் பசுவை ஒரு இந்து பலவந்தமாக ‘விடுவிப்பது’ தண்டனைக்குரிய குற்றமாக இருக்க வேண்டும். அரசாங்கம், இந்துக்கள் வாழும் பகுதிகளில் பசுவதைக் கூடங்களையும், மாட்டிறைச்சி விற்பனை நிலையங்களையும் ஏற்படுத்துவது நிறுத்தப்பட வேண்டும்.(8)

பரஸ்பர இந்து - முஸ்லிம் நல்லெண்ணத்தையும், பிரிட்டிஷ் தந்திரத்துக்கான எதிர்ப்பையும் உள்ளடக்கிய ஒரு தீர்வாக திலகர் இதை முன்வைத்தார்.

Story image

ஆனால், காந்தி இதை வேறுவிதமாகப் பார்த்தார். அவர், பசுவை வணங்குவதை ஒரு பண்பாட்டு உச்சமாகக் கருதினார். மனித இனத்தின் மாபெரும் முன்னகர்வில் ஒன்றாக, பசுவை வணங்குவதை அவர் கண்டார் -

மானுட பரிணாம வளர்ச்சியின் மிக அற்புதமான விஷயம் பசுப் பாதுகாப்பு என்றே சொல்லுவேன். மானுடத்தை தன் உயிரினக் குழுவுக்கு அப்பால் அது உயர்த்துகிறது. பசு என்பது அனைத்து மானுடமற்ற உயிர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. மானுடமல்லாத அனைத்து பிற உயிர்களுடனான தன் ஆன்மநேய ஒருமைப்பாட்டை, பசுவின் மூலமாக மனிதன் சாத்தியப்படுத்துகிறான். ...மானுடத்துக்கு இந்து மதம் அளித்த பெரும் வரப்பிரசாதம் பசுப் பாதுகாப்பு.(9)

Story image

காந்தி, பசுப் பாதுகாப்பு என்பதை இந்துக்களின் மனம் புண்படாமல் இருக்கச் செய்யப்பட வேண்டிய சட்டம் ஒழுங்குப் பிரச்னையாகப் பார்க்கவில்லை. மாறாக, அனைத்து இந்துக்களிடமும் கொண்டு செல்ல வேண்டிய ஒரு அருட்செய்தியாக, நற்கொடையாக அதைப் பார்த்தார். இஸ்லாமியரோ பிரிட்டிஷாரோ பசுவை வணங்கும், பாதுகாக்கும் பண்பாட்டு மனநிலைக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்றும், அதற்கான மனமாற்ற முயற்சிகளை இந்துக்கள் எடுக்க வேண்டுமென்றும் அவர் கருதினார்.

அன்று நிலவிய, இன்றும் நிலவும் வகுப்புவாத சூழ்நிலையில், காந்தியின் இந்தப் பார்வை ஏனோ இருதரப்பினராலும் மறந்துவிடப்பட்டது. காந்தியின் பசுப் பாதுகாப்பிலிருந்தே ஆழ்-சூழலியலுக்கான (deep ecology) வேர்கள் பெறப்படுகின்றன. அனைத்து உயிர்களுடன் ஒன்றாகத் தன்னை கருதும் ஆன்மநேய ஒருமைப்பாட்டுக்கான (அத்வைதம்) ஒரு திறப்பாக, பசு வணக்கத்தைக் காந்தி கருதுகிறார். சூழலியல் சிந்தனையாளரும், ஆழ்-சூழலியல் எனும் பதத்தை உருவாக்கியவருமான அர்னே நயீஸ், காந்தியின் சூழலியல் சார்ந்த சிந்தனைகளுக்கான வேரை அவரது அத்வைதத்திலேயே காண்கிறார்.(10)

Story image

இந்தக் காந்தியப் பார்வையை மிகச்சரியாக அடுத்தகட்டத்துக்குக் கொண்டு சென்றவர்களில், ஜோசப் கர்னேலியஸ் குமரப்பாவையும் கன்னையாலால் முன்ஷி என்கிற கே.எம்.முன்ஷியையும் குறிப்பிட வேண்டும். குமரப்பா, காந்தியப் பொருளாதார மேதை. முன்ஷி, இந்தியாவின் முதல் விவசாய அமைச்சர். நேருவுக்கு எதிரான நிலைப்பாடுகளுடன், சங்கடத்துடனேயே அமைச்சரவையில் நீடித்தவர் முன்ஷி. ‘வலதுசாரி’ என முத்திரை குத்தப்பட்டவர். பொதுவாக, நம்மில் ஒரு பார்வை உண்டு. நேரு ‘அறிவியல் மனோபாவம்’ (scientific temper) கொண்டவர் என்றும், ஆனால் அவருக்கு எதிராக காங்கிரஸில் இருந்த ‘இந்து வலதுசாரிகள்’ ஏதோ மூடநம்பிக்கைகளில் ஆழ்ந்த ஆச்சாரவாதிகள் என்றும் ஒரு எண்ணம் நம்மில் விதைக்கப்பட்டுள்ளது. முன்ஷி, பசுப் பாதுகாப்பு குறித்து 1950-களில் முன்வைத்த கருத்துகள், இன்றும் ஒரு சூழலியலாளரை ஆச்சரியப்படுத்துபவையாகவே உள்ளன -

Story image

குலபதி முன்ஷி

கோமாதாவும் நந்தியும் இந்த நாட்டில் வழிபடப்படுவது வீணாக அல்ல. அவை இங்கு மண்வளத்தை செறிவூட்டும் இயற்கையின் புராதன காரணிகள். நிலத்தின் வளத்தை மாற்றியமைக்கும் பெரும் சக்திகள். அவை அளிக்கும் உயிர்மப் பொருட்களிலிருந்து சத்தூட்டம் கொண்ட இடு பொருட்கள் கிடைக்கின்றன. இந்தியாவில் பாரம்பரியம், மத உணர்வுகள், பொருளாதாரக் காரணங்கள் ஆகியவை எல்லாம் இயற்கைச் சுழலுடன் இணைந்திருக்கின்றன. இவற்றை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும் என்பதுதான் விஷயம்.(11)

Story image

ஜோசப் குமரப்பா

காந்திய பொருளாதாரவாதியான ஜோசப் குமரப்பா, முன்ஷி கூறும் இதே விஷயத்தை அதற்கான தொழில்நுட்ப அடிப்படையுடன் கூறினார். சாண எரிவாயுக் கலன்கள் மூலம் எரிசக்தி மட்டுமல்ல, அதிலிருந்து வெளியாகும் கழிவு (slurry), ஊட்டச்சத்துமிக்கதாக இருக்கும் என்பதையும், அது இந்தியாவின் மண் ஊட்டச்சத்து தேவைக்கான ஒரு மாற்றாக அமையும் என்பதையும் அவர் வலியுறுத்தினார். இன்னும் சொன்னால், இந்தக் கழிவுநீர், சாண எரிவாயுவைவிட முக்கியமான ஒன்று என அவர் கூறினார்.

சுதந்தர இந்தியாவில், உள்ளூர் பசுக்களின் இந்தப் பரிமாணங்கள், நேருவிய பொருளாதார நோக்கர்களால் கண்டுகொள்ளப்படவே இல்லை. அத்துடன், இந்திய அரசிய நிர்ணய சட்டத்தின் வழிகாட்டு நெறிகளில், பசு - கால்நடைப் பாதுகாப்பு ஒன்றாக இருந்தது. அதன் அடிப்படையில், பசுவதை தடை ஏற்படுவதை எதிர்த்து, 1958-லேயே முகமது குரேஷி வழக்கு தொடர்ந்தார். முழுக்க முழுக்க வகுப்புவாதக் கண்ணோட்டத்துடன் இந்த வழக்கு தொடரப்பட்டது. 3000 இஸ்லாமிய கசாப்புக் கடைக்காரர்கள் இணைந்து நடத்திய இந்த வழக்கில். பசுவதை தடை என்பது இஸ்லாமுக்கு எதிரானது எனக் கூறப்பட்டது. உச்ச நீதிமன்றம், இந்த நிலைப்பாட்டை முழுமையாக மறுத்தது. இஸ்லாமோ குரானோ, பசுவதையை மதக் கடமையாக்கவில்லை என உச்ச நீதிமன்றம் கூறியது.(12) அதேபோல, பொருளாதாரத்துக்கு முழுமையான பசுவதை உகந்ததல்ல என்றும் அதே தீர்ப்பு கூறியது.

வாஜ்பாய் ஆட்சியிலும் இதே பிரசாரம்

பசுவதையும் பசுவணக்கமும் தொடர்ந்து ஒரு பிரசார கருவியாக இருந்துகொண்டே இருக்கின்றன. இந்தியாவை பிற்போக்கான நாடாகக் காட்ட அது ஒரு நல்ல ஆயுதமாகப் பயன்படுகிறது. ‘புனிதப் பசு என்கிற புனைகதை’ (Myth of the Holy cow) எனும் தலைப்பில், மார்க்ஸிய வரலாற்றாசிரியர் த்வஜேந்திர நாராயண் ஜா என்பவர் ஒரு புத்தகத்தை 2001-ம் ஆண்டு எழுதினார். ஆண்டை கவனியுங்கள். வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு இருந்த ஆண்டு.

இந்தப் புத்தகம் வெளிவந்தபோதும் சரி, பிறகும் சரி, இந்தப் புத்தக ஆசிரியருக்கு எவ்வித ஆபத்தும் ஏற்படவில்லை. இந்திய அரசு இந்தப் புத்தகத்தை தடை செய்வது குறித்துக்கூட ஏதும் பேசக்கூட இல்லை. ஆனால், வெளிநாடுகளில் இந்தப் புத்தகம் சந்தைப்படுத்தப்பட்டபோது, ‘சடங்கு சம்பிரதாயத்துடன் எரிக்க வேண்டுமென்று இந்திய அரசு கோரியது இந்தப் புத்தகத்தைத்தான்’ (’A book that government of India demands to be ritually burnt') என்கிற வரிகளுடன் சந்தைப்படுத்தப்பட்டது. அப்சர்வர் பத்திரிகை, ‘சல்மான் ருஷ்டிக்குப் பிறகு இந்த ஆசிரியர்தான் இத்தனை அடிப்படைவாத வன்முறையை ஏற்படுத்தியதில்லை’ என எழுதியது. இவை அனைத்தும் அப்படியே நடந்ததுபோல, ‘இந்து வலதுசாரிகள்’ குறித்து அமெரிக்கப் பல்கலைகளில் உள்ள ‘தெற்காசிய’ துறைகளில் பயன்படுத்தப்படும் நூல்களில் உள்புகுத்தப்பட்டது. நடக்கவே இல்லாத ஒரு வன்முறை, இவ்விதமாக பசுவின் பெயரால் உருவாக்கப்பட்டு உண்மையாக்கப்பட்டுவிட்டது!(13)

Story image

ஆனால், இந்தியாவில் இணைய எதிர்ப்புக் குரல்களையும், பத்திரிகை ஆசிரியருக்கான கடிதங்களையும், ஒரு சில மின்னஞ்சல்களையும் தாண்டி, ஒரு வன்முறையோ அல்லது ஆர்ப்பாட்டமோ இந்த நூலுக்கு எதிராக எழவில்லை. மாறாக, இந்த நூல் ஆசிரியர் வெளிப்படையான விவாதத்துக்கு அழைக்கப்பட்டார். ஆனால், அவர் அதற்கு முன்வரவில்லை. இதற்கு அவருக்கு நல்ல காரணங்கள் இருந்தன. 1998-ல் ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சியில், வேத காலத்தில் பசு இறைச்சி உண்ணப்பட்டதாக அவர் தோழரான மற்றொரு மார்க்ஸிய வரலாற்றாசிரியர் கே.எம்.ஷிர்மாலி பேச, அவர் சொன்னதற்கு நேர் மாறாக, பசு கொல்லப்படத்தகாதது என்பதற்கான ஆதாரத்தை பார்வையாளர்கள் முன்வைக்க ஷிர்மாலி மிகவும் மோசமாக தோற்கடிக்கப்பட்டார்.(14)

ஆனால், இதிலெல்லாம் உள்ள மோசடி, இந்தியாவைப் பசுவுக்காக மக்களைக் கொல்லத் துடித்துக்கொண்டிருக்கும் ஒரு தேசமாகச் சித்தரிப்பது.

2001-ல் ஜாவின் புத்தகம் வெளிவந்தது. அன்றைய பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய், இதற்கான ஒரு அருமையான எதிர்வினையை அற்புதமாக உருவாக்கியிருந்தார். புகழ்பெற்ற காந்திய வரலாற்றாசிரியரான தரம்பாலை அழைத்தார். இந்தியாவில் பசுவதையின் வரலாற்றை ஆராய்ந்து ஒரு நூல் எழுதச் சொன்னார். ‘இந்தியாவில் பசுவதை – அதன் பிரிட்டிஷ் தொடக்கம்’ என்பதுதான். 2002-ல் வெளிவந்த நூலின் பெயர்.

Story image

ஜாவின் புத்தகம்போல, தரம்பாலின் புத்தகம் சந்தைப்படுத்தப்படவில்லை. ஏன், முற்போக்காளர்கள் வழக்கம்போல அப்படி ஒரு நூலே வராததுபோல அதைக் கடந்து சென்றார்கள். ஆனால், தரம்பாலின் நூல் பல விஷயங்களை வெளிக்கொண்டு வந்தது. பசுவதை எதிர்ப்பு என்பது இஸ்லாமியருக்கு எதிரானது அல்ல. ஏனெனில், அது இந்திய இஸ்லாமியர்களால் செய்யப்பட்டது அல்ல. இன்னும் சொன்னால், அமெரிக்கச் சமவெளிகளில் பேரெருமைகளை வெள்ளையர்கள் வேட்டையாடிக் கொன்று குவித்த பத்தாண்டுகளில், இந்தியாவில் பசுப் பாதுகாப்பு இயக்கம் தீவிரமாகச் செயல்படத் தொடங்கிவிட்டது. உண்மையில், அது பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கான எதிர்ப்பே. அந்த எதிர்ப்பில் பார்ஸிகள், இஸ்லாமியர், சீக்கியர் என இந்தியாவின் அனைத்துத் தரப்பு மக்களும், தலைவர்களாகவும் தொண்டர்களாகவும் இருந்தனர். 1857-க்குப் பிறகு மிகப்பெரிய அளவில் பிரிட்டிஷாருக்கு தலைவலி கொடுக்கும் இயக்கமாக இதுவே இருக்கும் என்பதில் பிரிட்டிஷாருக்கு ஐயம் இருக்கவில்லை. இந்திய முஸ்லிம்கள் மாட்டிறைச்சி உண்பவர்கள் என்பதே, பிரிட்டிஷ் உருவாக்கிய ஒரு வரலாற்று மாயை என அந்த நூல் வெளிக்கொணர்ந்தது.(15)

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் காலனிய மனநிலை நீட்சியாக, நாம் நேருவிய ஆட்சியாளர்களைக் காண வேண்டிய ஒரு துன்பகரமான சூழ்நிலை நிலவுகிறது என்பதுதான் உண்மை. அதே பிரிட்டிஷ் பிரித்தாளும் சூழ்ச்சியே, இன்றும் அவர்களால் பசுவதை தடை விஷயத்தில் கையாளப்படுகிறது.

பாதி உண்மையும் முழுப் பொய்யும் : தொடரும் விஷமப் பிரசாரம்

தாத்ரி நிகழ்வு, தயங்காமல் மிகக்கடுமையாகக் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று என்பதிலும், அந்தப் படுகொலைக்கான தண்டனை, கட்டாயம் அதைச் செய்தவர்களுக்குக் கிடைக்க வேண்டும் என்பதிலும் இரண்டாம் அபிப்பிராயம் இருக்க முடியாது. அதைவைத்து, மீண்டும் பசு வதை தேவை என்கிற பிரசாரமே மேலெழுப்பப்படுவதைக் காணமுடிகிறது. இதைச் செய்பவர்கள் யார்? இந்தியாவின் மேல்தட்டு வர்க்கத்தினர்.

உதாரணமாக, ‘இந்தியா டுடே’ பத்திரிகை இந்தப் படுகொலையை ‘மாட்டிறைச்சியின் அரசியல்’ என்றே முகப்புக் கட்டுரையாக வெளியிட்டது. இந்தியக் கால்நடைகள் – குறிப்பாக பசுக்கள் - வெளிப்படுத்தும் மீத்தேனால் புவி வெப்பமடைவதை அக்கட்டுரை கூறுகிறது. அரை பில்லியன் எண்ணிக்கை கொண்ட இந்தியக் கால்நடைகளால் ஒவ்வொரு வருடமும் 14.32 மில்லியன் டன் வாயுக்கள் – புவியை வெப்பமடையவைக்கும் Green House Gases (GHG) - வெளியிடப்படுகிறதாம். இது உலக GHG வெளிப்படுத்துதலில் 15 சதவிகிதமாம்.(16) எனவே, பூமி வெப்பமேற்றத்தைத் தவிர்க்க பசுக்களைக் கொலை செய்யுங்கள் என்பது பெறப்படும் பாடம்.

ஆனால், ‘இந்தியா டுடே’ சொல்லாமல் தவிர்த்த செய்தி ஒன்று உண்டு. இந்தியப் பசு சாணங்களின் மொத்த ஆற்றல் சாத்தியம் 562.2 பெட்டா ஜூல் (1 பெட்டா ஜூல் = 10^15 ஜூல்கள்). எருமைச் சாணத்தின் ஆற்றல் மதிப்பு 336 பெட்டா ஜூல்கள். இதன்மூலம் ஒரு கோடியே எழுபது லட்சம் சாண எரிவாயுக் கலன்கள் அமைக்கமுடியும். அதுபோல, 1,50,000 சமுதாய சாண எரிவாயுக் கலன்கள் அமைக்கமுடியும். ஒட்டுமொத்தமாக, பயோகேஸ் உற்பத்தி மூலமாக 138.33 மில்லியன் டன்கள் கார்பன் டை ஆக்ஸைடுக்கு சமமான GHG வெளியிடுவதைத் தடுக்க இயலும்.(17)

மாட்டிறைச்சி – இறந்த மாட்டின் இறைச்சியை ஏற்றுமதி செய்வதென்பது வேறு, அதனையே ஒரு பெரும் தொழிலாக்கி அதற்காகவே மாடுகளைக் கொன்று, அதனை இந்திய நுகர்வுக் கலாசாரத்தின் ஒரு பகுதியாக்குவது என்பது வேறு.

Story image

கடந்த ஆறு ஆண்டுகளாக, ஆண்டுதோறும் நேஷனல் ஜியாக்ராபிக் எனும் புகழ்பெற்ற பத்திரிகை ஒரு சர்வதேச ஆய்வு நடத்துகிறது. பசுமை வாழ்வுமுறையைக் கணக்கிடும் ‘Greendex’ எனப்படும் அளவைக்கொண்டு, 18 நாடுகளில் வாழும் மக்களின் பசுமை நடத்தை தரப்படுத்தப்படுகிறது. அதில் தொடர்ந்து இந்தியாவே முதல் இடத்தில் உள்ளது. குறிப்பாக, உணவுப் பண்பாட்டில் இந்தியாவின் மாட்டிறைச்சி மீதான பண்பாட்டுக் கட்டுப்பாடு, இந்தியாவின் உணவுப் பழக்கவழக்கத்தை வளங்குன்றா வளமைத்தன்மை (sustainable development) கொண்டதாக ஆக்கும் காரணிகளில் ஒன்று.(18)

இந்தத் தரவுகள் அனைத்தும் மறைக்கப்பட்டும் மௌனமாக்கப்பட்டும் வருவதன் மூலம், இந்தியா மாட்டிறைச்சி உட்கொள்ளும் ஒரு தேசமாக்கப்படும் பட்சத்தில், இதனால் ஏற்படும் இழப்பு மிக மோசமானதாக இருக்கும். கால்நடைப் பன்மை, பண்பாட்டுத் தனித்தன்மை, மீட்கப்பட முடியாத விதத்தில் அழிக்கப்படும் இந்தியாவின் விவசாய சுய சார்பு – இவை அனைத்துக்கும் இன்றைய இந்தியாவுக்கும் இடையில் நிற்கும் ஒரு கலாசார அரணாகப் பசு வணக்கம் இருக்கிறது.

பசுவின் பாதுகாப்பு வன்முறை அல்லது அரசு சட்டம் சார்ந்து உருவாக்கப்பட முடியாதது. ஏற்கெனவே அப்பாவி வாகன ஓட்டிகளைப் பிடித்து மனிதத்தன்மையில்லாமல் பசுப் பாதுகாப்பு எனும் பெயரில் உதைக்கும் மாஃபியா கும்பல்கள், பசுப் பாதுகாப்பை மலினப்படுத்துகின்றன. பசுப் பாதுகாப்பு என்பது எந்த ஒரு சமய சமூகக் குழுவினரையும் பகைத்து உருவாக்கப்பட முடியாதது. இதைப் பசுப் பாதுகாப்பு குறித்து பேசுவோர் உணர வேண்டும். பசுவதையை ஆதரிப்பவர்கள், மாட்டிறைச்சி அரசியல் பேசுவோர் – பசுப் பாதுகாப்பை அதன் சூழலியல் வரலாற்றுத் தொடர்புகளில் இருந்து வெட்டி, அதனை ஒரு மதவெறி வன்முறையாக மட்டுமே காட்ட முயற்சி செய்கின்றனர். அந்தப் புதைகுழியில் பசுப் பாதுகாப்பு பேசுவோர் விழுவதைக் காட்டிலும் ஆபத்தான விஷயம் இந்தியப் பசுவுக்கு ஏற்பட முடியாது.

இந்துத்துவ அறிவு இயக்கம், தரம்பால் மூலமாகவும் பசுப் பாதுகாப்பின் காந்தியக் கருத்தியலையும், சாண எரிவாயு தொழில்நுட்பத்தின் மூலம் அவர்களின் களப்பணியாளர்கள் ஜோசப் குமரப்பாவின் பசு பாதுகாப்பின் காந்தியப் பொருளாதாரக் கருத்தியலையும் முன்னெடுக்கிறார்கள். ஆனால், பசுவதை ஆதரிப்பாளர்களோ, உதிரி வன்முறைகளை ஒற்றைப்படையாக அடையாளப்படுத்தி, ஒரு பண்பாட்டு மூலத்தனத்தையே அழிக்கிறார்கள். எனவேதான், பசுப் பாதுகாப்பு என்பது ஒட்டுமொத்தமாக அரசையும் ஒரு துளி வன்முறையையும் சாராமல் முழுக்க முழுக்க ஆன்ம - அறிவு பலத்தினால் மட்டும் நிகழ்த்தப்பட வேண்டிய ஒரு தவமாக மாறியுள்ளது. ஏனெனில், பசுப் பாதுகாப்பை உணர்ந்துகொள்பவன் மட்டுமே, காந்தியின் அந்தராத்மாவையும் இந்தத் தேசத்தின் ஆன்மாவையும் உணர்ந்துகொள்ள முடியும்.
 

சான்றாதாரங்கள்

Hinsa Virodhak Sangh vs Mirzapur Moti Kuresh Jamat & Ors on 14 March, 2008:http://indiankanoon.org/doc/560071/

Gwen Robbins etal, Ancient Skeletal Evidence for Leprosy in India (2000 B.C.); URL:http://journals.plos.org/plosone/article?id=10.1371/journal.pone.0005669

S.Mahadi Husain, Bahadur Shah Zafar; And the War of 1857 in Delhi, Aakar Books, 2006, p.38

John Reader, Human ecology:how land shapes society, New Scientist, 8 September 1988

Karl Marx, The British Rule in India 1853, Selected Works of K. Marx and F. Engels, Progress Publishers, Moscow, 1977, vol. 1., p. 493

Peter Farb, Ecology, Time-Life series, 1971,pp.158-60

S.R.Sharma, Historical perspectives on communalism, APH Publishing Corporation, 1998, p.163

காந்தி, யங் இந்தியா, 6-10-1921

Arne Naess, The Ecology of wisdom, Counterpoint Press, 2010, p.90

K.M.Munshi, Our Greatest Need: And Other Addresses, Hindustani Cellulose & Paper Company, 1953, p.89

Mohd. Hanif Quareshi & Others vs The State Of Bihar(And Connected ... on 23 April, 1958: http://indiankanoon.org/doc/93885/

Wendy Doniger, Martha C. Nussbaum, Pluralism and Democracy in India: Debating the Hindu Right, Oxford University Press, 2015, p.312

Arun Shourie, Eminent Historians – their technology, their line, their fraud, ASA,1998, pp.40-1

Dharampal & T. M. Mukundan, The British Origin of Cow-Slaughter in India With Some British Documents on the Anti-Kine-Killing Movement 1880-1894,SIDH,2002

Beef, Ban & Bloodshed, India Today, 19-Oct-2015

Mrinalini Goswami et al.,Replacing Conventional Fuels through Biogas for Mitigating the threats related to climate change in India: A state-wise assessment for emission reduction, in 'Management of Water, Energy and Bio-resources in the Era of Climate Change: Emerging Issues and Challenges' (Ed.N. Janardhana Raju, Wolfgang Gossel, AL. Ramanathan, M. Sudhakar) Springer, 2014, p.197

Andrea Stone, Global Survey Says We're Eating Better, But Our Diet Is Still Unsustainable, National Geographic, 29-Sep-2014

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.