வேற்றுலகவாசிகள்… சொன்னதுமே நினைவுக்கு வருவது பறக்கும் தட்டுக்கள்தான். ஹாலிவுட் அறிவியல் புதினப் படங்கள். 1950-கள் முதல் 70-கள் வரை, மேற்கத்திய நாடுகளில், குறிப்பாக அமெரிக்காவில் வேற்றுலகவாசிகள், பறக்கும் தட்டுகள் போன்றவை குறித்த பெரிய பரபரப்பு இருந்தது. ரோஸ்வெல் என்கிற இடத்தில் விழுந்த பறக்கும் தட்டை அமெரிக்க ராணுவம் கைப்பற்றியது என்றும், அங்கிருந்து வேற்றுலகவாசிகளின் உடல்கள் அமெரிக்க ராணுவத்தின் ரகசிய மையங்களுக்கு எடுத்துச்செல்லப்பட்டதாகவும் கூறப்பட்டன. பறக்கும் தட்டுகள் பல இடங்களில் காணப்பட்டதாகவும் செய்திகள் குவிந்தன. ஒருகட்டத்தில், அமெரிக்க விமானப்படையே ஒரு உயர்மட்ட புலனாய்வுக் குழுவை நியமித்தது. கோண்டோன் கமிட்டி, 1966 முதல் 1968 வரை, பறக்கும் தட்டு குறித்த அனைத்து தரவுகளையும் ஆராய்ச்சி செய்து, பொதுவாக அவை இயற்கையான விஷயங்கள், ஆனால் தவறாகக் காணப்பட்டு விநோதமாகப் புரிந்துகொள்ளப்பட்டவை என்பதாக ஒரு முடிவுக்கு வந்தது.