போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

உயிர்த்தெழுதல்

கன்னிக்குப் பிறந்து சிலுவையில் அறையப்பட்ட பின்னர் உயிர்த்தெழுந்த ஏசு என்பவரை, வரலாற்றுச் சத்தியமாக அப்படியே நம்பினால், அவர் கண்காட்சிகளில் நாம் காணும் இரண்டு தலை மனிதன் போன்ற ஒரு அதிசயப் பிறவி அவ்வளவுதான். அதிசய நிகழ்வுகளின் அதிசயம் என்பது, அதற்குள் அள்ள அள்ளக் குறையாமல் சுரக்கும் அகப்பொருள்தான். அதைப் பார்க்கும் ஒவ்வொரு மனிதனும், அதற்குள் தனக்கான பொருளை பெற்றுக்கொள்ள முடியும்.

News image
Updated On :27 மார்ச் 2016, 2:02 am

அரவிந்தன் நீலகண்டன் / சாந்தினிதேவி ராமசாமி

அண்மையில், ‘இந்திய அறிதல் முறைகள்’ புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில், சொல்வனம் இணைய இதழ் ஆசிரியர் ரவிசங்கர், முதல் பிரதியை வெளியிட்டு உரையாற்றினார். அந்த உரையின்போது, நூலில் இருந்த ஒரு விஷயத்தை அவர் சுட்டிக் காட்டினார்.

Story image

பருப்பொருள் என்பதற்கு ஆங்கிலத்தில் matter எனச் சொல்கிறோம்.  சொற்களின் வேர்கள் தொடர்பு எனப் பார்த்தோம் என்றால் matter, matrix, mother ஆகியவை எல்லாம் தொடர்புடையவை. இப்படி பருப்பொருளை பெண்ணாகப் பார்க்கும் ஒரு பார்வை, இந்தோ-ஐரோப்பிய மொழிகள் எனப் பகுக்கப்படும் மொழிக்குடும்பங்களில், வேர் ஆழங்களில் இருப்பது குறித்து ஆச்சரியம் தெரிவித்தார் அவர்.

ஒரு கதை சொல்லப்படுகிறது.

Story image

வரலாற்று ஆதாரமற்ற, ஆனால் அழகான கதை. 18-ம் நூற்றாண்டில் நடந்திருக்கலாம். இங்கிலாந்தில் ஆக்ஸ்போர்ட்டில் இறையியல் தேர்வு ஒன்றில் ஒரு கேள்வி கேட்கப்பட்டிருந்தது. ஏசுவின் முதல் அற்புதச் செயல் கானாவூர் எனும் இடத்தில் ஒரு திருமணத்தில் நடந்தது. நீரை திராட்சை ரசமாக ஏசு மாற்றினார். இந்த அற்புதச் செயலின் முக்கியத்துவம் குறித்து விளக்கி எழுதுமாறு கேட்டிருந்தார்கள். மாணவர்கள் பத்தி பத்தியாக எழுதினார்கள். ஆனால், ஒரு மாணவன் ரொம்ப நேரம் யோசித்து ஒரே ஒரு வரி மட்டும் எழுதினான்: ‘தண்ணீர் தன் நாயகனைப் பார்த்து முகம் சிவந்தாள்’.  அச்சிறுவன்தான், பிற்காலத்தில் பைரன் எனும் கவி என்கிறது கதை.

அலெக்சாண்டர் போப் முதல், பலருக்கும் இந்த வரியும் கதையும் பொருத்தப்பட்டுள்ளது என்றாலும், இதில் இருக்கும் ஒரு ஆழமான பார்வையும், அடிப்படை தத்துவ தரிசனமும் சுவாரசியமானது. சாங்கிய மரபில், பிரகிருதி புருஷன் என்கிற இருமை உள்ளது. இறைவனை புருஷனாகப் பார்க்கும் மரபு அங்கே இருக்கிறது. சாங்கிய மரபின் ஒளியில் இந்த வரிகளை இன்னும் ஆழமாக நம்மால் உள்வாங்க முடியும். சாங்கிய மரபின் பிரகிருதி பின்னர் தாந்திரீக - சாக்த மரபுகளில் செயலியக்கமும் தன்னுணர்வும் கொண்ட ஆதாரப் பொருண்மையாக மாறுகிறது. தண்ணீர் தன் நாயகனைப் பார்த்து முகம் சிவந்து திராட்சை ரசமாக மாறிய அற்புதம் ஒரு குறியீடாக மாறுகிறது. இந்தியப் புராணப் பண்பாட்டு மரபில் அது அப்படித்தான் விரிவடைந்திருக்கும்.  ஒரு அடிப்படை அகப்படிமமாக மாறியிருக்கும்.

Story image

கிறிஸ்துவை அப்படி அறிந்துகொள்வது எந்த அளவு அவசியம் அல்லது எந்த அளவு சரியான விஷயம்? நிறுவன கிறிஸ்தவம், ஏசுவை ஒரு வரலாற்று மையமான இறைமகனாகவே முன்வைக்கிறது. ஆனால், கிறிஸ்தவ இறையியலில் – குறிப்பாக கடந்த இரு நூற்றாண்டுகளாக - சில மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. அவற்றில், இந்தியத் தரிசனங்களின் பங்கு முக்கியமானதாக உள்ளது. ஆனால், இந்தக் கிறிஸ்தவ இறையியல் பார்வை மாற்றம் இந்தியாவில் இயங்கும் கிறிஸ்தவச் சபைகளை வந்தடையவில்லை. அவற்றில் பெரும்பாலானவை, இன்னும் மதமாற்ற நோக்கத்துடன் மட்டுமே இயங்குகின்றன. மாறாக, இந்துக்களில் ஒரு பிரிவினர், ஏசுவை யோகி என்றும் காஷ்மீர் வந்தார் என்பது போன்ற வரலாற்றுக் கதையாடல்கள் மூலமும் உட்கிரகிக்கப் பார்க்கின்றனர். பரமஹம்ச யோகானந்தா முதல் ரஜனீஷ் (ஓஷோ) வரை இத்தகைய முயற்சிகளும் நடக்கின்றன.

உண்மையான பார்வை மாற்றமும் புரிதலும் இன்னும் ஆழமானவை.

Story image

ஆலன் வாட்ஸ், அடிப்படையில் கிறிஸ்தவ இறையியலாளர். இந்திய -  சீன - ஜப்பானிய ஆன்மிக மரபுகளை ஆழமாகப் பயின்றவர். அவர், ஏசு புராணத்தை வரலாற்றுப் பார்வையில் பார்ப்பது எப்படி எதிர்மறையானது என விளக்குகிறார். கி.பி. 30 அல்லது 32-ல் நிகழ்ந்ததாகச் சொல்லப்படும் ஒரு நிகழ்வு, 2016-ல் எப்படி என்னைக் கடைத்தேற்ற இயலும்? நேரடிப் பொருளும், வரலாற்று மையப் பொருளும் கொள்பவர்களால், இந்த முரணை விளக்கவே இயலாது என்று அவர் கருதுகிறார். இதை, அக பரிமாணங்களில் புரிந்துகொள்வதால் மட்டுமே அது இயலும் என அவர் கூறுகிறார்.  உயிர்தெழுதலின் ஞாயிறு (Easter Sunday) என்பது, வார்த்தைகளைக் கைவிட்டு தன்னுள் இறை அனுபவத்தைப் பெறும் நிகழ்வாக அமைய வேண்டும் என்று கூறுகிறார்.

கன்னிக்குப் பிறந்து சிலுவையில் அறையப்பட்ட பின்னர் உயிர்த்தெழுந்த ஏசு என்பவரை, வரலாற்றுச் சத்தியமாக அப்படியே நம்பினால், அவர் கண்காட்சிகளில் நாம் காணும் இரண்டு தலை மனிதன் போன்ற ஒரு அதிசயப் பிறவி அவ்வளவுதான். அதிசய நிகழ்வுகளின் அதிசயம் என்பது, அதற்குள் அள்ள அள்ளக் குறையாமல் சுரக்கும் அகப்பொருள்தான். அதைப் பார்க்கும் ஒவ்வொரு மனிதனும், அதற்குள் தனக்கான பொருளை பெற்றுக்கொள்ள முடியும். அதிசயச் செயல்கள், ஒவ்வொரு காலகட்டத்துக்கும் அந்தக் காலகட்டத்துக்கான பொருளை அளிக்கும். …இதனைப் புரிந்துகொள்ளும்போது, ஏசு உட்கொண்ட இறுதி இராப்போஜனம் என்பது எங்கோ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பாலைவன நகர் ஒன்றில் நடந்தது அல்ல. மாறாக, இன்று இப்போது நம்முடன் நிகழ்வது.

இப்படி ஒரு அகப்பார்வையாக, ஒரு புராணமாக ஏசுவை மாற்றுவது அவசியமானதா? ஒரு வேதாந்த கிறிஸ்து என்பது தேவையான ஒன்றா எனும் கேள்வி எழலாம்.

வரலாற்று ரீதியான ஏசு, யூத இறைவாக்கினர் மரபின் முடிவாகக் கருதப்படுகிறார். இது, யூத மதத்தினருக்கு ஏற்புடையதில்லை. யூத விவிலியம், கிறிஸ்தவர்களால் ‘பழைய ஏற்பாடு’ என்றும், கிறிஸ்து குறித்த நால்வரின் நற்செய்தி (Gospel) புதிய ஏற்பாடு என்றும் கூறப்படுகிறது. வாழும் ஒரு சமயத்தவரின் புனித நூலை ‘இறைவனுடன் நீங்கள் செய்துகொண்ட ஏற்பாடு பழையதாகிவிட்டது’ எனக் கூறுவது, அவர்களின் மத நம்பிக்கையின் அடிப்படையை சீண்டும் ஒரு விஷயமாகும். அதைப்போலவே, ஏசுவை யூத மரபின் வாக்களிக்கப்பட்ட மெசியாவாகக் காட்டுவதன் விளைவாக அவரை மறுதலித்துவிட்டதாக யூதர்கள் மீது கடும் கோபத்தை கிறிஸ்தவ உலகம் கடந்த 2000 ஆண்டுகளாக அவர்கள் மீது காட்டி வந்திருக்கிறது.

Story image

ஜெர்மானிய தேவாலயம் ஒன்றில் நாசி போர்வீரர்களுடன் ஏசு

சிலுவைப்பாடுகள் என்பது சிலுவையை ஏசு சுமந்து வந்தபோது அவர் பட்ட கஷ்டங்களைக் காட்டுவது. சிலுவைப்பாடு, நாடகமாகவும் நடத்தப்படும். Passion Play என்று அழைக்கப்படும் சிலுவைப்பாடுகள், ஐரோப்பாவில் காலம் காலமாக யூதர்கள் மீதான வெறுப்பை மீண்டும் மீண்டும் உருவாக்கும் நிகழ்கலையாக நிகழ்த்தப்பட்டுள்ளன. ஐரோப்பிய நாடுகளில் நடத்தப்படும் சிலுவைப்பாடு நாடகங்களிலேயே மிகவும் பிரசித்தி பெற்றது, பவாரியாவில் ஒபரம்மெர்கவ் (Oberammergau) கிராமத்தில் நடத்தப்படும் சிலுவைப்பாடு நாடகம்தான். 1663-ல் ஏற்பட்ட பிளேக் நோயில் இருந்து இந்தக் கிராமம் அதிசயமாகக் காப்பாற்றப்பட்டதற்கு நன்றிக்கடனாக, 1664–ல் இருந்தே இந்தச் சிலுவைப்பாடு நாடகம் நடத்தப்படுகிறது. இதில் காட்டப்படும் காட்சிகளில், யூத வெறுப்பு மிக அதீதமாக வெளிப்படுகிறது எனும் குற்றச்சாட்டு, நூற்றாண்டுகளாக இருந்து வந்துள்ளது. இந்நாடகத்தைக் கண்ட அடால்ஃப் ஹிட்லர், இது யூதர்களின் உண்மை சொரூபத்தை தலைமுறைகளுக்குக் காட்டக்கூடிய ஒரு மிக நல்ல கருவி எனக் கருதினார். 2004-ல் வெளிவந்த மெல் கிப்ஸனின்  ’Passion of Christ’, யூதர்களை ரத்தவெறி கொண்ட மானுடத்தன்மையற்ற கும்பலாகக் காட்டியது.

Story image

ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் ஒருமுறை மிகுந்த வேதனையுடன் கூறினார் -  “சில சமயங்களில் ஏசு என்று ஒருவர் இல்லாமல் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று தோன்றுகிறது. அவரது பெயரைப்போல அதிகாரத்துக்காக மோசமாகப் பயன்படுத்தப்பட்ட வேறொரு பெயர் இல்லை”.

இவை எல்லாமே, ஏசுவை புராண மரபிலோ அல்லது தத்துவ அகப்பார்வையிலோ காணாமல், ஒரு வரலாற்றுப் பார்வையிலும் யூத இறைவாக்கினர் மரபிலும் பொருத்திப் பார்ப்பதால் ஏற்படுவதாகும். இரண்டாம் உலகப்போரும் யூத இனப்படுகொலையும் நிகழ்ந்த பிறகே, இந்த வரலாற்று மையப் பார்வையில் சமயக் கதையாடலைப் பார்ப்பதன் கொடுமை மேற்குக்குத் தெரியவந்தது. ஆனால், அப்படி ஒரு அகப்பார்வையைக் கொள்ளும் சாத்தியத்தை வேதாந்தம் கிறிஸ்தவத்துக்கு அளித்திருந்தது.

Story image

இந்திய ஆன்மிகக் கூட்டங்கள் சிலவற்றில், சிலுவைக்கு ஒரு அகப்பொருள் சொல்லப்படுவது உண்டு. நான் எனும் அகங்காரம் அழிக்கப்படுவதை சிலுவை காட்டுகிறது (Cross is a cut across I). ஏசு சிலுவையில் அறையப்பட்ட மலையான கல்வாரி என்பது நம் தலையைக் குறிப்பதாகவும் கூறப்படுவது உண்டு. இது, குறைந்தது பத்தொன்பதாம் நூற்றாண்டில் அமெரிக்காவில் உள்ள கிறிஸ்தவ மறைஞான மரபில் காணப்படுகிறது.

Story image

சார்லஸ் ஃபில்மோர் (Charles Fillmore, 1854-1948), கிறிஸ்தவ ஆன்மிகவியலாளர். ஒருமை கிறிஸ்தவம் (Unity Movement) எனும் இயக்கத்தை உருவாக்கியவர். ஒட்டுமொத்த விவிலியத்துக்கும் அக-பொருள் விளக்க அகராதி ஒன்றை இவர் உருவாக்கினார். ஏசு சிலுவையில் அறையப்பட்டு உயிர்த்தெழும் நிகழ்வை அக நோக்கில் காண்கிறார். இவரது பார்வையில் கோல்கோத்தா (கல்வாரி – ஏசு சிலுவையில் அறையப்பட்ட மலை), அராமிக் – ஹீப்ரூ மொழிகளில் கபாலதலம் எனச் சொல்லப்படுகிறது. இங்கு, புத்தியைத் தாண்டி ஆன்மா மேலெழும் என்பதை இது குறியீடாகக் காட்டுகிறது. மானுட சுயசங்கல்பத்தைத் தாண்டி இறை விருப்பத்துக்குத் தன்னை ஒப்புக்கொடுப்பதை இது குறிக்கிறது. மேற்கத்திய சமுதாயப் பண்பாடு, மேலும் அக பரிணாம வளர்ச்சி அடைய இந்திய சமய இலக்கியத்தைச் சென்றடைய வேண்டும் என அவர் கருதினார். ஆனால், காலப்போக்கில் இந்தியச் சமயம் குறித்த அனைத்து குறிப்புகளும் ஒருமை இயக்கத்திலிருந்து நீக்கப்பட்டன. இப்படி எல்லாம் நீக்கம் செய்யப்பட்டபோதிலும், விவேகானந்தர் கொணர்ந்த வேதாந்த தாக்கம் இந்த இயக்கத்தில் இருக்கிறது என்கிறார், அமெரிக்காவில் இந்து ஆன்மிகப் பண்பாட்டுத் தாக்கத்தை ஆவணப்படுத்தும் பிலிப் கோல்ட்பர்க்.

Story image

இதைப்போன்ற ஒரு மற்றொரு பரிமாணம் - மேரி மகதலேன். டான் ப்ரவுன் உட்பட பல மேற்கத்தியக் கதாசிரியர்களும் தொழில்முறையற்ற வரலாற்று ஆராய்ச்சியாளர்களும், ஏசுவின் மனைவியாக மகதலேனைக் கூறுகின்றனர். மேற்கத்திய கிறிஸ்தவ மரபின் ஒரு அடி ஆழமான நீரோட்டமாக மகதலேன் தொடர்ந்து இருந்து வந்திருக்கிறார். அவர் பாலியல் தொழிலாளி என்றும் அரசமரபில் வந்தவள் என்றும் கதைகள் உருவாக்கப்பட்டுள்ளன. சரித்திர ரீதியில் அவள் யார் எனக் கண்டறிய, தொடர்ந்து ஆராய்ச்சிகளும், பரபரப்பூட்டும் ‘கண்டுபிடிப்புகளும்’ நிகழ்த்தப்படுகின்றன.

இங்கும் அடிப்படையான பிரச்னை, வரலாற்றின் அடிப்படையில் மகதலேனைக் கண்டடைய முற்படுவதுதான். மகதலேன் யார்? கிறிஸ்தவ சபைகள் நடத்தும் விவாதங்களுக்கு அப்பால், மகதலேனை ஏசுவின் இணையாக முன்வைத்தவர் பாரதி.

உண்மையென்றசிலுவையிற்கட்டி

உணர்வைஆணித்தவங்கொண்டடித்தால்,

வண்மைப்பேருயிர்யேசுகிறிஸ்து

வானமேனியில்அங்குவிளங்கும்;

பெண்மைகாண்மரியாமக்தலேநா,

பேணும்நல்லறம்யேசுகிறிஸ்து;

நுண்மைகொண்டபொருளிதுகண்டீர்

ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் 13-வது துறவி சுவாமி ரங்கநாதானந்தர். ‘நாம் ஆராதிக்கும் கிறிஸ்து’ எனும் புகழ்பெற்ற உரையை அவர் ஆற்றியுள்ளார். அதில் அவர், யூத சமயத்தின் தார்மிக நெறியும், கிறிஸ்துவின் மறைஞானமும், இன்றைய அறிவியலின் பிரபஞ்ச தரிசனமும் இணைந்த ஒரு புத்துருவாக்கத்தின் தேவை கிறிஸ்தவச் சமுதாயத்துக்கு இருப்பதைச் சுட்டிக்காட்டுகிறார். அப்படி ஒரு புத்துருவாக்கத்தை வேதாந்தம்போல் அனைத்து ஆன்மிக அனுபவங்களிலும் சத்தியத்தைத் தரிசிக்கும் ஆற்றல் கொண்ட ஒரு சட்டகம் தேவை எனக் கூறுகிறார். வரலாற்று மையம் எனும் சிலுவையில் அறையப்பட்ட ஏசு, பாரத தரிசனத்தின் ஒளியில் உயிர்த்தெழ வேண்டும்.

Story image

அகத்தில் உயிர்த்தெழும் இந்த ஏசு கிறிஸ்துவில் யூத வெறுப்பு இல்லை; மதம் பரப்பும் விரிவாதிக்கம் இல்லை. மாறாக, அன்பும் அருளும் இருக்கிறது. வரலாற்று மையம் கொண்ட ஏசுவில் இருந்து பாரத தரிசனத்தில் அகத்தில் உயிர்த்தெழும் ஏசுவுக்காகக் கொண்டாடப்படும் ஈஸ்டராக இது மாறட்டும்.

மேலதிக விவரங்களுக்கு -

அரவிந்தன் நீலகண்டன், சாந்தினிதேவி ராமசாமி, இந்திய அறிதல் முறைகள், கிழக்கு பதிப்பகம், 2016.

ஆலன் வாட்ஸ், Beyond Theology- The art of Godmanship, Vintage books, 1973.

ஆவ்னர் ஃபால்க், Anti-semitism: A History and Psychoanalysis of Contemporary Hatred, Greenwood Publishing, 2008.

சார்ல்ஸ் ப்ல்மோர், Metaphysical Bible Dictionary, Dover Publication, 2013.

ப்லிப் கோல்ட்பர்க், American Veda, Harmony Books, 2010.

பாரதியார் கவிதைகள்

சுவாமி ரங்கநாதானந்தர், The Christ we Adore, Advaita Ashrama, 1991.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.