பகுதி-17 டமால்...டுமீல்...
கரப்பான் பூச்சிக்கு பயந்து புதிய மாளிகை கட்டும் துருக்கி அதிபர்.புதிய இல்லத்துக்கு மாறும்போது கரப்புகள் முன் நின்று அவரை வரவேற்கலாம்.


கரப்பான் பூச்சிக்கு பயந்து புதிய மாளிகை கட்டும் துருக்கி அதிபர்.
புதிய இல்லத்துக்கு மாறும்போது கரப்புகள் முன் நின்று அவரை வரவேற்கலாம்.
***
தேங்காய் நார் மூலம் சாலைகளை அமைத்திடலாமாம்.
மழை பெய்தால் சாலை நாறிடாதா?
***
டாக்டரை பளாரென்று அறைந்த பாடகர் மீகா சிங் கைது.
பளார் பளாரென்று அறைகள் விடப்படும் மோசமான சீரியலை 1008 தடவை தொடர்ந்து பார்க்கும்படி தண்டிக்கலாம்.
***
த்ரிஷா தமிழ்ப் பெண் இல்லையாம். கேரளக்காரியாம்.
‘விரைவில் திருமண-முண்டு’ என்று சிலேடையுடன் சொன்னாரா?
***
ஹெல்மெட் அணியாமல் டூவீலர் ஓட்டினால் லைசென்ஸ் ரத்தாகுமாம்.
காவல் துறையினர் வைர மோதிரக் கையால் குட்டு வைக்கத் தயாராக இருப்பார்களே!
***
புரோட்டா மாஸ்டருக்கு என்ஜினியரைவிட அதிகமான ரூ 18,000 சம்பளமாம்.
மாவுக்கு கை அழுத்தம் கொடுத்துக் கொடுத்து மன அழுத்தம் வந்துவிடுவதால் இருக்கும்.
***
மெட்ரோ வாட்டர் தண்ணீரைக் குடித்தால் வயிற்றுப் போக்கு ஏற்படுமாம்.
காலப்போக்கில் அது பழகி, நல்ல தண்ணீரைக் குடித்தால்தான் டாய்லட்டுக்கு ஓட வேண்டி இருக்கும்.
***
வீண் வம்பு பேசுவதால் ஆயுள் ஆதிகரிக்கிறதாம் - ஆக்ஸ்போர்ட் ஆராய்ச்சி.
இதில் கடலைபோடுவதும் உள்ளடக்கமா?
***
டாக்டர்கள் இனி மருந்துச் சீட்டுகளில் பெரிய எழுத்தில் எழுதணுமாம்.
மனைவிக்கு எழுதும் கடிதங்களில் கூடத்தானே?
***
சவுதியில் குத்தாட்டம் போட்டால் தண்டனையாக ஐந்து சவக்குழிகள் தோண்ட வேணுமாம்.
அந்தக் குழிகளில் அடக்கம் செய்ய ஆள்களையும் தேடித் தரவேண்டுமா?
***
சீனாவில் மாணவிகள் உபயோகித்த பழைய மெத்தைகளை வாங்க போட்டி.
இணைப்பாக அவர்கள் கண்ட கனவுகளும் வருமே என்று ஆசைப்படலாம்.
***
ஏர் இந்தியா வழங்கிய விமான உணவில் பல்லி இருந்ததாம்.
சிக்கன நடவடிக்கை காரணமாக பல்லி. இல்லாதிருந்தால் மூஞ்சூராக இருந்திருக்கும்.
***
இளம் பெண்கள் உடன் பணியில் இருப்பது தடுமாற்றத்தைக் கொடுக்கிறது — நோபல் பரிசு பெற்ற பிரிட்டிஷ் பேராசிரியர்.
பல வருடங்கள் ஒற்றைக்காலிலே நின்று தவம் செய்த விஸ்வாமித்திரர்களே சறுக்கி விழுந்தபோது பேராசிரியர்கள் எம்மாத்திரம்?

***
19 வயதான செல்ல ஆமையுடன் தினம் வாக்கிங் போகும் ஜப்பானியர்.
ஆகா மெல்ல நட, மெல்ல நட மேனி என்னாகும். முல்லை மலர்ப் பாதம் நோகும் என்று பாடிக் கொண்டு போனால் பொருத்தமாக இருக்கும்.
***
நெஞ்சு வலி வருவதற்கு பல காரணங்கள் உண்டாம்.
பிரபலங்களுக்கு கைது செய்யப்பட்ட உடனே திடீரென்று வந்துவிடும்.
***
கையால் இடுப்பைச் சுற்றி தொப்புளைத் தொட்டு கலக்கும் சீனப் பெண்கள்.
சிறிய இஞ்சி இடுப்பழகிகளால்தான் இதைச் செய்ய முடியும் அல்லவா?
***
வீரப்ப மொய்லி எழுதிய ராமாயணம் பற்றிய புத்தகம் அவர் எழுதியதா என்று காங்கிரசாரே சந்தேகிக்கிறார்கள்.
யார் எழுதியது என்ற சர்ச்சையில் ஷேக்ஸ்பியர் லெவலுக்கு உயர்ந்து விட்டதாக மொய்லி மகிழலாம்.
***
எழுத்தாளர் தேவனின் ‘ராஜத்தின் மனோரதம்’ நாவலின் 16 அத்தியாயங்களின் தலைப்புகளில் தெரிந்தது, தெரியாது, தெரிகிறது போன்ற வார்த்தைகள் இடம்பெறுகின்றன.
இந்த தகவல் பல தீவிர தேவனின் வாசகர்களுக்கே தெரியுமோ, தெரியாதோ என்று தெரியாது.
***
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...