16. மூளைக்குள் பயணம்
2013 ஆண்டில் மட்டும் 69 லட்சம் வெளிநாட்டவர்கள் இந்தியாவிற்கு வந்திருக்கிறார்கள். இந்தியா வந்தவர்கள் எந்த இடங்களுக்குப்



2013 ஆண்டில் மட்டும் 69 லட்சம் வெளிநாட்டவர்கள் இந்தியாவிற்கு வந்திருக்கிறார்கள். இந்தியா வந்தவர்கள் எந்த இடங்களுக்குப் போயிருப்பார்கள்? வியாபாரம் தொழில் நிமித்தமாக வந்தவர்கள் புதுதில்லி, மும்பை, சென்னை பெங்களுரு போன்ற பெருநகரங்களுக்குப் போயிருப்பார்கள்.
சுற்றுலா வந்தவர்கள்?
இந்தியாவில் அதிகநேரமும் அதிகப் பணமும் செலவு செய்யத் திட்டமிடாத சுற்றுலாவாசிகள், இந்தியா என்றால் தாஜ்மஹால் என்று முடிவு செய்துவிட்டு வந்திருப்பார்கள். புதுதில்லி வந்து அங்கிருந்து ஆக்ரா போய் தாஜ்மஹாலைப் பார்த்துவிட்டு அங்கிருந்து தாய்லாந்து அல்லது மலேஷியா சிங்கப்பூர் என்றுஅவர்களுடைய சுற்றுலாவைத் தொடர்ந்திருப்பார்கள்.

நம்மூரில் இருந்து ஐரோப்பா சுற்றுலா அழைத்துச் செல்பவர்கள் செய்வதும் இப்படித்தானே.பதினான்கு நாள் சுற்றுலா. இங்கிலாந்து என்றால் லண்டன், பிரான்ஸ் என்றால் பாரீஸ். அதிலும் அருங்காட்சியகமும் ஈபிள் கோபுரமும். சுவிஸ்சர்லாந்து என்றால் டிட்லிஸ் மலை. இத்தாலியில் பைசா கோபுரம். மொத்தத்தில் ஒரு நாட்டில் ஒரு இடம், அல்லது இரண்டு இடம்.அவ்வளவுதான். ‘ஐரோப்பா டூர்’ முடிந்தது.
இவற்றை மட்டும் பார்த்துவிட்டு ஐரோப்பாவையே சுற்றிப் பார்த்ததாக நினைக்க முடியுமா? அவ்வளவுதானா ஐரோப்பாவில் இருக்கிறது!
தாஜ்மஹால் மட்டுமா இந்தியா? கூடுதலாக நாட்கள் சுற்றுபவர்கள் ராஜஸ்தான் போவார்கள். இன்னும் சிலர் அஜந்தா குகை. அவர்களிலும் தென் இந்தியா வரும் வெளிநாட்டு சுற்றுலாவினர் எண்ணிக்கை குறைவாக இருக்கும். அப்படி இந்தியா வருபவர்கள் எந்த இடங்களுக்குப் போவார்கள்?
சென்னை, சென்னை அருகே மஹாபலிபுரம் அல்லது காஞ்சிபுரம். மேலும் நாட்கள் கூடுதலாக இருந்தால் மதுரை. அதன்பின்தான் சிதம்பரம் அல்லது தஞ்சாவூர் .
தமிழ்நாட்டில் இவ்வளவுதான் இருக்கிறதா?
அதிக நாட்கள் எடுத்துக்கொண்டு, விமானம் இல்லாமல் , கார்களிலேயே அல்லது வேன்களில் பயணம் செய்யத் தயார் என்றால், வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம், செட்டிநாட்டு வீடுகள், ராமேஸ்வரம் கோவில் போன்ற இன்னும் எவ்வளவு அழகான மற்றும் வரலாற்று முக்கியதுவம் வாய்ந்த இடங்களைப் தமிழ் நாட்டிற்குள் பிரயாணம் செய்து, பார்க்க முடியும்!

ஆக, அவரவர் செய்யும் பயணம் பொறுத்து அவர்கள் காண்பவை அமையும். மேலோட்டமாகப் பார்ப்பது ஒரு வகை. அதிக எண்ணிக்கையிலான நாடுகள் போகலாம். ஆனால் அந்த நாடுகளின் உள்ளே போய், ஒரு குறிபிட்ட விஷயம் குறித்து முழுவதும் தெரிந்துகொள்ளுவது என்பது வேறுவிதமான பயணம். அதற்கான பாதை வேறுவிதமானது. அப்படி வருகிற சுற்றுலாவாசிளும் உண்டு. அவர்கள் செய்வது.. ஒரு வகையில் பார்த்தால் ’விவரமான’ அதாவது ’டீடெயில்டு’ பார்வை அல்லது தேடல்.
மேலோட்டமாகவோ, உள் புகுந்தோ.. இவையெல்லாம் நாடுகள் ஊர் சுற்றிப் பார்க்க விரும்புகிற மனிதர்கள் மேற்கொள்ளும் பயணம்.
*
ஒரு ஆங்கிலப்படம். பெயர் நினைவில்லை. சில ஆண்டுகளுக்கு முன் ஒரு விமானப் பயணத்தில் பார்த்தது. அப்பா, அம்மா, மகள். வெளியூரில் இருந்த மகள் ஒருநாள் புதியவன் ஒருவனை வீட்டிற்கு அழைத்து வந்து பெற்றோருக்கு அறிமுகப்படுத்துவாள். நண்பனா, காதலானா என்றெல்லாம் அப்பாவிற்குத் தெரியாது, கேட்கவும் மாட்டார்.
அறிமுகத்தின் போது, நீ என்ன செய்துகொண்டிருக்கிறாய் அல்லது என்ன செய்திருக்கிறாய் என்பது போல அவர் கேட்பார். அதற்கு அந்த இளைஞன் சொல்லுவான், ”நான் அதிக பிரயாணம் செய்திருக்கிறேன்” என்பது போல.
‘அப்படியா! எங்கெல்லாம்?’ என்பார் அவர் ஆர்வத்துடன்.
அவன், தன் தலையையில் ஒரு விரலை மட்டும் வைத்து .. ‘உள்ளே’ என்பதுபோல பதில் சொல்லுவான்.
அட! அவன் பயணித்தது உள்ளே, அவன் மனதிற்குள். மூளைக்குள்.
வித்தியாசமாக இல்லை?
விவேகானந்தர் சொன்னது உள்ளே இருப்பது ஒரு நூல் நிலையம், நூற்களஞ்சியம் என்பது போல, இவன் சொல்லுவது, அவனது மனதே ஒரு உலகம் போல. அதனுள் அவனுடைய பயணம். அதில் நெடுந்தொலைவு!
ஒரு நாட்டில், ஒரு ஊரில் இருக்கும் ஒரே ஒரு புராதான அல்லது முக்கிய இடத்தை மட்டும் சுற்றுலா வந்தவர்கள் பார்ப்பது ஒரு வகை. ஒரு குறிபிட்ட இடத்தைத் தேடி, அங்கு பலரும் போகாவிட்டாலும், அங்கு போவதற்கு வசதி வாய்ப்புகள் குறைவாக இருந்தாலும் சிரமம் எடுத்துப் போய்ப் பார்ப்பது, அங்கு கூடுதல் நெரம் செலவு செய்வது வேறு ஒரு வகை.
இந்த பிரயாணங்களுக்கும், மனிதர்கள் சிந்தனை செய்வதற்கும் ஒருவிதத்தில் ஒற்றுமை இருப்பது கவனிக்க முடிகிறதா?
சிலர் எதையும் மேலோட்டமாக சிந்திப்பவர்கள். அதிக முயற்சி எடுக்க மாட்டார்கள். அது தாஜ்மஹால் பார்ப்பது போல. வேறு சிலர், அதிகம் நபர்கள் யோசிக்காதன பற்றி, அதற்குமுன் எவரும் அறிந்து சொல்லாதன பற்றி யோசிப்பார்கள். ஆராய்வார்கள். அறிந்து சொல்வார்கள். அவர்கள் எடுத்து வருவது. அவர்கள் மனதில் இருந்து மூளையில் இருந்து .
கொல்ம்பஸ் சும், வாஸ்கோட காமாவும், டென்சிங்கும் , எட்மெண்ட் ஹில்லாரியும் செய்தவை ஒருவிதமான தேடல்; ஒருவகையான பயணம். உலகில் அவர்கள் செய்த பயணம். வெளியில் செய்த தேடல்.
ஐன்ஸ்டைனும், எடிசனும், சி.வி ராமனும், ஹோமி பாபாவும், ராமனுஜமும், செய்த பயணங்கள் வேறு வகையானவை. அவர்கள் தேடியதும் பயணித்ததும் வெளியே அல்ல, உள்ளே.

உள்ளேபயணிப்பதுஎன்றால்என்ன, எப்படி?
ஐன்ஸ்டைன் சொன்னது நினைவிருக்கலாம். நான் ஒன்றைப் பற்றி அதிக நேரம் சிந்திக்கிறேன்.
ஒன்றைப் பற்றி தொடர்ந்து சிந்திப்பதுதான் அதில்‘ பயணம்’ செய்வது.
எலிக்டிரிக் பல்பைக் கண்டுபிடிக்க எடிசன்அந்தத் திசையில் வெகுதூரம் பயணித்திருக்கிறார். கிடைக்கப் பெற்றார்.
விஞ்ஞானம் என்றில்லை. எந்தத் துறையில் பாண்டித்தியம் பெறுவதற்கும் செய்யவேண்டியது அதைப்பற்றி அதிக நேரம் சிந்திப்பது. அதைப்பற்றித் தெரிந்து கொள்ளுவது, அதைப்பற்றி தொடர்ந்து சிந்திப்பது.
மூளையின் அமைப்பில் வேறுபாடில்லை என்பதை ஏற்கனவே ஐன்ஸ்டைனின் மூளையை ஆராய்ந்தவர்களை வைத்துப் பார்த்துவிட்டோம். ஆக, கண்டிப்பாக வேறுபாடு பயன்படுத்துவதிலேதான்.
மண்புழு தரையை நிமிண்டிநிமிண்டி உள்ளே நுழைவதுபோல, கிணறு வெட்டுபவர் தொடர்ந்து ஒரே இடத்தில் அகழ்வதுபோல.. எடுத்துக் கொண்டதைப் பற்றித் தொடர்ந்து யோசித்தல்தான் பயணம்.

தொடர்ந்து ஒரே விஷயம் பற்ற ிசிந்திப்பது மூளையில் உள்நுழைவதுபோல. சிலர் இந்தப் பயணம் மேற்கொள்ளுவதே இல்லை. சோம்பல் கொண்டு, எவர் முதுகிலாவது ஏறிக் கொள்கிறார்கள்.
’எவர் முதுகிலாவது ஏறிக்கொள்வது’ என்றால், புரிந்து கொள்ள முயற்சிப்பது இல்லை.
தேவை முயற்சி மட்டுமே. செய்தவர்கள் நுழைகிறார்கள். அவர்கள் மூளை உழப்படுகிறது.
அதனால் அங்கே விளைச்சல் சாத்தியமாகிறது.
நிலத்தில் பழுதில்லை. உழுபவன் முயற்சியில் இருக்கிறது விளைச்சல்.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...