

வாசலில் இருந்த காவலாளி சட்டென எழுந்தான். யாரோ அல்லது எதுவோ வருவது போல் சலசலப்பு. கையில் இருந்த துப்பாக்கியை இறுகப்பற்றினான். ‘ஓராள்’ என்ற குரலில் நிதானித்தான்.
‘யாரு?’
‘முத்துராசா. மத்த ஆளுங்க எங்க? தொரையம்மாவுக்கு என்ன?’
காவலன் எதுவும் பதில் சொல்லுமுன்னே, முத்துராசா அவனைத் தாண்டியிருந்த்தை உணர்ந்தான். முத்தாயி வாசலை நோக்கி விரைந்தாள்.
‘அண்ணே, உனக்கு ஒண்ணுமில்லயே?’ அவனைக் கட்டிக்கொண்டு அழத் தொடங்கினாள்.
‘தொரயம்மாவுக்கு என்னாச்சி?’
‘ஆனியம்மாவுக்கு ஒண்ணுமாகலே. எப்பவும் வர்ற மூச்சுமுட்டல். அதான் துளசி கஷாயம் கொடுத்து...’
‘அப்ப ஏன் என்னை உடனே வரச்சொல்லி ஆள அனுப்பிச்ச?’
முத்தாயி திகைத்தாள். உள்ளிருந்த ஆனி, நடந்த உரையாடலை ஓரளவு புரிந்துகொண்டாள்.
‘தொரை தனியா..’ முத்துராசாவின் நினைவுகள் தாவியோடத் தொடங்கின. ஏதோ சூது நடந்திருக்கிறது. இருந்த மூன்று பேரில் நமது ஆட்கள் இருவரையும் காட்டுக்குள் அனுப்பி விட்டு, குழுவினை அறியாக் காவல்காரனை மட்டும் இங்கு விட்டுவைத்துவிட்டு...
ஆனி கீழுதட்டைக் கடித்தாள் ‘ஆண்டர்ஸனைத் தனியாக..’
முத்துராசா அவளது கண்களைக் கவனித்தான். சற்றே நீல நிறம் கொண்ட அக்கண்கள், விறகின் செந்தழலில் அசாதாரணமாக ஒளிர்ந்தன.
‘ஆண்டர்ஸன்..’ என்றாள் அவள்.. அவன் தலையசைத்து ஆமோதித்தான்.
ஆனி, சற்றே பின்னோக்கி சாய்ந்து வாசலைப் பார்த்தாள். இருள் பழகியிருந்ததால், அங்கு இருப்பவனின் நிழலுருவம் தெரிந்தது. முத்தாயியை தோளில் தொட்டு, தன்னருகே வருமாறு மிக மெல்லிய குரலில் அழைத்தாள்.
‘ஏன் அழுதாய்? என்பதாக உள்ளங்கையை விரித்துக் கேட்டாள். முத்தாயி, சுற்றுமுற்றும் பார்த்து, ஒரு காகிதத்தில் வரைந்தாள். ஆனி, அதனை சற்றே சிரமத்துடன், பார்க்க முயல, முத்தாயி, தழல் கொண்ட ஒரு விறகை எடுத்து அவளருகே உயர்த்திப் பிடித்தாள். கோட்டுருவங்கள், காடு, புதர்கள்... புதர்களின் இடையே ஆங்கிலேயன் ஒருவன், அருகே வேட்டியைத் தார்ப்பாய்ச்சிக் கட்டியவன், புதர்களின் பல இடங்களில், துப்பாக்கி முனைகளும், வாள்களும் நீட்டியிருக்க, பலர் மறைந்திருப்பதாக காட்சி..
மற்றொரு காகிதத்தில் அதற்குள் முத்தாயி வரைந்து வைத்திருந்த மற்றொரு ஓவியத்தை நீட்டினாள். ஆனியும், அவளுமாக இருந்த இடம்.. இரு வீரர்கள் அங்கிருந்து காட்டுக்குள் விரைவதாகவும், அவர்கள் குறி வைப்பது ஆங்கிலேயன் அருகிருந்தவனை என்பது போலவும்...
ஆண்டர்ஸன் ஆபத்திலிருக்கிறான். தனியான இரையையே விலங்குகள் நாடும். மறைந்திருந்து தாக்க முனையும்.
ஆனி எழுந்தாள். வாசலை எட்டிப் பார்த்தாள். அந்த காவலன், அங்கே அசையாது சாய்ந்திருந்தான். ‘முத்தாயி, நீ இங்கேயே இரு.’ என்று சைகை காட்டிவிட்டு, பின்புறமாகச் செல்ல எத்தனித்தாள். முத்தாயியின் கண்கள் பயத்தில் விரிந்தன. ‘அம்மா, வேணாம்’ என்பதாக தலையசைத்து மறுத்தவளை ஆனி அடக்கினாள். ‘நீ இங்க இருக்கறவரை இவன் சந்தேகப்படமாட்டான். சீக்கிரம் வந்துருவேன்’
‘இவர்களை வரவேண்டாம்னு சொல்லு பிள்ளே’ என்றான் முத்துராசா. ‘காடு ஆபத்து. அதுவும் இருட்டுல, மழையில, எப்ப வேணுமானலும் எதுவும் நடக்கும். வேணாம்.’
ஆனி ‘எனக்கு வேட்டை பழக்கம். அதோடு, இப்ப ஆண்டர்ஸன் இருக்கிற நிலையில், நான் வருவது நல்லது. ஒரு கைக்கு இரண்டு கைகள் நல்லது எனச் சொல், முத்தாயி’.
முத்துராசா தலையை அசைத்து மறுத்தான். இவளைத் தடுக்கும் அதிகாரம் எனக்கில்லை. ஆனால், அவளுக்கும், ஆண்டர்ஸனுக்கும் ஆபத்து என்பதைச் சொல்வதும் , அவர்களைக் காப்பதும் என் கடமை.
ஆனி, வெல்வெட்டுப் பை தோளில் தொங்க பின்பக்கக் கதவை மெல்லத் திறந்து வெளியேறினாள். ஒரு கணம் திகைத்து , முத்துராசா அவளைப் பின் தொடர்ந்தான். திரும்பிப் பாராமல் நடந்த ஆனியின் தோளில் தொங்கிய பைக்குள் கை நுழைத்தாள். அதனுள் ஆறு தோட்டாக்களை உள்ளடக்கியபடி தலைகுப்புறக் கிடந்த, வெப்லி 4 கைத்துப்ப்பாக்கியை அவளது மெல்லிய விரல்கள் உறுதியாகப் பற்றியிருந்தன.
ஆனி, வலப்புறம் திரும்பி, சப்தமின்றி சில அடிகள் நடந்து, மீண்டும் வலப்புறம் திரும்பி சாலையைக் கடந்து, மறுபுறம் காட்டில் மறைந்தாள். வீட்டினுள், முத்தாயி, வாசலில் இருப்பவனுக்கு சந்தேகம் வராமலிருக்க, இல்லாத ஆனியுடன் பொய்யுரையாடலில் ஈடுபட்டிருந்தாள்.
சுவர்க்கோழிகளின் சப்தம் அதிகமாக கேட்டிருந்தது.
ஆனியின் மூச்சுத் திணறல் குறைந்திருந்தது. வேட்டையில், தடங்களுக்கு மட்டுமல்ல, உள்ளுணர்வுகளுக்கும் மதிப்பு அதிகம். சில நேரங்களில் மனித மூளையின் தர்க்கப் பாதையை விடுத்து, புராதன விலங்கின் உள்ளுணர்வுகளை முன்னிறுத்துவது அவசியம் - முக்கியமாக, ஆபத்து காலங்களில்...

ஆனியின் அருகே சருகுளில் மீது மெல்லிய காலடியோசைகள்...வேகமாக நடந்த ஆனியின் கையில் முத்துராசாவின் சில்லிட்ட கத்தி நுனி பட, அவள் வேகம் குறைத்தாள். அவன் முன்னேறி, வலது பக்கமாகத் திரும்ப, அவள் பின் தொடர்ந்தாள். அவன் சில மரங்களை அடையாளமாக வைத்து பாதை மாறி சிறிது நேரத்தில் ஒரு பாறையை அடைந்தனர். செங்குத்தாக நின்றிருந்த அதன் இடப்புறமாகத் திரும்பியவன், மிக மெதுவாக நகர்ந்தான். பாயப்போகும் விலங்குகள் பதுங்குவதற்கும், தன் இரையைக் கவனிக்கும் விலங்குக்கும், பதுங்கும் விதத்தில் வேறுபாடு உண்டு. அவள் அதனை அறிவாள்.
இது கவனிக்கும் விலங்கு. எதைக் கவனிக்கிறான்? ஆனி, அவன் அருகில் பதுங்கினாள். முன்னே இருளில் மரங்களின் நடுவே இருவர் மறைந்து நிற்பது போல் தோன்றியது. கண்கள் இருளுக்குப் பழகியிருந்தாலும், மரம், மனிதன் வேறுபாடு அத்தனை எளிதல்ல.
முத்துராசாவின் இடது கை, அடங்கச் சொல்வது போல் பக்கவாட்டில் உயர்ந்தது. அவளது இடதுபுறம் சற்றுத் தொலைவில் தீப்பந்தங்கள் தோன்றின. கண்களைச் சுருக்கிப் பார்த்ததில் ஒருவன் முகம் தீப்பந்த ஒளியில் சரேலெனத் தெளிவாகத் தோன்றி மறைந்த்து.
சபாபதி.
தொடரும்…
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெக

பாலஸ்தீனத்துக்கு விடுதலை வேண்டும்..! ஆஸ்கர் மேடையில் ஹாலிவுட் நடிகரின் பேச்சு!

அமலுக்கு வந்த தேர்தல் நடத்தை விதிகள்! விளம்பரங்கள் மீது பெயிண்ட் அடிக்கும் பணி தீவிரம்!

துபையில் டிரோன் தாக்குதல்: விமானப் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தம்!
வீடியோக்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

சுல்தான் பாடல் வெளியானது!
தினமணி வீடியோ செய்தி...

போரால் ஏற்பட்ட பாதிப்புகள் அண்ணாமலைக்குத் தெரியவில்லை: திருமா! | VCK | BJP
தினமணி வீடியோ செய்தி...

